ஆங்கிலத்தில் புலமை பெற விருப்பமா? 'வால்ட்' செயலியை பயன்படுத்துங்கள்!  

0

தங்கள் கருத்துகளை சரியான முறையிலும் சிறந்த வகையிலும் வெளிப்படுத்த மக்களுக்கு மொழியில் தெளிவு வேண்டும். அப்போது தான் அவர்கள் சொல்ல வரும் கருத்தை மற்றவர் திறம்பட புரிந்து செயல்படுவர். இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலம், ஹிந்தி இவை இரண்டே சிறந்த மொழிகளாக உள்ளன. ஆனால் பெரும்பாலும் அலுவலகங்களில் ஆங்கிலமே பரிந்துரைக்கப்படுகிறது, அதே போன்று இந்தியாவில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளிலும் ஆங்கிலம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆங்கிலம் அந்நிய மொழியாக இருப்பதால், பல இந்திய மாணவர்கள் அந்த மொழியின் இலக்கணம் மற்றும் சொல்அகராதியை புரிந்து கொள்வதில் சிரமப்படுகின்றனர். ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதில் இருக்கும் பிரச்சனையை உணர்ந்த சகோதரர் கூட்டணி உருவாக்கிய செயலியே வோல்ட் (VoLT) – ‘சொல்அகராதியை கற்றுக் கொள்ளும் நுணுக்கங்கள்’ என்பதே இதன் விரிவாக்கம்.

வோல்ட் என்றால் என்ன?

ஆங்கிலத்தை நன்கு புரிந்து கொள்ளவும், கடினமான சொற்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கான நுணுக்கங்களையும் வோல்ட் பயனாளர்களுக்கு வழங்குகிறது. படங்கள், நினைவுபடுத்தும் சொற்கள், வாக்கிய பயன்பாடு, பொருள் மற்றும் எதிர்ச்சொல் உள்ளிட்டவற்றை வீடியோ உதவியுடன் இந்த செயலி ஆங்கிலத்தை எளிமைப்படுத்துகிறது.

கற்றலை எளிமையாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்ற வேண்டும் என்பதே இந்த செயலியின் நோக்கம். அதே சமயம் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களில் ஆங்கிலத்தை புரிந்துகொள்வதில் சிரமப்படுபவர்களுக்கும், பல்வேறு சொற்களின் கலவையில் வாழ்நாளே மடிந்து விடுவதாக உணருபவர்களுக்கும் இது கைகொடுத்து தூக்கிவிடுகிறது.

கடந்து வந்த பாதை

பஞ்சாப் மாநிலம் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான சுனமைச் சேர்ந்த அபிஷேக்(29) மற்றும் நிஷேக் ஜெயின்(26) சகோதரர்கள் உருவாக்கிய செயலியே வோல்ட். தங்கள் சொந்த ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு அபிஷேக் 2005ல் ஐஐடி-ஜேஈஈயில் கல்லூரி படிப்பை முடித்தார், பின்னர் ஐஐடி-பிஎச்யூவில் சேர்ந்தார். அவர் அதன் பின்னர் ரெசோனன்ஸ், ஆகாஷ், பேஸ் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்களில் பணிபுரிந்தார். அவர் தற்போது ஐஐடி மாணவர்களுக்கு மும்பையின் சின்ஹாலில் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார்.

அபிஷேக்கின் இளைய சகோதரர் நிஷேக் 2007ல் BITS பிலானியில் சேர முடிவெடுத்தார், அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சவுதி அரேபியாவில் எரிசக்தித் துறையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். அவர் தற்போது இந்தியன் பொறியியல் பணிக்கான தேர்வை அகில இந்திய அளவில் 18வது ரேங்க் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

தன்னுடைய கல்லூரி காலத்தில் பொறியியல் பாடங்களை புரிந்து கொண்டாலும், அவர் ஆங்கிலம் பேசுதல் மற்றும் சொல்லாடல் என்று வரும் போது எதிர்திசையில் இருந்தார். ஒரு கார்ப்பரேட் வாழ்வில் வெற்றி பெற ஆங்கிலப்புலமை தேவை அப்போது தான் நல்ல வழிநடத்துநராக இருக்க முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

ஆங்கிலத்தை புரிந்து கொள்வதற்காக தினசரி நாளிதழ்களை படித்தல், குறும்படங்கள் பார்த்தல், எப்போதும் டிக்ஷ்னரியில் வார்த்தைகளுக்கு பொருள் காணுதல் எனப் பல்வேறு யுக்திகளை அவர் கையாண்டார். சில நேரங்களில் இந்தச் செயல் அவரை வெறுப்படையக் கூடச் செய்தது. அவர் கூறுகையில்,

“செய்தித்தாளில் ஒரு வாக்கியத்தை படிக்கும் போது அதன் அர்த்தம் புரியாது சில நேரங்களில் ஒரே வார்த்தையை நான்கு ஐந்து முறை படிப்பேன், அப்போதும் புரியவில்லை. ஒவ்வொரு வார்த்தைக்கும் தொடர்ந்து டிஷ்னரியை பயன்படுத்தியதும் பலன் அளிக்கவில்லை. உண்மையில் இது தன்னை சோர்வடையச் செய்தது” என்று சொல்கிறார்.

அதே சமயம், அபிஷேக் உளவியல் படித்திருந்தார், அதில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பற்றிக் கற்றுக் கொண்டார். அவர் அதை முயற்சித்த போது கண்ட விஷயம் பழைய விஷயங்களையோ அல்லது ஏற்கனவே இருக்கும் தகவல்களையோ ஒருங்கிணைத்து ஒருவர் பயில நினைத்தால் அது அவருக்கு நியாபகசக்தியை ஊக்கப்படுத்த உதவும் என்பதை உணர்ந்தார். அதனால் அவர் தன்னுடைய சொந்த இதழுக்காக குறிப்புகளை எடுக்கத் தொடங்கினார், இதன் விளைவாக அவர் தன்னுடைய ஆங்கிலப் புலமை மற்றும் சொல்லாடல் திறனை மேம்படுத்திக் கொண்டார்.

அதன் பின்னர் அபிஷேக் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவின் முன்னணி அச்சகத்தின் தலைவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார், அப்போது தன்னுடைய இதழியல் அனுபவம் பற்றி அவருடன் அபிஷேக் பகிர்ந்து கொண்டார். அந்த அச்சகத்தார் அபிஷேக்கின் புதிய முயற்சியால் ஈர்க்கப்பட்டதோடு, இதை புத்தகமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட விரும்பும் தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். துரதிஷ்ட்வசமாக அந்த திட்டம் இறுதி வரை சென்றடையவில்லை. எனவே அபிஷேக்கும், நிகேஷீம் சொந்தமாக ஒரு அச்சகத்தை கட்டமைக்க முடிவு செய்தனர் – ஆர்ஆர் பப்ளிகேஷனில் புத்தகத்தை அச்சிட்டு தாங்களாகவே விநியோகம் செய்தனர்.

முதல் முறை புத்தகத்தை வெளியிடுவதால் பல்வேறு சவால்களை சந்தித்த போது இறுதியில் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் “வோல்ட் – சொல்அகராதியை கற்றுக் கொள்ளும் நுணுக்கங்கள்” (VoLT- Vocabulary Learning Techniques)  புத்தகத்தை அறிமுகம் செய்தனர். இந்நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததோடு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஷாப்பிங்கின் சிறந்த 10 சொல்அகராதி புத்தகங்கள் பட்டியலிலும் இடம்பிடித்தது.

புத்தக விறப்னை பெற்றுத் தந்த வெற்றியை அடுத்து, செயலி தயாரிக்கும் சிந்தனையில் இறங்கினர் சகோதரர்கள். இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன் பிரபலமடைந்து வருவதால் ஒரு செயலியை உருவாக்குவதே அடுத்த கட்டமாக தங்களுடைய பணி மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைய வழிவகை செய்யும் என்று அவர்கள் நம்பினர். செயலி உருவாக்கும் குழுவில் ஸ்மிதா மிஸ்ரா ஜெயின் CFOவாக செயல்பட மகேஷ் ஹல்டர் லீட் டெவலப்பராக இணைத்துக் கொண்டார். இந்த செயலி அவ்வபோது புதுப்பித்துக் கொள்ளும் கூடுதல் வசதியை இவர்களுக்கு அளித்தது – கூடுதலான வார்த்தைகள், எண்ணிலடங்கா புதிய புகைப்படங்கள் என புத்தகத்தில் செய்ய முடியாத மேலும் சில மாற்றங்களை செய்யும் வாய்ப்பை இது வழங்கியது. நிகேஷ் மேலும் கூறுகையில்,

வோல்ட் செயலி உதவியுடன் நாங்கள் கடினமான ஆங்கில வார்த்தைகளுக்கு அன்றாட வாழ்வின் செயல்கள், கேளிக்கை கதைகள், புகைப்படங்கள் மற்றும் இதர தாக்கத்தை ஏற்படுத்தும் சுய பரிசோதனை நுணுக்கங்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தோம். இது வாசிப்பாளர்கள் முழு பாடத்தையும் ஈடுபாட்டுடன் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். பல்வேறு பயன்பாடுகள், வார்த்தையின் அர்த்தம் மற்றும் எதிர்ச்சொல் கூட ஒவ்வொரு வார்த்தைக்கும் நாங்கள் எங்கள் செயலியில் வழங்கினோம்.

செயல்பாடுகளும் எதிர்காலத்திட்டமும்

தற்போது இந்த செயலி நண்பர்கள் உதவியோடு நிறுவனர்களால் செயல்படுத்தப்படுகிறது. வோல்ட்டுக்கான கருத்து ழுழுமையும் சொந்தமாக தயாரிக்கப்படுகிறது, புகைப்படங்களுக்கு அவர்கள் ஷட்டர்ஸ்டாக்கையே நம்பி இருக்கின்றனர். கடைகோடி வாடிக்கையாளரையும் சென்றடையும் வகையில் தற்போது இந்த செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அபிஷேக் தங்களுடைய தயாரிப்பு 10,000க்கும் மேற்பட்ட பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்டார்ட் அப் தற்போது சுயமுதலீட்டு முறையில் செயல்படுகிறது, வியாபாரத்தை விரிவுபடுத்த முதலீட்டாளர்களிடம் பேச்சுவாத்தையும் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ஒரு பெரிய குழுவை உருவாக்கி மேலும் சில முக்கிய வசதிகளான காணொலி காட்சி பாடங்கள் மற்றும் இன்னும் பல கற்கும் உதவியை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

துறை ரீதியான பார்வை

சுமூகமான தகவல் ஓட்டத்திற்கு பயனுள்ள கருத்துப் பரிமாற்றத்திறன் அனைத்து விதமான பணிகளுக்கும் அத்தியாவசியத் தேவை. நிறைய பெரிய நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வெளிநாடு இடம்மாற்றம் மற்றும் பயிற்சிக் காலத்தில் மென்திறனை ஒரு பகுதியாக அவர்களுக்கு வழங்குகிறது. இது இன்னும் பெரிய அளவில் அளவிட முடியாத சந்தையாக மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. டுயோலிங்கோ Duolingo பிரபல மொழிக் கற்றல் தளம், இதில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தளம் தற்போது பயனாளர்களுக்கு 16 மொழிகளை கற்கும் வாய்ப்பை வழங்குகிறது, இந்நிறுவனம் 2015ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கூகுள் கேபிடலில் $45மில்லியன் சீரிஸ் D நிதியைப் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், ஆங்கிலம் கற்கும் செயலி – ஹலோ இங்கிலீஷ் உள்ளது. அதைத் தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த கிங்ஸ் கற்றல், முன்னாள் வங்கி முதலீட்டாளர்களின் லிங்கோஸ் மியோ மற்றும் களப்பயிற்சியை மையப்படுத்தும் இங்கிலீஷ் தோஸ்த் ஆகியவை செயல்படுகின்றன.

எனவே சந்தையில் வோல்ட் போதுமான மதிப்பு உள்ளது, அதே சமயம் இந்திய பயனாளர்கயிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வருவதால் இதற்கான எதிர்கால சந்தை வாய்ப்பும் அதிகம் என்று நம்புகின்றனர் அவர்கள்.

நாங்கள் எதை இணைக்கிறோம்?

வோல்ட் நன்கு வடிவமைக்கப்பட்ட எளிதில் பயன்படுத்தக் கூடிய செல்போன் செயலி. பயனாளர்கள் புதிய சொற்களை நியாபகசக்தியில் வைத்துக் கொள்ளவும், ஏற்கனவே படித்த சொற்களை மறுமுறை கற்கவும் இது உதவுகிறது. இந்த செயலியில் உள்ள பல வித்தியாசமான அம்சங்கள் அவற்றின் மதிப்பை கூட்டுவதோடு கற்றலை எளிமையாக்குகிறது. இதில் உள்ள ‘மெமெரி கீ’ சில சுவாரஸ்யமான குறிப்புகள், கடினமான சொற்களை எளிமையாக்குவதற்கான மாயாஜாலங்கள் மற்றும் அவற்றை எளிதில் புரிந்து கொண்டு நினைவுபடுத்திப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

இந்த செயலியில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் சொற்களோடு இணைக்கப்பட்டுள்ள விதம் அவற்றின் கருத்தை அச்சுபிசகாமல் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள கிரிட் மோட் பயனாளர்கள் அனைத்து வார்த்தைகளைப் பற்றியும் ஒரு பார்வையிடுவதற்கான மற்றொரு வாய்ப்பையும் கூடுதலாக வழங்குகிறது.

இன்னும் என்னவெல்லாம் மாற்றவேண்டும்?

வோல்ட் செயலி தற்போது உறுதியளித்தப்படி இருந்தாலும், இன்னும் பயனுள்ளபடி மேம்படுத்த சமூக விளிம்புகளை சேர்க்க வேண்டியுள்ளது. சோதனை, சமூக நிலைகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் தேடும் வாய்ப்பு ஆகியவை கொண்ட பல பயன்பாட்டு செயலியாக இதை மாற்ற அபிஷேக் மற்றும் நிகேஷ் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

யுவர் ஸ்டோரியின் நிலைப்பாடு

நல்ல மொழிஆளுமை, சொல்லகராதி நினைவு திறன் ஆகியவை தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும். இவை ஒருவர் அவரது சகாக்கள், உயர் அதிகாரிகள் மற்றும் நண்பர்களுடன் நல்லமுறையில் கருத்துக்களை பரிமாற உதவுகிறது. சுயமுதலீட்டில் வோல்ட் செயலி ஒரு மனித தொடர்புள்ளதாக தெரிகிறது. செயல்பாட்டை அளவீடு செய்தல், இன்னும் அதிக வாடிக்கையாளர்களை சென்று சேருதல் ஆகியவற்றை பார்க்க ஆர்வமாக உள்ளது.

செயலி தரவிறக்கம் செய்ய: VoLT

கட்டுரை: ஹர்ஷித் மல்யா | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

திண்டுக்கல் தொடங்கி கூகுள், சென்னை வரை: தமிழரின் 'ஆங்கில'ப் பயணம்!