தடையும், வருத்தமும்: 14 முறை 'ஜல்லிக்கட்டு' களம் கண்ட கேமரா கலைஞரின் பதிவு!

0

ஜல்லிக்கட்டு... மாடு பிடிக்கும் வீரர்களுக்கும்.. புகைப்பட கலைஞர்களுக்கும்.. ஒரு சவால் !

ஒரு நல்ல புகைப்படம் என்பது ஆயிரம் வார்த்தைகளை உள்ளடக்கியது என்பது ஒரு பொதுவான கருத்து. புகைப்படக் கலையில் நிறைய பிரிவுகள் உண்டு. எந்தப் பிரிவில் இருந்தாலும், தானும் சென்று ஜல்லிகட்டை படம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இந்திய மற்றும் அயல் நாட்டுப் புகைப்படக் கலைஞர்களுக்கு எப்போதும் இருக்கும் அவா. ஒவ்வொரு வருடமும் போட்டிப் போட்டுக்கொண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பலர் ஆர்வத்துடன் படம் பிடிப்பதுண்டு..

தினமலர், தி ஹிந்து மற்றும் அமெரிக்கப் புகைப்பட நிறுவனமான அசோசியேடட் பிரஸ் போன்ற நிறுவனங்களில் 28 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராக பணிபுரிந்த எனக்கு, இந்த ஜல்லிக்கட்டு காளைகளை படம்படிப்பது 14 முறை பழக்கமானவை. பிறந்து வளர்ந்ததே மதுரை என்ற காரணத்தினால் என்னவோ, என் மண்ணின் விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு மீது ஒரு ஆத்மார்த்தமான ஒட்டுதலும் உண்டு.

1986இல் முதன் முறையாக தினமலர் நாளிதழுக்காக நான் ஜல்லிக்கட்டை படம் பிடிக்கச் சென்றேன். இடையில் பணி நிமித்தமாக சில வருடங்கள் நான் டெல்லியில் 'தி ஹிந்து' பத்திரிக்கையில் பணி புரிந்த போதும், தனிப்பட்ட ஒரு விருப்பத்தோடு அங்கிருந்து இங்கு வந்து ஜல்லிக்கட்டை புகைப்படங்கள் எடுத்ததும் உண்டு.

பிறகு வெளிநாட்டுப் புகைப்பட நிறுவனத்திற்கு சென்னையில் இருந்து பணியாற்றும்போது, ஒவ்வொரு வருடமும் இந்த காளைகளை நான் படம் பிடிக்க தவறியதே இல்லை...

ஜல்லிகட்டு அனுபவம்

மக்கள் கூட்டமோ ஆயிரம் ஆயிரம்... புகைப்படக் கலைஞர்கள் நூற்றுக்கும் மேல். அதிகாலையே ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களுக்கு சென்று நல்ல தேர்ந்த இடமாக பார்த்து இடம் பிடித்து உட்கார்ந்து தயாராகி விடுவோம். நாள் முழுக்க 400 காளைகளை அடக்கும் வீர விளையாட்டை படம் பிடிப்பது ஒரு சுவாரசியமான விஷயம் தான். அனைத்துக் காளைகளும் சாகசம் செய்யும் என எதிர்பார்க்க முடியாது. எனினும் எந்த காளை சாகசம் செய்யும் என்று கணித்து விடவும் முடியாது. காளைகள் ஒவ்வொன்றையும் புகைப்பட லென்ஸ் மூலம் தொடர்ந்து பார்த்து, சிறப்பான புகைப்படம் எப்போது கிடைக்கும் என காத்திருப்பது பழக்கமாகிப் போன ஒன்று. அதிர்ஷ்டம் புகைப்பட கலைஞர் பக்கம் இருந்தால், சந்தர்பத்தை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு நல்ல புகைப்படக் கலைஞராக பயிற்சி பெற்றிருந்தால், ஒரு சிறந்த ஆக்ஷன் புகைப்படம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் எப்போதும் அப்படி அமைவது இல்லை. நாம் எங்கு இருக்கிறோமோ அதற்கு எதிர் பகுதியில் நடக்கக் கூடிய நல்ல காட்சிகளை படம் பிடிக்கும் சாமர்த்தியமும் வேண்டும்.

நிபந்தைகளுடன் ஜல்லிக்கட்டுக்கு

2004 வரை நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கும் அதற்கு பின் நடந்தவைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

சீறி வருகின்ற காளைகளை அடக்க ஒரு பெருங்கூட்டமே மைதானத்தில் இருக்கும். எந்த காளை எங்கு புகுந்து செல்லும், என்ன நடக்கும், யாரைத் தாக்கும், புகைப்படக் கலைஞர்கள் எந்த காட்சியை எடுப்பது, எதை விடுப்பது என்ற சவால்கள் எல்லாம் செத்துப் போனதென்னவோ உண்மை.

2004க்கு பிறகு வந்த புதிய சட்டங்களாலும், சமூக மிருக நல ஆர்வலர்களின் கட்டுப்பாட்டாலும் தொன்று தொட்டு நடந்து வந்த ஒரு வீர விளையாட்டின் தன்மை மாறிவிட்டதென்றே சொல்வேன். மூங்கில் கம்பு வேலிகள், அதிகமான காவல், வரைமுறைகள், காளைகளின் மருத்துவக் கண்காணிப்பு, குறிப்பிட்டப் பதிவு செய்துள்ள சில வீரர்களே காளைகளை அடக்கலாம் என அதிகமான கெடுபிடிகள் காணப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சட்டைகளை; மஞ்சள், பச்சை, சிவப்பு என வீரர்களை அணியச் செய்ததில் புகைப்படம் மிக நன்றாக அமைந்தாலும் படங்களின் உயிரூட்டம் இறந்து போனது...

ஒவ்வொரு காளையும் வாடிவாசல் எனப்படும் முகப்பிலிருந்து வெளிவரும் முதல், அது காமெராவின் கண்களில் இருந்து மறையும் வரை பின் தொடர்ந்து படம் எடுப்பது என்பது ஒரு சுவாரசியம். இடித்து பிடித்து நெறுக்கி, 10 பேர் உட்காரும் இடத்தில 25 பேர் உட்கார்ந்து, அதற்கும் பின்னால் நின்று கொண்டு கிடைக்கும் இடைவெளியில் காமெராவின் லென்ஸ்களை சொருகி, கட்டப்பட்டிருக்கும் மூங்கில் மேடை இப்போதோ, எப்போதோ சரிந்து விழக்கூடும் என்ற நிலையிலும் நாள் முழுதும் படமாக்குவது ஒருவித அனுபவமே... புகைப்படக் கலைஞர்களின் காமெரா ஒரே திசையில் இங்கும் அங்கும் அசைந்து காளைகளை பின் தொடர்வதைப் பார்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

பத்திரிக்கைப் புகைப்பட கலைஞர்களுக்கு இந்த நெரிசல் அடிதடி புதியதல்ல. வாரத்தில் ஒருமுறையாவது அவர்களுடைய பத்திரிக்கைத் துறையில் இது ஏற்படுவது சகஜம் தான். ஆனால் பிற கலைஞர்களுக்கு இது சற்று கடின செயல் தான், இது மாதிரி கஷ்டப்பட்டு, கூட்டத்தில் இடிபட்டு, காத்திருந்து இக்கட்டான சூழ்நிலைகளில் காளைகளை சரிவர படமாக்க முடியாதவர்கள் பலர் வெறுத்து போய், கிடைத்த வரைப் போதும் என சென்று விடுவதும் உண்டு..

சாதாரண மக்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம், "அதோ காளை மிரண்டு வருகிறது ஓடு" என குரல் வரும் போது, பலர் அரண்டு மிரண்டு ஓடி தன் உயிரை காப்பற்றிக் கொள்ள நினைக்கும் வேளையில், "எங்கே காளை என காளை ஓடி வரும் திசை நோக்கி ஒடுபவனே.. நல்ல புகைப்பட கலைஞன்"...

ஜல்லிக்கட்டில் ரசித்த காட்சிகள்

ஜல்லிக்கட்டில் பல சிறப்பான புகைப்படங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காளையை நோக்கிச் செல்லும் வீரர், தனது பலம் கொண்டு ஆக்ரோஷத்துடன் அதனை அடக்கும் தெளிவான படம் ஆகட்டும், காளையோ அல்லது வீரரோ துள்ளி எழும் காட்சியோ, காளை வீரரை கொம்பால் முட்டித் தூக்கி தலைகுப்புற வீழ்த்தும் காட்சியோ, எல்லாமே பரபரப்பாகவே இருக்கும். சில நேரங்களில் ஒரே சமயத்தில் இரண்டு காளைகள் களத்தில் புகுந்திடும் பொழுது எந்த காளையை கேமரா வழியே படம் பிடிப்பது என்று போட்டிக்குரிய விஷயமாகிவிடும். 

யாரிடமும் பிடிபடாமல் செல்லும் காளை, சிறிது நேரத்தில் திரும்பி வந்து கூட்டத்தை ஒரு கலக்கு கலக்கி விட்டு செல்லும். சில காளைகள் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல் போல் பாய்ந்து யாராலும் பிடிக்க முடியாமல் ஓடிவிடும்... ஒரு சில பழக்கப்பட்ட காளைகள் வரும்போதே அறிவிப்பாளர் தெளிவாக சொல்லி விடுவார்.. இந்த காளை இந்த ஊரை சேர்ந்தது, இதை பிடிப்போருக்கு இதெல்லாம் பரிசு என்று... சில காளைகள் களத்தில் நின்று தன்னை யாரும் தொட்டுவிடாதபடி பார்த்து, நின்று நிதானமாய் கவனித்து, அத்தனை பேரையும் எதிர் கொண்டு தப்பித்துச் செல்லும் வீரம் வார்த்தைகளில் அடங்கா காட்சியாகும்.

2001இல் ஒரு காளை அதிக பட்சமாக 30 நிமிடத்திற்கும் மேல் களத்தில் நின்று, நூற்றுக்கணக்கான வீரர்கள் அதை அடக்க முயற்சி செய்தும் யாருக்கும் பிடி படாமல், எவருக்கும் அடங்காமல், தன்னை தொட வரும் அனைத்து வீரரையும் புரட்டிப் போட்டு களத்தில் நின்று புழுதி கிளப்பி சாகசம் செய்து நீயா நானா என எதிர் கொண்ட சம்பவம் இன்றும் என் அனுபவத்தில் என்னால் மறக்க முடியாத நிகழ்வு.

ஜல்லிக்கட்டு தடை என் பார்வையில்

விலங்கின பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவது போல், காளைகளைக் கொடுமை படுத்துவது, வாலை கடித்து அதற்கு கோபமூட்டுவது, மது அருந்த வைப்பது என்பது போன்ற நிகழ்வுகளை என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதில்லை. காளை களத்தில் வந்த பிறகு இரண்டு மூன்று பேர் அதை அடக்க முயற்சிக்கும்போது மாடு தவறி விழுவது என்பது மிக சாதரணமான ஒன்று, இதனால் காளை மன அழுத்தத்திற்கு ஆளாகி விடும் என்று சொல்வதை என் அனுபவத்தில் எற்றுகொள்வதாய் இல்லை. அது ஒரு மிருகம், அதன் கோபங்கள் இயற்கை. அது ஜல்லிக்கட்டிற்காகவே வளர்க்கப்பட்டு பயிற்சி பெற்றது.

2004 உயர் நீதி மன்றம் கோட்பாடுகளுக்குப் பின்னர் கிராம மக்கள் தங்களுடைய காளைகளை செவ்வனே வளர்த்து, ஆரோக்கியமாகவும் எந்த வித மீறலும் இன்றி 5 வருடங்கள் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டை நடத்தி வந்தனர். இதை என்னை போல் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் கண்டு களித்தவர்கள் நன்கு அறிவர்.

வருடம் முழுதும் தன் குடும்பத்தில் ஒருவராய் காளையை வீரம் மிகுந்த ஒரு பிள்ளையை வளர்த்து, அந்த ஒரு நாளுக்காகக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை இந்தத் தடை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது உண்மை, என்னையும் சேர்த்துதான்..

இந்த கட்டுரையை எழுதியவர்: லஷ்மண் ஐயர், புகைப்படக் கலைஞர் மற்றும் புகைப்படக்கலை ஆசிரியர்

கோப்புப் புகைப்படங்கள்: லஷ்மண் ஐயர்