’உங்களது வெற்றி, தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம், வறுமை காரணமாக இருக்கக் கூடாது’- பிரபுதேவா

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த  சேலத்தைச் சேர்ந்த தறித்தொழிலாளியின் மகன் பிரபுதேவா.      

0

மக்களுக்காக பணியாற்ற பிரபலங்கள் அரசியல் களத்திற்கு வருவது போல நடுத்தர குடும்பத்து இளைஞர்களும், இளம் பெண்களும் அரசுப் பணியில் சேர்ந்து மக்கள் பணியோடு குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்படும் தேர்வுகளை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே அரசுப் பணி சாத்தியமாகிறது, எஞ்சியவர்கள் முயற்சியை மூலதனமாக்கி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

எப்போதும் லட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்று தேர்வு எழுதுவது குரூப் 4 பணியிடங்களுக்கு. வயது வரம்பு இல்லை, பத்தாம் வகுப்பு முதல் எந்தப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதும் ஒரு பிளஸ் பாயிண்ட். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த தேர்வில் தமிழகத்தில் சுமார் 17 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவுகள் 2 தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் புகழின் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் சேலத்தை சேர்ந்த பிரபுதேவா.

சாதாரண தறித் தொழிலாளியின் மகனான இவர், குரூப் 4 தேர்வில் 300க்கு 274.5 மதிப்பெண் எடுத்து மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றதால் பிரபுதேவாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
பட உதவி : நன்றி நியூஸ் 7 தமிழ்
பட உதவி : நன்றி நியூஸ் 7 தமிழ்

தடதடக்கும் தறிச்சத்தத்தை கேட்டே வளர்ந்தவர் பிரபுதேவா. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இடங்கண சாலை ஊராட்சியை சேர்ந்த காடையாம்பட்டி என்னும் குக்கிராமத்தில் வீட்டிலேயே தறி வைத்து நடத்தி வருகிறார் வைரவேலு. வைரவேலுவிற்கு உதவியாக அவருடைய மனைவி மீனாவும் தறி ஓட்டி மகள் தீபா மற்றும் மகன் பிரபுதேவாவை வளர்த்து வந்தார்.

நடுத்தர வர்க்க குடும்பம் என்பதால் பிரபுதேவாவை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு அவருடைய பெற்றோருக்கு வசதி இல்லை. இதனால் அரசுப் பள்ளியில் படித்து வந்த பிரபுதேவா இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 முடித்தார். தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2014ம் ஆண்டில் பி.இ படித்து முடித்தார்.

யுபிஎஸ்சி தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டு சென்னையிலுள்ள மனிதநேய அறக்கட்டளையில் பிரபுதேவா பயிற்சி பெற்றுள்ளார். 

“அந்த நேரத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானது, குடும்ப சூழ்நிலை காரணமாக யூபிஎஸ்சி பாதையில் இருந்து விலகி எஸ்ஐ பணிக்குத் தேர்வு எழுதினேன். எஸ்ஐ பணிக்கான தேர்வுக்கு நல்ல முறையில் தயாரானதால் எழுத்துத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றேன், ஆனால் உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் எஸ்ஐ வாய்ப்பு பறிபோனது," என்று தனது முதல் சறுக்கல் பற்றி கூறுகிறார் பிரபுதேவவா.

யுபிஎஸ்சி கனவும் தகர்ந்து, எஸ்.ஐ பணியும் கிடைக்காத விரக்தியில் சிறிது காலம் கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார் பிரபுதேவா. ஆனால் அவருடைய உள்ளுணர்வு தொடர்ந்து போட்டித்தேர்வுகளை நோக்கியே வழிநடத்திச் சென்றதால் 2016ம் ஆண்டில் குரூப் 4 தேர்வுக்கு படித்து தேர்வெழுதி 200க்கு 174 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 2017ம் ஆண்டில் அஞ்சல் துறை தேர்வில் வெற்றி பெற்ற போதும் முறைகேடு புகாரால் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விதி தொடர்ந்து பிரபுதேவா வாழ்க்கையின் விளையாடினாலும் மனம் தளராமல் தொடர்ந்து போராடி தான் அரசுப் பணிக்குத் தகுதியானவன் அதற்கான திறமை தன்னிடம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார். 

“2017ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வுக்காக தீவிரமாக படித்ததற்கான பலனாக அந்தத் தேர்வில் 200 மதிப்பெண்ணிற்கு 163 மதிப்பெண்கள் எடுத்தேன். தொடர்ந்து குரூப் 4 தேர்வு எழுதி அதில் 300க்கு 274.5 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றுள்ளேன். 3 ஆண்டுகள் வீட்டில் இருந்து போட்டித்தேர்வுக்குத் தயாராகி வந்தது வீண் போகவில்லை. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசு பாடப்புத்தகங்களையும் தினசரி செய்தித்தாள்களையும் படித்து வந்தாலே போட்டித் தேர்வில் தூள் பறக்கச் செய்யலாம்,” என்று ஆலோசனை கூறுகிறார் பிரபுதேவா.

ஒவ்வொரு தோல்வியில் இருந்து தான் நான் தவறுகளை திருத்திக் கொண்டேன், இதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம் 4 ஆண்டுகள். ஆனால் நீங்களும் என்னைப் போன்று காலத்தை வீணடிக்காதீர்கள். இலக்கை அடையும் வரை ஓய்வு கூடாது, தனிப்பட்ட சுக துக்கங்களுக்கு இடம் கொடுக்காமல் உங்களது கடின உழைப்பை காட்டினால் வெற்றி பெறலாம். தோல்வியில் இருந்து தவறை திருத்த வேண்டுமே தவிர இலக்குகளை திருத்தக் கூடாது என்கிறார் பிரபுதேவா.

கடின உழைப்பு, விடாமுயற்சி இவை இரண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல நிச்சயம் உங்களை சாதனையாளர்களாக்குபவை. திட்டமிட்டு, தொடர்ந்து படித்தால் போட்டித் தேர்வில் எளிதில் வெற்றி காணலாம். என்னால் முடிந்தது உங்களாலும் முடியும், உங்களால் முடியாதது யாராலும் முடியாது. இலக்குகள் உயர்ந்தவையாக இருந்தால் அதற்கு வரும் தடைகளும் கஷ்டங்களும் அதிகமாகத் தான் இருக்கும். வறுமை காரணமாக நன்றாக படிப்பவர்கள் கூட போட்டித் தேர்வை கைவிட்டு சென்ற பலரை நேரடியாக பார்த்துள்ளேன். 

உங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமே தவிர வறுமை காரணமாக இருக்கக் கூடாது. என்னால் முடியும் என்பது மட்டுமே உங்களைச்சுற்றி இருக்க வேண்டும் என்ற வாழ்க்கை அனுபவத்தை கூறுகிறார் பிரபுதேவா.

உங்களால் முடியாது பணம் கொடுத்தால் தான் வேலை என்று கூறுபவர்களை சற்று ஒதுக்கி வையுங்கள். உங்களது வெற்றி அவர்களின் வாய் அடைக்கட்டும். அதிர்ஷ்டம் என்பது உங்களின் கடின உழைப்பை பொறுத்து தான் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை, கடின உழைப்பு. விடாமுயற்சி இந்த மூன்றுமே உங்களது தாரக மந்திரமாக இருக்கட்டும் என்பதே பிரபுதேவா எதிர்கால இளைஞர்களுக்குக் கூறும் அட்வைஸ்.

Related Stories

Stories by Priyadarshini