பாரம்பரிய சத்துணவு வகைகளை 'மன்னா' மூலம் உயிரூட்டிய ஐசக் நாசர்!

இந்தியாவின் முன்னோடி சத்து உணவு நிறுவனத்தின் கதை 

4

கடந்த தலைமுறையினருக்கு சத்து மாவு கஞ்சி, சத்தான உணவுகள் என்பது வாழ்கையின் ஒரு அங்கம். மேற்கத்திய உணவு முறையின் ஊடுருவல் நம் பாரம்பரியத்தை பின்னுக்குத் தள்ளிய பின் இவற்றை கொஞ்ச காலம் நாம் மறந்தே போனோம். தற்பொழுது மீண்டும் பாரம்பரிய உணவு வகைகள் மெல்ல உயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் இவற்றை உயிர்பித்த பெருமை "மன்னா" (Manna) நிறுவனத்தை நிறுவிய ஐசக் நாசரை சாரும்.  

'மன்னா ஹெல்த் மிக்ஸ்'  என்ற ஓர் தயாரிப்பில் ஆரம்பித்த ஐசக் நாசர், தற்பொழுது பல்வேறு ஆரோக்கிய உணவுத் தயாரிப்பில் ஈடுபடுவதுடன் சர்வதேச அளவிலும் வெற்றியை நிலை நாட்டியுள்ளார். தென்னகத்தில் இருந்து உலகளவில் தடம் பதித்துள்ள அவரிடம் தமிழ் யுவர்ஸ்டோரி ப்ரேத்யேக நேர்காணல் கண்டது.  


ஏழ்மையான பின்னணியிலிருந்து...

திருநெல்வேலியில் ஆசிரியர் பெற்றோர்களுக்குத் மூத்த மகனாக பிறந்த ஐசக், மிகவும் எளிமையான சூழ்நிலையில் படிப்பை முடித்தார். படிக்கும் காலத்திலேயே தலைமைப் பண்பு உடையவராகவே திகழ்ந்துள்ளார். இதுவே அவர் பின்னாளில் அரிமா சங்கத்தின் குறிப்பிடத்தக்க சமூக பணிகளை ஆற்ற ஏதுவாக்கியது.

"மருந்து நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக முதல் பணி. அதிர்ஷ்டம் கைகொடுக்க மிக விரைவில் வளர்ச்சி கண்டேன்" என்று கூறும் ஐசக் இளம் வயதிலேயே தந்தையை இழந்தது குடும்பச் சுமையை அவர் தோளில் ஏற்றியதாக கூறுகிறார். 

குடும்பச்சூழல் காரணமாக 1991 ஆம் ஆண்டு சென்னை வந்தார். ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தலைவராக பணி புரிந்த சமயத்தில் அவரது நண்பரின் மனைவி சிறிய அளவில் சத்து மாவை நட்பு வட்டத்தில் விற்பனை செய்து வந்தார். 

"அவர் தான் என்னை உணவு தயாரிப்பு வர்த்தகத்தை மேற்கொள்ளத் தூண்டினார். அவரின் வற்புறுத்தலின் பேரில் களம் இறங்கினேன். அவரிடமிருந்து சத்து மாவுக்கான செய்முறையைக் கற்றுக்கொண்டு அதற்கு தகுந்த விலையைக் கொடுத்து காப்புரிமையை வாங்கினேன்" என்று கூறும் ஐசக் அதன் பிறகு அவர்கள் உடன்படிக்கையின் படி இது வரை தொடர்பில் இல்லை என்று தொடக்க நிலையை நினைவுக் கூர்ந்தார்.

'மன்னா' பெயர்க் காரணம்?

"யூதர்களின் புனித புத்தகமாகட்டும் விவிலிய குறிப்பிலாகட்டும் மன்னா என்ற சொல்லுக்கு புனித உணவு அல்லது உடல்நலம் பேணும் உணவு என்ற பொருள் அமையும். மன்னா என்ற ஆங்கில எழுத்தின் மறுதலை அன்னம் என்று வரும். ஆதலால் இந்த பெயர்" என்று விளக்குகிறார்.

வெற்றியிலும் சரிவு

2000 ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் மன்னா ஹெல்த் மிக்ஸ் கோலோச்சியது. இதனை மேலும் வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல போதிய நிதி ஆதாரம் இல்லை என்று கூறும் ஐசக்,

"வெற்றி எங்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருந்தவர்களுக்கு தலையில் ஏறியது. மன்னா என்ற பெயரில் வேறு எந்த பொருளை அறிமுகப் படுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கை எங்களுக்கு மிகப் பெரிய சரிவை தந்தது." என்கிறார்.

2002 இறுதியில் மசாலா பொருள் சந்தையில் ஈடுபடத் துவங்கினோம். "மசாலா சந்தையில் உள்ள சிக்கலை அப்பொழுது நாங்கள் அறிந்திருக்கவில்லை," என்று கூறும் ஐசக் நாசர் "சிக்கலான வர்த்தகச் சூழல் மட்டுமின்றி நெறிமுறையற்ற சந்தையாக அது இருந்தது. நான்கு மாநிலங்களில் மசாலா பொருளை ஒரே நேரத்தில் அறிமுகப் படுத்தியதும் நாங்கள் செய்த தவறு" என்று அதற்கான காரணத்தையும் கூறினார். மசாலாவை பொறுத்தவரை அதன் சுவை மற்றும் விருப்பம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டது. 

இந்த வர்த்தகம் தந்த நஷ்டம் காராணமாக இதிலிருந்து விலகினோம். "எங்களின் முன்னோடி வெற்றி தயாரிப்பான மன்னா ஹெல்த் மிக்ஸ் இதன் தாக்கத்தில் சரிவை சந்திக்கக் கூடாது என்று துல்லியமாக முடிவெடுத்தோம். இந்த பேரடியிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் பிடித்தது," என்று கூறும் நாசர் 2008 ஆம் ஆண்டு வர்த்தகத்தை மீண்டும் புதுப்பிக்க தொடங்கினார். இதே தருணத்தில் நாசரின் சகோதரர் சையத் சாஜன் வளைகுடா நாட்டில் வேலையை விடுத்து இவருக்கு துணையாக நிறுவனத்தில் சேர்ந்தார்.

தொழிலை மீட்கும் முயற்சியில் இருந்த தருணத்தில், மீண்டும் பெரிய சாவலை எதிர் கொள்ள நேரிட்டதாக கூறுகிறார் நாசர். அப்பொழுது பூந்தமல்லியில் அவரது தொழிற்சாலை அமைந்திருந்தது. அருகில் இருந்த அரசியல்வாதியின் குடும்பத்தினர் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். 90 நாட்களில் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. வேறொரு தகுந்த இடம் தேடுவது பெரும் சவாலாக இருந்தது என்கிறார். இறுதியில் பொன்னேரியில் இடம் பார்த்து தொழிற்சாலையை அமைத்தார்.

"என் முன்னே இரண்டு வாய்ப்புகள் இருந்தது. இதே அளவு சம வளர்ச்சி கண்டு திருப்தி அடைவது, இல்லையேல் நிதி திரட்டி மன்னா என்ற ப்ராண்டை பெரிய அளவில் எடுத்துச்செல்வது" என்று கூறும் நாசர் இரண்டாம் வாய்ப்பை எடுத்துச் செல்ல நினைத்து நிதி திரட்டலில் ஈடுபடத் துவங்கினார். 

ஃபல்கரம் வென்ச்சர்ஸ் இந்தியா (Fulcrum Ventures India) என்ற நிறுவனம் கடந்த வருடம் இவர்களது தொழிலில் முப்பது கோடி முதலீடு செய்தது.

வளர்ச்சியை நோக்கி

தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் தனது பல்வேறு பொருட்களை சந்தைப் படுத்தும் மன்னா; NCR , மும்பை, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கால் பதித்துள்ளது.

இந்தியாவை கடந்து அமெரிக்கா, வலைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளிலும் இவர்களது தொழிலை விரிவு படுத்தியுள்ளனர்.

மிகவும் வலுவான பாதையில் எங்கள் பயணம் தொடர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகவே தெரிகிறது" என்று தன்னம்பிக்கை மிளிர சொல்கிறார் நாசர். 

"சமீபத்தில் இவர்கள் அறிமுகப் படுத்திய ஆலிவ் எண்ணை ஊறுகாய் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள மில்லெட் வகைகளாகட்டும் அல்லது எந்த பொருளாகட்டும் எல்லாவற்றிலும் உடல்நலம் பேணும் புதுமையான அறிமுகம பொருளாகவே இருக்க வேண்டும்" என்பதில் மிக தீர்கமாக உள்ளோம்," என்கிறார். 

தொழில்முனைவு பற்றி

எங்களைப் போன்ற முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் அதிக அளவில் சவால்களை சந்தித்துள்ளோம் என்றே கூற வேண்டும். இன்றைய சூழல் புதிய தொழில் முனைவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. அதேப் போல் இன்றைய தலைமுறையினரும் நம்பிக்கை மற்றும் சிந்தனைகள் பாராட்டும் படியாகவே உள்ளனர் என்கிறார்.

"வெற்றி பெற போராட வேண்டும், அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டே இருக்க வேண்டும்..."

இந்தியா மிகவும் வலிமையான இடத்தை நோக்கி பயணிக்கிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் வாய்ப்புகள் நிறைந்ததாகவே உள்ளது. பங்களிப்பின் மூலம் வளர்ச்சி மற்றும் வெற்றியில் பங்கு கொள்ள பெரும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதாகவே பார்க்கிறேன்.

"உங்கள் மனசாட்சிக்கு கட்டுப்படுங்கள். நீங்கள் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக அமையும், வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்ற கூற்றுடன் நம்மிடம் விடை பெறுகிறார். 

இணையதள முகவரி: Manna Foods 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

ஓர் ஊழியருடன் தொடங்கி, இன்று 700 பேருடன் வெற்றிநடை போடும் ஆசிப் பிரியாணி சாம்ராஜ்ஜியம்!

ஃபார்மா விற்பனையில் இலக்கை அடைய உதவும் 'ஃபார்மா ஸ்பியர்'