இதுவரை யாரும் தொட்டுப்பார்க்காத சிகரத்திற்குப் பெயர் 'கலாம்'

0

இமயமலையின் ஸ்பிட்டி வேலியில் (Spiti valley) இதுவரை யாரும் தொடாத சிகரம் ஒன்றிற்கு கலாம் என்று பெயர் வைத்திருக்கின்றனர் இரண்டு மலையேற்ற வீரர்கள். அர்ஜூன் வாஜ்பாய், பூபேஷ்குமார் என்ற அந்த இளம் மலையேற்ற வீரர்கள் இமயமலையில் 6 ஆயிரத்து 180 அடி உயரத்தில் இருக்கும் அந்த சிகரத்தை சமீபத்தில் தொட்டனர். அந்த சிகரத்திற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பெயரைச் சூட்டினர். அர்ஜூன் வாஜ்பாய் உத்தரப் பிரதேச மாநிலம் நோடியாவைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 22தான். 2010 மே மாதத்தில் தனது 16வது வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர் அவர். இளம் வயதில் எவரெஸ்ட்டைத் தொட்ட மூன்றாவது சாதனையாளர். பூபேஷ்குமார் அதே மாநிலத்தைச் சேர்ந்த பூலந்த்ஷாரைச் சேர்ந்தவர். இதுவரையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மலைகளின் 17 சிகரங்களைத் தொட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். எவரெஸ்ட் போன்ற எல்லோரும் செல்லும் சிகரங்களை விட யாரும் இதுவரையில் தொட்டுப் பார்க்காத சிகரங்களைத் தொடுவதுதான் இவர்களின் விருப்பம்.

இந்தியாவில் இதுவரை யாரும் தொடாத 6 ஆயிரத்திற்கும் மேல் உயரமுடைய மலை உச்சிகள் 300 இருக்கிறது என்கிறார் அர்ஜூன். இது போன்ற மலையேற்றப் பயணங்கள் இளம் மலையேற்ற வீரர்களுக்கு ஊக்கமூட்டக் கூடியதாக அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர். டிஎன்ஏவுக்கு அர்ஜூன் அளித்த பேட்டி ஒன்றில், “பிரபலமான அல்லது தெரிந்த சிகரங்களை நோக்கிச் செல்வதைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர். நம் நாட்டில் யாரும் அறியாத மலைகள் நிறைய உள்ளன. புத்தம்புது மலைச் சிகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு புதிய போக்கை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம்” என்றார்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், “அடர்த்தியான பனி, மறைந்திருக்கும் பனிப் பிளவுகள், யாரும் பார்க்காமல் விடப்பட்ட பாறைகள் என அந்த மலைப்பாதையே ஒரு சவால்தான். உறைய வைக்கும் குளிராக அந்த பயணம் கடினமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் அதை வெற்றி கொண்டோம்” என்று பெருமிதப்பட்டார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய பனிப் பாறையான பாரா சிக்ரி பனிப் பாறைப் பக்கத்தில் அமைந்துள்ள அந்தச் சிகரம் தற்போது கலாம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஆக்கம் : திங்க் சேஞ்ச் இண்டியா | தமிழிலில் : சிவா தமிழ்ச்செல்வா