24 மணி நேரமும் கொழுக்கட்டை தரும் ஏடிஎம்...! 

0

விநாயக சதுர்த்தி இந்தியா முழுவதும் பல இடங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் முக்கிய பண்டிகை. குறிப்பாக வட மாநிலங்கள் மிக கோலாகலமாக வாரக் கணக்கில் இப்பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு பல புதுமையான வழிகளில் விநாயகர் சிலையை செய்து தரிசிப்பது உண்டு. ஆனால் புனேவைச் சேர்ந்த ஒருவர் ஒரு படி மேலே சென்று கொழுக்கட்டை தரும் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளார்.

இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புனே சாஹாகர் நகரில் கொழுக்கட்டை தரும் நவீன இயந்திரத்தை சஞ்சீவ் குல்கர்னி என்பவர் அமைத்துள்ளார். பணம் தரும் ஏடிஎம் இயந்திரம் போல் அமைந்திருக்கும் இந்த இயந்திரத்தில் ஏடிஎம் கார்ட் போல் உள்ள பிரத்தியேக அட்டையை செலுத்தினால் சுத்தமாக பேக் செயப்பட்ட கொழுக்கட்டை பிரசாதம் வெளியே வருகிறது.

“இதுவும் ஏடிஎம் தான் – எனி டைம் போதக் (கொழுக்கட்டை) இயந்திரம். கலாச்சாரத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் ஒன்று சேர உருவாக்கப்பட்டதே இந்த இயந்திரம்,”

என்கிறார் இதை நிறுவிய சஞ்சீவ் குல்கரனி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்.  ஏடிஎம் இயந்திரம் போல் காட்சியளிக்கும் இந்த இயந்திரத்தில் மானிட்டர் இருக்கும் இடத்தில் விநாயகர் சிலையும், ஏடிஎம் போலவே மற்ற அனைத்து பொத்தான்களும் இருக்கிறது. ஆனால் பொத்தான்களில் எண்களுக்கு பதிலாக மன்னிப்பு, பக்தி, பாசம், அமைதி, அறிவு மற்றும் தொண்டு என்று எழுதி இருக்கிறது.

சஞ்சீவ் குல்கர்னி
சஞ்சீவ் குல்கர்னி

இந்த இயந்திரத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவ மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை ஈர்த்துள்ளத்து. மேலும் இது போன்ற இயந்திரத்தை தேவையான மற்ற பொருட்களுக்கும் நிறுவலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: டெக்கன் கிரானிக்கல்

Related Stories

Stories by YS TEAM TAMIL