அழகான வடிவமைப்பில் ஸ்டீல் லன்ச் பாக்ஸ் தயாரித்து உலக அளவில் விற்பனையில் கலக்கும் சென்னை நிறுவனம்!

4

உங்களது பள்ளிப்பருவத்தில் உங்கள் அம்மா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டப்பாவில் உணவு பேக் செய்து கொடுப்பார்களே நினைவிருக்கிறதா? அதில் என்ன இருக்கிறது என்பதை பிரித்துப் பார்க்க லன்ச் பெல் அடிக்கும்வரை எப்படியெல்லாம் காத்திருப்போம் என்று நினைவிருக்கிறதா? இன்று லன்ச் பாக்சிலிருந்து ஒரு துளி ஊறுகாயையோ அல்லது சப்பாத்தியையோ எடுத்து சாப்பிடும்போது உடனடியாக நமது பள்ளி நாட்கள், அங்கே விளையாடிய இடம், இன்க் தெளிக்கப்பட்ட சீருடைகள் போன்றவை நம் நினைவிற்கு வரும். உணவு மீதான நமது அணுகுமுறையை டிஃபன் பாக்ஸ் வடிவமைத்துள்ளது. கூடவே நமது அம்மாவின் அன்பையும் ஞாபகமூட்டும்.

சென்னை மக்களுக்கு நெருக்கமான சொல்லான டிஃபன் என்கிற வார்த்தையே ஒருவித பூரிப்பை நம்முள் அளிக்கும். அந்த உணர்வுகளை திரும்பக் கொண்டுவந்துள்ளது ஒரு ஸ்டார்ட் -அப். உணவை பேக் செய்து எடுத்துச்செல்லும் விதத்தில் ஒரு புதுமையை அதே சமயத்தில் இந்திய கலாச்சாரம் மற்றும் அழகான வடிவமைப்பைக் கொண்டு மாற்றியுள்ளது இந்த நிறுவனம். தற்போது 10,000 யூனிட் லன்ச் பாக்ஸ்களை விற்பனை செய்துள்ளது Vaya Life.

சென்னையில் வடிவமைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட இது, அமெரிக்காவில் வேகமாக புகழ் பெற்று வருகிறது. இவை பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படாமல் நீங்கள் அந்த காலத்தில் பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாக்ஸ் போலவே இருக்கும். பாக்ஸை தனியாக பிரிக்கும் பகுதிகளில் காப்பர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும்.

32 வயதான வசிஷ்ட் வசந்த்குமார் தனது அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து இந்திய டிசைன்களில் கவனம் செலுத்த விரும்பினார். அது அவ்வளவு சுலபமான செயலாக அமையவில்லை. அவர் லன்ச் பாக்ஸ் தயாரிக்க விரும்பியதை சிலர் கேலி செய்தனர். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த Apple Inc-லிருந்து வெளியேறி போயும்போய் லன்ச்பாக்ஸ் தயாரிக்கப்போகிறார் என்று கிண்டல் செய்தனர். எனினும் அவர்கள் நினைத்தது அனைத்துமே தவறு என்று கடந்த வருடம் நிரூபித்துவிட்டார் வசிஷ்ட்.

”சிறந்த தயாரிப்புகள் மற்றும் டிசைன்கள் இந்தியாவிற்குத் தேவை. நைக் அல்லது டொயோட்டா போன்ற தயாரிப்புகள் நம்மிடம் ஏன் இருக்கக்கூடாது? இந்தியர்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் பொருளை உருவாக்கி அதில் மிகச்சிறப்பான அம்சங்களை புகுத்துவதே எனது நோக்கம்,”

என்றார் Vaya Life நிறுவனத்தின் நிறுவனர் வசிஷ்ட். இந்தியாவிலிருந்த அவரைப் போன்றோருடன் உரையாடியதில் இந்தியாவில் பல தேவைகள் இருப்பதாக தெரிவித்தனர். 

”ப்ராண்ட்கள் இந்தியாவில் வடிவமைக்கப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படுவதால் இன்ஜினியரிங் மற்றும் வடிவமைப்பில் நமக்கிருக்கும் வலிமையைக் காட்டுகிறது,” என்றார் Smartron நிறுவனத்தின் நிறுவனரான மகேஷ் லிங்காரெட்டி.

அன்றாட வீட்டு உபயோக பொருட்களின் மதிப்பும் செயல்பாடும் உலகமயமாக்கலினால் சிறப்பாக உள்ளது. இந்தச் சந்தையில் பல்வேறு மலிவான சீனப்பொருட்களும் மற்ற பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. எனவே இந்தத் தயாரிப்புகளில் புத்துணர்ச்சியைப் புகுத்துவதே 2016-ம் ஆண்டு துவங்கப்பட்ட Vaya Life-ன் நோக்கமாகும். 

Vaya டிஃபன் பாக்ஸை நிலையான வடிவமைப்புடன் ஒரு சிறந்த தயாரிப்பாக புதுப்பித்து வாடிக்கையாளர்களின் தினசரி வாழ்வில் இடம்பெற்றுள்ளது. டிஃபன் பாக்ஸ் தயாரிப்பில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற பகுதிகளிலுள்ள ப்ரொஃபஷனல்களின் நிபுணத்துவத்தை இந்நிறுவனம் உள்ளடக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஒரு மாதத்திற்கு 10,000 யூனிட்கள் விற்பனை செய்துவருகிறது. 2020-ம் ஆண்டு 400 கோடி ரூபாய் வருவாயை எட்டுவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது Vaya. 

2020-க்குள் 400 கோடி ரூபாய் வருவாய் இலக்கு

வசிஷ்ட் 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். இருந்தும் அதற்கு முன்பே இந்தியாவில் பிரபலமாக்கவேண்டிய தயாரிப்பு குறித்து சிந்தித்தவாறே இருந்தார். கட்லெரி தயாரிப்பு போன்றவை குறித்தும் சிந்தித்தார். இறுதியாக டிஃபன் பாக்ஸை தேர்வு செய்தார். 

Apple, iPhone Operations போன்றவற்றில் பணியாற்றிய இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இந்நிறுவனங்களில் மொபைல் போன் உற்பத்தியாளர்களின் சப்ளை செயின் செயல்பாடுகள் குறித்து நன்கறிந்தார். மேலும் சொந்தமாக ஸ்டார்ட் அப் துவங்கினால் பின்பற்ற வேண்டிய வடிவமைப்பு முறை குறித்தும் அறிந்திருந்தார். 

”இந்தியாவில் வடிவமைத்தாலும் என்னால் தயாரிப்புகளை உலகெங்கிலும் விநியோகம் செய்யமுடியும் என்பதை Apple எனக்கு உணர்த்தியது.” என்றார் வசிஷ்ட்.

இந்தியாவிற்கு திரும்பி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் 35 கோடி ரூபாய் முதலீடு பெற்றார். வசிஷ்ட் போன்ற தொழில்முனைவோரின் முயற்சிகளை நிபுணர்கள் பாராட்டி வரவேற்கின்றனர். “FMCG வகை, தொழில்துறை வடிவமைப்பு என பல ப்ராண்டுகள் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட செயலை இளம் தொழில்முனைவோர் தொடங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார் ரீடெய்ல் ஆலோசகரான Wazir Advisors நிறுவனர் ஹர்மிந்தர் சானி.

தற்போது சந்தையிலுள்ள லன்ச் பாக்சில் காணப்படும் மோசமான வடிவமைப்பு, பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை கண்டறிந்து அதைப் போக்கும் விதத்திலான தீர்வை உருவாக்கியுள்ளது Vaya Life. ட்ராயிங் போர்டில் ஆறு மாதங்கள் செலவிட்டது இந்நிறுவனம். அதன் பிறகு தயாரிப்பின் அழகு, அதன் பொருத்தம், செயல்பாடு ஆகியவற்றை புரிந்துகொள்ள 3D ப்ரிண்டிங் மற்றும் பிற மெடல் ப்ரோடோடைப்பிங் சாதனங்களைக் கொண்டு 20 வெவ்வேறு மாதிரிகளை இந்நிறுவனம் ப்ரோடோடைப் செய்தது. அவர்கள் விரும்பிய ப்ரோடோடைப் கிடைத்ததும் ஒரே மாதிரியான தரத்தில் T-1000 உருவாக்கும் தயாரிப்பு முறையை நிறுவனம் உருவாக்கியது. சில தடங்கல்களை சந்தித்தபோதும் விரைவாக எதிர்கொண்டு முன்னேறியது.

”சில பாகங்களை வெளியே வாங்க முயற்சித்தோம். ஆனால் அதன் தரம் திருப்திகரமாக இல்லை. இறுதியாக தரத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு புதுமைகளை தயாரிப்பு முறைகளில் புகுத்தவும் அனைத்தையும் எங்களது தொழிற்சாலையிலேயே சமீபத்திய நவீன தயாரிப்புமுறை, ஆட்டோமேஷன் மற்றும் ஆய்வு உபகரணங்களைக் கொண்டு தயாரிப்பது தான் சிறந்த வழி என்று தீர்மானித்தோம்.” என்றார் வசிஷ்ட். 

தற்போது ஒரு நாளைக்கு 1000 லன்ச் பாக்ஸ் தயாரிக்கும் திறன் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். மேலும் சீனாவின் ஒரு உற்பத்தியாளரின் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. தயாரிப்புகள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதும் பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்படுகிறது.

ஆன்லைனில் மட்டும் விற்பனை 

இந்நிறுவனம் தனது வலைதளத்திலும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் தளங்களிலும் லன்ச் பாக்ஸ்களை விற்பனை செய்கிறது. இந்தியாவில் நேரடியாக ரீடெய்லர்களுக்கு அளிக்கும் விதத்தில் செயல்படலாம். ஆனால் விநியோக இகோசிஸ்டத்தில் லாபத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடுவதால் ஆன்லைனில் மட்டும் விற்க முடிவெடுத்துள்ளனர். வசிஷ்ட் கூறுகையில்,

”சந்தையிலேயே சிறப்பான தயாரிப்பாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு நுணுக்கங்களையும் ஆராய்ந்து பொருட்களை சூடாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் விதத்தில் லன்ச்பாக்சை உருவாக்கியுள்ளோம். இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் எளிதாக சுத்தப்படுத்தும் விதத்திலும் உள்ளே வைக்கும் பொருள் சிந்தாமல் இருக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.”

குழந்தைகள், கார்ப்பரேட்டைச் சேர்ந்தவர்கள், சிஇஓ, நிர்வாகிகள் போன்றோரின் குறிப்பிட்ட தேவைகளை மனதில் கொண்டு இந்த வருடம் 1000 ml மற்றும் 600 ml ஆகிய கொள்ளவுகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ப்ளாஸ்டிக் பயன்படுத்தாமல் தயாரிப்புகளை மைக்ரோவேவில் பயன்படுத்த உகந்ததாக உருவாக்குவது போன்ற திட்டங்கள் குறித்தும் சிந்தித்து வருகின்றனர். பேக் செய்து 6-7 மணி நேரம் கழித்து சாப்பிடும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். உணவு உண்ணும் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்ற இன்சுலேடட் பாட்டில் அல்லது டம்ப்ளர் போன்ற தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நிறுவனத்தின் இண்டஸ்ட்ரியல் வடிவமைப்புக் குழு டோக்கியோவிலும் இன்ஜினியரிங், ஆப்பரேஷன்ஸ், மார்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை, சேல்ஸ் குழு போன்றவை சென்னையிலும் உள்ளது. எனினும் தயாரிப்பு அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நிறுவனம் இந்தப் பகுதிகளில் விரிவடைந்து வருகிறது.

தற்போது Vaya Tyffyn மூன்று கண்டெய்னர்களைக் கொண்ட வேக்யூம் இன்சுலேடட் லன்ச் பாக்ஸாக 1000 ml கொள்ளளவில் கிடைக்கிறது. Graphite, Maple, Wool என மூன்று வகைகளில் 2,999 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 600 ml ’Tyffyn’ அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 

”பேக் செய்த ஆறு மணி நேரத்திற்குப் பிறகும் சூடான ஃப்ரெஷ்ஷான உணவை வாடிக்கையாளர்கள் உட்கொள்ள முடியும்.”

அம்மாவை நினைவுபடுத்தும் ’டிஃபன் பாக்ஸ்’ என்கிற இந்த தயாரிப்பு மூலம் இந்நிறுவனர் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்..

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா