வறட்சி பாதித்த கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆர்வலர் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே!

0

நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’சேக்ரட் கேம்ஸ்’ தொடரில் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவியாக நடித்தவர் கதாநாயகி மற்றும் ஆர்வலர் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. இவர் கதாநாயகி மட்டுமல்ல தியேட்டர் ஆர்டிஸ்ட், நடனக் கலைஞர், பயண ஆர்வலர், மாடல் மற்றும் ஆர்வலர். சமூக ஊடகங்களும் விமர்சகர்களும் இந்தத் தொடரில் அவர் ஏற்று நடித்த துணிச்சலான கதாப்பாத்திரம் குறித்து அவரை பாராட்டுகையில் அவர் மேற்கொண்ட சமூக சேவை நடவடிக்கைகள் குறித்து பார்ப்போம்.

2015-ம் ஆண்டு மஹாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் ராஜ்ஸ்ரீ சற்றும் தயங்காமல் உதவிக்கரம் நீட்டினார். பர்பானி, பீட், லத்தூர், ஜல்னா ஆகிய பகுதிகளுக்குச் சென்றார். அங்கு சென்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முதலில் மாரத்வாடா பகுதியில் 2,000 பேர் வசிக்கும் பந்த்ரி கிராமத்தில் பணியாற்றினார். அவர் கூறுகையில்,

”அங்கு வறட்சிதான் முக்கியப் பிரச்சனையாக இருந்தது. கிராமத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் போர்வெல் இருப்பதை கவனித்தேன். ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீரின் மட்டம் குறைந்து வந்தது,” என்றார். 

இவர் தற்காலிகத் தீர்வைக் கொண்டுவர தண்ணீர் டேங்கர்களில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தார். அவரது நண்பரான மக்ரந்த் அனாஸ்புரே ஆலோசனைப்படி மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராம மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தது குறித்தும் மழை நீர் சேகரிப்பை அறிமுகப்படுத்தியது குறித்தும் அவர் கூறுகையில்,

”கிராம மக்களின் நம்பிக்கையைப் பெற மாதக்கணக்கில் ஆனது. அவர்கள் பேசிய அனைத்தையும் உட்கார்ந்து காது கொடுத்துக் கேட்டேன். நீங்கள் காது கொடுத்துக் கேட்டால் மட்டும்தான் உங்களால் புரிந்துகொள்ளமுடியும். நீங்கள் புரிந்துகொண்டால் மட்டும்தான் உங்களால் தீர்வுகாணமுடியும். எனது முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். என்னுடைய அப்பா அரசு ஊழியராக இருப்பினும் அவரும் விவசாயம் செய்தார். விவசாயம் தொடர்பான ஏற்ற இறக்கங்களைப் பார்த்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஔரங்காபாத் அருகே உள்ள போகர்தான் பகுதியில் பருத்தி விளைச்சலில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி விவசாயப் பணியை கடினமாக்கியது. எனவே எனது அப்பா நிலத்தை விற்றுவிட்டு பணிபுரிவதற்காக ஔரங்காபாத் பகுதிக்கு மாற்றலானார். என் பெற்றோர் மூன்று பெண் குழந்தைகளையும் படிக்கவைக்க கடுமையாக உழைத்தனர். அவர்களது போராட்டத்தை நான் பார்த்துள்ளேன்,” என்றார்.

இன்று கிராமத்தில் போதுமான தண்ணீர் உள்ளது. அதன் பிறகு ராஜ்ஸ்ரீ திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க கழிப்பறை கட்டும் பணியை மேற்கொண்டார். பயனாளிகள் மற்றும் அமைப்புசார் செயல்முறை வாயிலாக கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அவர் சொந்தமாக ’Nabhangan’ என்கிற அரசு சாரா நிறுவனத்தை நிறுவினார். இன்ஸ்டாகிராமில் இந்த நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளை விளம்பரப்படுத்தி வருகிறார். தனது பதிவு ஒன்றில் அவர் குறிப்பிடுகையில்,

”எங்களது கிராமங்கள் சுயசார்புடன் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அனைத்து சூழல்களிலும் பெண்கள் தங்களையும் தங்களது குடும்பத்தையும் பராமரித்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தன்னால் சாதிக்க முடியும் என்பதில் நம்பிக்கை வைக்கவேண்டும்."

கடந்த சில ஆண்டுகளாக Dharavi Dairy, Boodhnoor Vaidyashala, SOS papa போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்களித்துள்ளார். உள்ளூர்வாசிகளைக் கொண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் ’பீச் ஓ பீச்’ முயற்சியிலும் ராஜ்ஸ்ரீ பங்கேற்றுள்ளார். தற்சமயம் பெண் குழந்தை மீட்பு இல்லத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பல முறை மேடையில் கதகளி நடனம் வாயிலாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளை எதிர்த்துள்ளார் என அவரது அதிகாரப்பூர்வமான வலைதளம் குறிப்பிடுகிறது.

நடுத்தர வர்க்கத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ராஜ்ஸ்ரீக்கு இரண்டு சகோதரிகள். இவர்தான் இளையவர். மஹாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இவரை தியேட்டர் பெரிதும் கவர்ந்ததால் சிம்பயோசிஸ் நிறுவனத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள அந்த நகருக்கு மாற்றலானார். அப்போதிருந்து சேக்ரட் கேம்ஸ், ஆன்கிரி இண்டியன் காடஸ், எஸ் துர்கா, மும்பை செண்ட்ரல், ஜஸ்டிஸ், Eli Eli Lama Sabachthani போன்ற ப்ராஜெக்டுகளில் பங்களித்துள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL