சென்னையை புரட்டிப்போட்ட 'வர்தா', பண மதிப்பிழப்பால் கையில் சில்லறை இன்றி தவித்த மக்கள்!

0

டிசம்பர் மாதம் வந்தாலே மனது பதபதைத்துப்போகும் அளவிற்கு சென்னை மக்களை இயற்கை அன்னை இரண்டு ஆண்டுகளாக சோதித்து வருகிறார். கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை அதை தொடர்ந்த வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் இன்னமும் நம் நெஞ்சங்களில் மறையா வடுவாய் இருக்க, அதை மறக்கடிக்கும் அளவில் இந்த ஆண்டு சென்னையை அடித்துத் தள்ளிய சூறாவளிக் காற்று பல்லாயிர மரங்களை வீழ்த்தி சென்னை சாலைகளை காடு போல் காட்சியளிக்க வைத்துள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தை தாக்கிய நாடா புயல், எச்சரித்த அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் வலுவிழந்து போனதால், வர்தா புயல் எச்சரிக்கையை ஒரு சிலர் அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து வந்த செய்திகளும், வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்களை வைத்துக்கொண்டே வர்தா புயலின் வீரியம் பற்றி மெல்ல உணரத்தொடங்கினர் சென்னைவாசிகள். ஞாயிறு நடு இரவு முதல் மெல்லிய மழையில் தொடங்கி காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்தது. திங்கள் அன்று காலையில் இருந்தே பெரும்பான்மை இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. மதிய பொழுதில் வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்தபோது, மணிக்கு 120 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று அடித்து சென்னையையே ஒரு சில மணி நேரங்கள் உலுக்கி எடுத்தது. 

புயலை தொடர்ந்து, 18 பேர் உயிரிழந்தனர், சுமார் 400 வீடுகள் அடித்து செல்லப்பட்டது. பத்தாயிரத்துக்கும் மேலான மரங்கள் சாலைகளிலும், வீடுகள், கட்டிடங்கள் மேலும் விழுந்து கார், பைக் என்று பல பொருட்களை நொறுக்கியுள்ளது. சுமார் 600 மின் கம்பங்களும் காற்றின் வேகத்தில் சாய்ந்து விழுந்துள்ளது. 200 ட்ரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.   

கடந்த மாதம் இந்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பின் காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைவாகவே இருந்துவந்தது. ஏடிஎம், வங்கிகளில் கூட்ட நெரிசல் குறையாமல் இருந்த வந்த நிலையில், வர்தா புயல் சமயத்தில் பணப்பிரச்சனை மக்களிடம் மேலோங்கி காணப்பட்டது. திங்கள் கிழமை முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மின்சாரத் தடை மற்றும் இணையம், மொபைல் போன் நெட்வொர்க் பிரச்சனைகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்ய முடியாமல் மக்களும், சில்லறை வர்த்தகர்களும் தவித்தனர். கையில் குறைவாகவே பணம் வைத்திருந்ததினால் பலரால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்கமுடியாமல் போனது. கடைகளில் கார்ட் பெறப்படாது என்ற போர்டுகளும் தொங்கின. 

பட உதவி: Shutterstock
பட உதவி: Shutterstock

இது பற்றி ஊடகவியலாளர் ராதா மணாளன் கூறுகையில்,  

“கடந்த ஒரு மாதமாகவே, கையில் பணமில்லாமல் தான் நான் இருக்கிறேன். வங்கியில் இருந்து எடுக்க முடிந்த கொஞ்சம் பணத்தையும் மிக கவனமாக செலவு செய்தேன், பெரும்பாலும் கார்டுகள் தான் பயன்படுத்தினேன். புயல் வந்த போது, மின்சாரம் இல்லாததாலும், நெட்வொர்க் பிரச்சினை காரணமாக எந்த கடையிலும் கார்டுகள் பயன்படுத்த முடியவில்லை. என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட் ஒன்றில் இருந்து வெறுங்கையோடு வந்தேன். முன்னூறு ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினேன், ஆனால், என்னிடம் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. சிறு மளிகை கடை ஒன்று எனக்கு கடனுக்கு பொருளைக் கொடுத்து உதவியது,” என்றார்.

இது இயற்கை சீற்றத்தையும் மீறி, பண மதிப்பிழந்த நடவடிக்கையின் சேதம் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது.

கடந்த வாரம் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ப்ரியா, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஊசி ஒன்று போட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. செவ்வாய்கிழமை அந்த ஊசிக்கான மருந்தை வாங்க, கையில் அதற்கான போதிய பணம் இல்லாமல் நகர் முழுதும், அவருடைய கணவர் அலைந்திருக்கிறார். இது பற்றி விளக்கிய ப்ரியா,

“ஊசிக்கான மருந்து வாங்க, என் கணவர் மருந்து கடைக்குச் சென்றார். அந்த மருந்தின் விலை பத்தாயிரம் ரூபாய் அவ்வளவு பணம் கையில் இல்லை. எங்கள் கார்டை பயன்படுத்த முயன்ற போது, நெட்வர்க் பிரச்சனையால் நாங்கள் இட்ட பின் நம்பர் தப்பானது என ஸ்வைப்பிங் மெஷின் காட்டியது. பல கடைகளில் அலைந்த பிறகு, அதே கார்டை பயன்படுத்தி இரவு தான் மருந்து வாங்க முடிந்தது. பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் மருந்தை எடுத்துக் கொள்ள முடியாமல் தாமதம் ஆனது” என அவர் கூறினார். 

மின் தடை, நெட்வொர்க் பிரச்சினை, பண மதிப்பு நீக்கம் காரணமாக உருவான பணப்பற்றாக்குறையே, வீட்டு பெண்கள் முதல் சிறு தொழில்முனைவோர்கள் வரை அவதிக்குள்ளாக்கியது. அது சென்னை புயல் சமயத்தில் உச்சத்தை தொட்டது எனலாம். 

ஃபர்னிபை ஹோம் டெகோர் நிறுவனர் சத்யா, தனது அனுபவத்தை பகிர்கையில், ”சென்னை முழுதும் சிதைந்து கிடக்கிறது. சிறு வணிகர்கள், மளிகை கடைக்காரர்களிடம் சில்லறை இல்லை. எப்படியோ போராடி வங்கி காசோலை வழியே இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வாங்கினேன். அதற்கு சில்லறை கிடைக்காமல் இன்னமும் வைத்துக் கொண்டிருக்கிறேன்.”

பட உதவி: ஃபேஸ்புக்
பட உதவி: ஃபேஸ்புக்
”பணப்பற்றாக்குறை + புயல் = வணிகர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பெரும் சேதம். குறிப்பாக, ஃபர்னிச்சரை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். கடந்த மூன்று நாட்களாக இருக்கும் மின் தடையின் காரணமாக, ஃபோன்களை ரீசார்ஜ் செய்யவும் முடியவில்லை. மொபைல்கள் வேலை செய்யாத காரணத்தினால், என்னால் குழுக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றது போல இருக்கிறது,” என்றார் சத்யா. 

எச்பி இந்தியா நிறுவனத்தின் மைய மேலாளர் அமுதா சுரேஷ் தனது அனுபவத்தை ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டிருந்தார். அதில், 

”சனிக்கிழமை வங்கி விடுமுறை, அதற்கும் முன்பே பல ஏடிம் களில் பணம் இல்லை, ஞாயிறு, திங்கள் இன்று செவ்வாய், எங்கும் மின்சாரம் இல்லை, கடைகளில் கார்டுகளை உபயோகிக்க முடியவில்லை, எதற்கும் பணம் கேட்கின்றனர், கையில் இருபது ரூபாயை வைத்துக்கொண்டு இன்னமும் மின்சாரம் வராத இந்த நாளையும் கடக்க வேண்டும்! இதுதான் எதார்த்த நிலை, அடிப்படைக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தாமல் செய்யும் எந்தச் செயலும் மக்களுக்குத்தான் பெரும் துன்பத்தைத் தரும், தருகிறது..."


அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டு தாய்நாடு திரும்பிய மாணவர், சபரீஷ் சுப்பிரமணியன், சிகாகோவில் இருந்து சென்னை பயணித்தார். விமான நிலையம் மூடிய காரணத்தினால், டிசம்பர் 12 ஆம் தேதி அபுதாபி விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். இங்கே மொபைல் ஃபோன் சிக்னல் இல்லை, பணம் இல்லை, கார்டுகள் வேலை செய்யவில்லை.

“இருபது மணி நேரம் அபுதாபி விமான நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம் 500 மற்றும் 1000 ரூபாய் இந்திய நோட்டுகள் மட்டுமே இருந்தது. சென்னை இறங்கியதும் சிரமமாக இருக்கும் என்பதால் 50 டாலர் அதாவது சுமார் 3000 ரூபாய் செலவழித்து, புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒன்றை அபுதாபியில் பெற்றேன். இந்தியா வந்த போது என்னிடம் இந்திய சிம் கார்டுகள் எதுவும் இல்லை. அதனால், ஊபர் ஓலா என எதுவும் பயன்படுத்த முடியவில்லை” என்கிறார்.

உள்ளூரில் டாக்சி பிடித்து தன் வீட்டை அடைய 900 ரூபாய் செலவழித்திருக்கிறார் சபரீஷ். டாக்சி ஓட்டுனரிடம் இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறை இல்லாததால், நகர் முழுதும் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முயன்று பலனளிக்கவில்லை. இறுதியாக, வண்டியில் இருந்து இறங்கிய பிறகு, தன் சகோதரியிடமிருந்து சில்லறை வாங்கி கொடுத்திருக்கிறார் சபரீஷ்.

பட உதவி: NDTV
பட உதவி: NDTV

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமெரிக்காவில் இருந்த போது பெரிதும் ஆதரித்தேன். ஆனால் இங்கே வந்து பார்த்து பணப்பற்றாக்குறையை அனுபவித்த பொழுதே உண்மை நிலையையும் மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ள முடிந்தது” என்றார் சபரீஷ். 

கடந்த ஒரு மாதமாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சில அசெளரியங்கள் இது போன்ற அசாதாரண சூழ்நிலை மற்றும் பேரழிவுக்காலங்களில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக மின்சாரத் தடை, இணையம் மற்றும் நெட்வர்க் பிரச்சனை காலங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சாதியமற்ற நிலையில் மக்கள் எத்தகைய மாற்று வழிகளை நாடவேண்டும் என்பதை மத்திய அரசு விளக்கி வழிகாட்டினால் உதவியாக இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.