டிஜிட்டல் இதழியலின் வாய்ப்புகளும், சவால்களும்; ஆர்வத்தை தூண்டிய பயிலரங்கு!

0

நவீன தொழில்நுட்பம் எல்லாத் துறைகள் மீதும் தாக்கத்தை செலுத்தி, அவற்றை மாற்றத்திற்கு உள்ளாக்குவதுடன் மேம்படுத்தியும் வருகிறது. மற்ற துறைகளை விட இதழியலில் இந்த மாற்றத்தை தீவிரமாகவே உணரலாம். செய்தி சேகரிப்பு, வெளியீடு என எல்லாவற்றிலும் டிஜிட்டல் சாதனங்களையும், போக்குகளையும் பயன்படுத்திக்கொள்வதில் முன்னிற்கும் ஊடகம் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றி புதுப்பித்துக்கொண்டு வருகிறது.

இந்த பின்னணியில் டிஜிட்டல் இதழியலின் அடிப்படைகள் குறித்து விவாதிக்கும் வகையிலான பயிலரங்கை சென்னை ஐஐடி வளாகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி, 'இந்திய டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் சங்கம்' (Digital Journalists Association of India- DiJAI) நடத்தியது. டிஜிட்டல் யுகத்தில் இதழாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சங்கத்தின் முதல் நிகழ்ச்சியாக இது அமைந்தது.

டிஜாய் தலைவர் பாரதி தமிழன் வரவேற்புரை நிகழ்த்தும் போது, அச்சு ஊடகத்தில் இருந்து வெகுவாக முன்னேறி வந்துள்ள இதழியல் துறை டிஜிட்டல் யுகத்தில் செயல்படும் விதம் பற்றி குறிப்பிட்டார். அறிமுக உரை நிகழ்த்திய ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப நிறுவனங்கள் மாறுவதன் அவசியத்தை குறிப்பிட்டு, தான் பொறுப்பு வகிக்கும் அரசு அமைப்பான பூம்புகார் நிறுவனம், இளைய தலைமுறையை கவரும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தி பயனடைந்து வருகிறது என்பது பற்றிக் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் யுகத்தில் செய்திகள் வேகமாக வெளியாகி வரும் நிலையில், செய்திகளை சரி பார்த்தல், உறுதி செய்தல் போன்ற பாரம்பரிய பண்புகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். இதழியலில் நெறிமுறைகளின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டார்.

ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு
ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு

அறிமுக நிகழ்ச்சிக்கு பின் துவங்கிய தொழில்நுட்ப அரங்கில், டிஜிட்டல் இதழியல் சாதனங்கள் பற்றி தொழில்நுட்ப வல்லுனரான டாக்டர்.முத்துகுமரன் உரை நிகழ்த்தினார். டிஜிட்டல் யுகத்தில் இதழாளர்கள் பயன்படுத்தக்கூடிய சாதனங்களாக, வெளியீட்டு மேடைகளான வேர்ட்பிரஸ், ட்ருபல் முதல், செய்திகளை திரட்ட வழி செய்யும் ஆர்.எஸ்.எஸ் எனும் செய்தியோடை வசதி, கூகுள் அலர்ட் சேவை, சமூக ஊடகங்களை பின் தொடர உதவும் மென்ஷன், டிவிட்டெக் சேவை வரை பலவகையான டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு பற்றி விளக்கினார்.

ஆடியோ பிளாகிங் போன்றவை பற்றியும் குறிப்பிட்ட அவர், பிக்டேட்டா போன்றவற்றையும் நவீன இதழாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று தெரிவித்தார். உலகம் முழுவதும் வெளியாகும் நாளிதழ்களை அறிய உதவும் நியூஸ்பேப்பர்மேப் உள்ளிட்ட சேவைகள் பற்றியும் விவரித்தார்.

டிஜிட்டல் சாதனங்கள், செய்தி சேகரிப்பு, வெளியீடு என எல்லாவற்றையும் எளிதாக்கி இருப்பதை சுட்டிக்காட்டு பங்கேற்பாளர்களை ஊக்கமளித்தார்.

சமூக ஊடக பயன்பாடு பல்வேறு சர்ச்சைகளையும் , கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், டிஜிட்டல் மீடியாவில் சட்ட சிக்கல்கள் எனும் தலைப்பில் பிரபல வழக்கறிஞர் ரமேஷ் உரை நிகழ்த்தினார். எல்லாவித உரிமைகளுக்கும் இந்திய அரசியல் சாசனமே அடிப்படை என்று குறிப்பிட்டவர், இந்த அரசியல் சாசனத்தில் பத்திரிகை சுதந்திரத்திற்கு என தனிப்பிரிவு இல்லை, குடிமக்களுக்கான கருத்துரிமைய உறுதி அளிக்கும் சட்டப்பிரிவே இதற்கும் அடிப்படையாக அமைகிறது என்று தெரிவித்தார்.

செய்தி பகிர்வில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பற்றி குறிப்பிட்டவர், அவதூறு வழக்குகளின் தன்மை பற்றியும் தெளிவு படுத்தினார். டிஜிட்டல் யுகத்தில் எல்லாவற்றிலுமே சட்ட விஷயங்கள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

சமூக ஊடக பகிர்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த போது, அவதூறு புகாருக்கு இலக்காகும் போது செய்தி/தகவலை வெளியிட்டவருக்கு உள்ள பொறுப்பு அதை பகிர்ந்தவர்களுக்கும் உண்டு என்று எச்சரித்தார். தனியுரிமை பற்றி குறிப்பிட்ட போது, பொது வெளியில் தங்களை முன்னிறுத்திக்கொள்பவர்கள் தனியுரிமை பாதுகாப்பை விமர்சனங்களுக்கு எதிராக கோர முடியாது எனவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் ஊடகத்தில் அறம் எனும் தலைப்பில் பத்திரிகையாளரும், தொழில்நுட்ப வலைப்பதிவாளருமான சைபர்சிம்மன் உரை நிகழ்த்தினார். இதழியல் துறை வேகமாக வளர்ர்ந்து வந்தாலும் அதனை இயக்கும் அடிப்படை நன்னெறிகள் எந்த காலத்திலும் மாறாது என குறிப்பிட்டவர், இதழியலுக்கான நன்னெறிகள் மற்றும் அவை டிஜிட்டல் யுகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடக பயன்பாட்டால் இதழாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், அடிப்படை அறமும், பொறுப்புணர்வுமே வழிகாட்ட வேண்டும் என குறிப்பிட்டார். உடனடித்தன்மை, வைரல் தன்மை ஆகியவற்றை எல்லாம் மீறி, இதழாளர்கள் செய்திகளின் அடிப்படை அம்சம் மற்றும அவை வெளியிடப்படும் தன்மை குறித்து அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் யுகத்தில் நவீன செய்தியாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்விகளான, தனிப்பட்ட நிலைப்பாடு எடுக்காலாமா? செய்திகளுடன் பார்வையையும் கலந்து வெளியிடலாமா? டிஜிட்டல் சாதனங்களை கையில் எடுத்து செயற்பாட்டாளர்களாக மாறாலாமா? போன்றவை குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நெறிமுறைகளே எப்போதும் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டவர் ட்ரோன் இதழியல் போன்ற மாற்றத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஐஐடி இணை பேராசிரியர் டாக்டர்.சுதர்சன் பத்மனாபன்
ஐஐடி இணை பேராசிரியர் டாக்டர்.சுதர்சன் பத்மனாபன்

ஐஐடி இணை பேராசிரியர் டாக்டர்.சுதர்சன் பத்மனாபன், டிஜாய் அறங்காவலர் பிரைம் பாயிண்ட் ஸ்ரீனிவாசன், புரவலர் நூருல்லா, சூசன் கோஷி, இதழியல் துறை உதவி பேராசிரியர்கள், இதழாளர்கள் மற்றும் இதழியல் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி பற்றிய விவரங்களுக்கு 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்