கும்பகோணத்தில் பிறந்து, ஐபிஎஸ் ஆகிய சுபாஷினி, இன்று அசாம் முதல்வரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி!

0

இந்த ஆண்டு ஜூலை மாதம், ஐபிஎஸ் ஆபிசரான சுபாஷினி சங்கரன் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால்’ இன் பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார் என்று நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. 

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுபாஷினி, தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தவர். பின்னர் 1980’களில் மும்பைக்கு தனது பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார். பள்ளிக்கல்வியை மும்பையில் முடித்த சுபாஷினி, சமூகவியல் பட்டப்படிப்பை செயிண்ட்.ஜேவியர்ஸ் கல்லூரியில் முடித்தார். பின்னர் புது டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலையில் தனது முதுகலை மற்றும் எம்.ஃபில்லை முடித்துள்ளார் சுபாஷினி. 

ஜேஎன்யூ’வில் படித்துக்கொண்டிருக்கும் போதே யூபிஎஸ்சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார் சுபாஷினி. 2010 இல் அதில் தேர்ச்சி அடைந்து, முக்கிய தேர்வில் 243 ரான்க் எடுத்து சிறப்பிடம் பெற்றார். ஐபிஎஸ் தேர்வு செய்த அவர், பயிற்சிக்காக ஹைதராபாத் போலீஸ் அகாடமி பயிற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அசாமில் அவருக்கு பணி அளிக்கப்பட்டு அங்கு குடியேறிவிட்டார் சுபாஷினி. 

“எல்லாருக்கும் புதிதாக இருந்தது. முதலமைச்சரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஒரு பெண்ணாகிய என்னை எல்லாரும் மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டனர்,” என்று கூறியுள்ளார் அவர். 

ஒரு மாநில முதல்வருக்கு பாதுகாப்பு அதிகாரியாக தலைமை வகிப்பது சிரமமான காரியம். சிறிய தவறு கூட இழைக்கமுடியாத சூழ்நிலையில், முதலமைச்சரின் தினசரி பயணம், அவர் செல்லவேண்டிய வழிகளை சுபாஷினி பொறுப்பேற்று திட்டமிடுகிறார். மற்ற காவல்துறை குழுக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவர்களை ஒருங்கிணைத்து, பாதுக்காப்பை கண்காணிக்க எல்லா விதத்திலும் திறன்பட செயல்படுகிறார் இந்த பெண் ஐபிஎஸ்.  

கட்டுரை: Think Change India