'தொழில்முனைவோர் புரட்சிகரமானவர்கள்': சர்வதேச தொழில்முனைவு மாநாட்டில்  இவாங்கா ட்ரம்ப்!

0

’பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதன் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி’ என்கிற நோக்கத்தை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த வருட சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பெண்களே என்றார் இவாங்கா ட்ரம்ப். பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டால் மட்டுமே பொருளாதாரமும் உலகைச் சுற்றியுள்ள சமூகமும் தங்களது முழுமையான திறனை அடையமுடியும் என்றார் அவர்.

இவாங்கா ட்ரம்ப் உரையிலிருந்து சில மேற்கோள்கள் :

இந்திய-அமெரிக்க நட்புறவு

சர்வதேச தொழில்முனைவு மாநாட்டை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இது நம் இருநாட்டு மக்களின் நட்புறவு வலுவடைந்திருப்பதை காட்டுகிறது. மேலும் இரு நாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணியை பறைசாற்றுகிறது. இந்தியாவிற்கு வெள்ளை மாளிகையில் ஒரு உண்மையான நண்பர் இருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.
பட உதவி: ட்விட்டர்
பட உதவி: ட்விட்டர்

விதிகளை மாற்றியமைத்தல்

”இந்த ’முத்துக்களின் நகரத்தில்’ மிகப்பெரிய பொக்கிஷமே நீங்கள்தான். நீங்கள் மிகப்பெரிய கனவு காண்பவர்கள், புதுமைகளை படைப்பவர்கள், தொழில்முனைவோர், மனம் தளராத தலைவர்கள். உங்களது உயர்ந்த லட்சியங்களை ஒருபோதும் கைவிடாதீர்கள். வருங்காலம் சிறப்பாக அமைய தொடர்ந்து போராடுங்கள்.

”இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் நடப்பவற்றைக் கொண்டாடவே நாம் ஒன்று திரண்டுள்ளோம். தொழில்முனைவோர் நமது பொருளாதாரத்தை புரட்சிமயமாக்கி நமகு சமூகத்தை மேம்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

”நீங்கள் விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் எழுதுகிறீர்கள். உங்களது ப்ராஜெக்டுகள் வாயிலாகவும் நீங்கள் உருவாக்கும் வணிகங்கள் மூலமாகவும் நமது சமூகத்தினருக்கு சேவையளிக்கவேண்டும் என்கிற உத்வேகம் உங்களிடம் உள்ளது.”

உங்களிடம் தைரியம் உள்ளது. விடாமுயற்சி உள்ளது. வெற்றியடையவேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு திட்டத்தைக் கொண்டே துவங்கினீர்கள். அடுத்த ரோபோவிற்கான கோடிங்கை தயாரிக்க, அடுத்த செயலியை உருவாக்க, மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடுத்த திருப்புமுனையை கண்டறிய என இரவும் பகலும் அயராது உழைத்திருக்கிறீர்கள்.

”உங்களது முயற்சியில் ஆபத்துகள் அதிகம் என்றும் வெகுமதி குறைவு என்றும் சிலர் உங்களிடம் கூறியிருப்பார்கள். ஆனால் தோல்வியடைவதை நினைத்து பயம் கொள்ளாமல் இருந்ததால் மட்டுமே இன்று நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களது எதிர்காலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புகிறீர்கள். குறிப்பாக இன்று இங்குள்ள பெண் தொழில்முனைவோருக்கு நான் வாழ்த்து கூற விரும்புகிறேன்.”

பெண்களுக்கே முதல் உரிமை

“நமது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்துவதுதான் இந்த வருட மாநாட்டின் கருப்பொருள் : ’பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதன் மூலம் அனைவருக்குமான வளர்ச்சி’. இதில் பங்கேற்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோரில் பெரும்பான்மையானர்வகளாக 1500 பெண்கள் உள்ளனர்.

”பெண்கள் வெற்றியடைய அதிகாரமளிக்கப்பட்டால் மட்டுமே நமது குடும்பங்கள், நமது பொருளாதாரம், நமது சமூகம் என அனைத்தும் தங்களது முழுமையான திறனை அடைய முடியும்.”

முன்னாள் தொழில்முனைவோர், முதலாளி, ஆணாதிக்கம் நிறைந்த துறையில் நிர்வாகி என பல பொறுப்புகளை வகித்துள்ளதால் பெரும்பாலும் பெண்கள் வீட்டையும் குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு அதேசமயம் பணியிடங்களில் தங்களது திறமையை நிரூபிக்க சக ஆண்களைக் காட்டிலும் அதிகம் பாடுபடவேண்டிய சூழல் நிலவுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.

”கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் புதிய வணிகங்கள் துவங்கும் முயற்சியில் ஈடுபடுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பார்க்கமுடிகிறது. உலகலளவில் 2014-ம் ஆண்டு மற்றும் 2016-ம் ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்களிடையேயான தொழில்முனைவு நடவடிக்கைகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.”

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் பெண்களின் உரிமை கொண்ட நிறுவனங்கள் 45 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பெண்கள் உரிமை கொண்ட 10 புதிய நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் சிறுபான்மை பெண்கள் துவங்கியுள்ளனர்.

இன்று அமெரிக்கவில் 11 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 9 மில்லியன் ஊழியர்களுக்கு பணி வழங்கி 1 ட்ரில்லியன் டாலர் வருவாயை உருவாக்குகின்றனர்.

பல பெண்கள் தேவை காரணமாகவே தொழில்முனைவோராகவே வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவோ மாறுகின்றனர். சிலருக்கு தங்களது குடும்பத்தை பராமரிக்க தேவையான நெகிழ்வு வழங்கப்படுவதில்லை. மற்றவர்களுக்கு தொழில்முறை ஆதரவாளர்கள் கிடைப்பதில்லை. அல்லது பதவி உயர்விற்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

மாறாக இன்று இங்குள்ள பலரைப் போலவே தங்களது சொந்தமான திட்டங்களை வகுத்து நம்பமுடியாத அளவில் வெற்றியடையும் பெண்களும் உள்ளனர்.

பெண்கள் தலைமையிலான வணிகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது நமது சமூகத்திற்கு மட்டுமல்ல நமது பொருளாதாரத்திற்கும் சிறந்ததாகும். உலகளவில் தொழில்முனைவில் பாலின இடைவெளியை நீக்குவதன்மூலம் உலக GDP இரண்டு சதவீத வளர்ச்சியடையும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இங்குள்ள பெண்கள் இந்த இடைவெளி நீக்கப்படுவதற்கும் அதிக சிறப்பான வளர்சிக்கும் வழிகாட்டி உதவலாம்.

பெண்களுக்கு என்ன தேவை

பெண் தொழில்முனைவோருக்கு மூலதனம், நெட்வொர்க் மற்றும் வழிகாட்டிகளை அணுகுவதற்கான வாய்ப்பு, நியாயமான சட்டங்களை அணுகுதல் போன்றவை கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

வளரும் நாடுகளில் 70 சதவீத பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு மூலதனம் மறுக்கப்படுகிறது. இதன் விளைவாக வளரும் நாடுகளில் கிட்டத்தட்ட 300 பில்லியன் வருடாந்திர கடன் பற்றாக்குறை (annual credit deficit) காணப்படுகிறது.

நியாயமான சட்டங்களைப் பொருத்தவரை பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அபார வளர்ச்சி காணப்பட்டாலும் இன்னும் போதுமான வளர்ச்சியடையவில்லை.

சில நாடுகளில் பெண்கள் சொத்து வைத்திருக்கவோ, சுதந்திரமாக பயணம் மேற்கொள்ளவோ, கணவரின் அனுமதியின்றி பணிபுரியவோ அனுமதிக்கப்படுவதில்லை. இன்னும் சில நாடுகளில் கலாச்சார மற்றும் குடும்ப நிர்பந்தம் காரணமாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பணிபுரிவதற்கான சுதந்திர கிடைப்பதில்லை.

”உள்நாட்டு சீர்திருத்தங்கள் மூலமாகவும் சர்வதேச முயற்சிகள் மூலமாகவும் உலகெங்கிலுமுள்ள பெண்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்படுவதை ஊக்குவிக்க எங்களது நிர்வாகம் முயன்று வருகிறது.

”இந்த கோடைக்காலத்தின் G20 கருத்தரங்கில் ’பெண் தொழில்முனைவோருக்கான நிதி முயற்சி (Women Entrepreneurs Finance Initiative or WeFI) என்கிற உலக வங்கியுடனான புதிய முயற்சியில் அமெரிக்கா நிறுவன உறுப்பினராக இருந்தது. இதன் மூலமாக மூலதனம், நெட்வொர்க், பெண்களுக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

கற்றலுக்கான சந்திப்பு

மூன்று நாள் மாநாடு ஹைதராபாத்தில் நடைபெறும் வேளையில் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து ஒருவர் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நமது சமூகத்திலுள்ள தடைகளை தகர்க்கவேண்டும் என்று நான் ஊக்கமளிக்கிறேன். இதனால் பெண்கள் சுதந்திரமாக புதுமைகளை படைத்து, வெற்றியடைவதற்கான அதிகாரமளிக்கப்பட்டு நமது குழந்தைகளுக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை விட்டுச்செல்லமுடியும்.

மாற்றத்திற்காக முயற்சி மேற்கொள்ளும் நிலையில் சிறப்பான எதிர்காலத்திற்கு அரசாங்கத்தின் ஒரு கொள்கை மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வெற்றி என்பது உற்சாகம், முயற்சி, திறமை ஆகியவற்றை சார்ந்ததே என்பதை உணரவேண்டும்.