தொழிலுக்கு உகந்த சூழலை உருவாக்கும் இந்தியா!

0

டெல்லியில் கடந்த வாரம் நடந்த ஸ்டார்ட் அப் இண்டியா நிகழ்ச்சியின் போது அரசு அதிகாரிகள் குழு ஒன்று தொழில் முனைவோரைக் கூட்டியது. தொழில் முனைவோரிடம் இருந்து அரசு எதிர்பார்ப்பது என்ன? எதைச் செய்தால் தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலைகளை அரசு உருவாக்க முடியும் போன்றவற்றை விளக்குவதுதான் அந்தக் கூட்டத்தின் நோக்கம். வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். இந்தியாவை அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு உந்தித் தள்ள வேண்டும். தொழில் முனைவோரிடம் அரசுத் தரப்பு எதிர்பார்ப்பது இவற்றைத்தான். ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது அரசின் கொள்கை வரையறைகள், சட்டதிட்டங்கள், வரி, பதிவு செய்வது உள்ளிட்ட விஷயங்களுக்கு ஆகும் கால அவகாசம் என்று பலவிதமான சவால்களைச் சந்திக்கும் சக்கரவியூகத்தில் மாட்டிக் கொள்வதற்குச் சமம்.

ஸ்டார்ட் அப் இண்டியா, புதுடெல்லி
ஸ்டார்ட் அப் இண்டியா, புதுடெல்லி

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறையின் செயலாளர் ஜே.எஸ்.தீபக்,

“வரி, அரசுடன் இணக்கம் போன்ற விஷயங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் ஒரு சில சிக்கல்களைச் சந்திக்கும் அதே சமயத்தில் ஆரம்ப முதலீடு, நிதி, வழிகாட்டல் என்று புதிய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் விஷயங்களும் உள்ளன” என்று கூறினார்.

கார்ப்பரேட் விவகாரத்துறைச் செயலாளர் தப்பான் ரே கூறுகையில், “ஒரு நிறுவனத்தை பதிவு செய்வதை சிறப்பாகச் செய்ய வேண்டியிருக்கிறது. 39 விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. எனினும் 24 மணி நேரத்தில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான புதிய திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறோம்” என்றார்.

திறன் வரைவுத் திட்டத்தின் கீழ் 652 மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்த விபரங்களை மத்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் தயார் செய்திருப்பதாக அந்தத் துறையின் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார். அவரது கூற்றுப்படி, இந்த விபரங்கள் தொழில் முனைவோருக்கு அவர்களின் தேவைக்கேற்ப தங்களது தொழிலைத் தொடங்க உகந்த இடத்தைத் தேர்வு செய்ய உதவும்.

“நீங்களே உங்களைத் துயரத்தில் ஆழ்த்தாத வரையில், வேறு யாரும் உங்களைத் துயரத்தில் ஆழ்த்தி விட முடியாது. உங்கள் பிரச்சனைகள் குறித்து தெளிவாகப் பேசுங்கள். உங்களுக்கு அதற்கான விடை கிடைக்கும்” என ஆலோசனை கூறினார் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை செயலாளர் டாக்டர் அனுப் கே.பூஜாரி.

கடுமையான வரன்முறைப் பட்டியலில் சிக்கிக் கொள்வதைத் தடுக்க புதிய தொழில் நிறுவனங்களுக்கு சந்தை ஒழுங்கமைப்பான செபி(SEBI) கடந்த ஆண்டு ஜூனில் இ-ஐபிஓ (e-IPO) சிஸ்டத்தை அறிவித்தது. அந்தத் திட்டம் ஆன்லைனில் முதலீட்டாளர்கள் வர வகை செய்கிறது. மேலும் இது எளிதான விதிமுறைகளின் கீழ், நிதி திரட்டவும், பங்குகளை வெளியிடவும் புதிய தொழில் நிறுவனங்களுக்கென்று பிரத்யேக வழிகள் உருவாக்கித் தரும்.

புதிய தொழில் நிறுவனங்களுக்கான புதிய சீர்திருத்தங்கள் அடிப்படையில், முதலீடு திரட்டும் மாற்றுத் தளம் (Alternate Capital Raising Platform) ஒன்றை செபி வழங்க இருக்கிறது. இதன் மூலம் முதலீட்டு அமைப்புகள் மற்றும் முதலீட்டுச் சந்தையில் உள்ள தனி நபர்கள் மூலம் புதிய நிறுவனங்கள் நிதி திரட்ட முடியும்.

செபியின் உறுப்பினர் பிரசாந்த் சரண் கூறுகையில், ‘தனியார் ஈக்விட்டி பண்ட்’டின் ஆதரவில் உள்ள அமைப்பு செபி என்று தெரிவித்ததோடு, புதிய தொழில் நிறுவனங்களுக்கான விரிவான விதிமுறைகளை செபி உருவாக்கியிருப்பதாகவும் கூறினார்.

தொழில் முனைவில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை செயலாளர் அசுதோஷ் ஷர்மா,

“புதிய தொழில் நிறுவனங்களுக்கு உதவும் 70 டெக் இன்குபேட்டர்களுடன் இணைந்து நாங்கள் தற்போது பணியாற்றி வருகிறோம். அவர்களின் உதவியுடன் பள்ளிகள், கல்லூரிகள், ஐஐடி மற்றும் இன்னும் பல கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புகிறோம். ஆலோசனைகள் நல்லதா எனக் கணக்கிட உதவும் வகையில் அதிக சவால் நிறைந்த உயர் விளையாட்டு திட்டத்தையும் தொடங்கியிருக்கிறோம்.”

புதிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள தடைகள் அனைத்தையும் நீக்க இந்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தொழில் நடத்துவதற்கு உகந்த திட்டங்களை அரசு கைவசம் வைத்துள்ளது எனும் விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்தத் தருணத்தில் அது முக்கியமானது. அரசு தயாராயிருப்பது குறித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு இப்போது கூட விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறது.

ஆக்கம்: அபராஜிதா சவுத்ரி | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா