'நாம் அனைவரும் அற்புதமானவர்களே...' : நம்பிக்கையூட்டும் தீபா ஆத்ரேயா

ஸ்கூல் ஒஃப் சக்ஸஸ் மூலம் இரண்டு லட்சதிற்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கு தலைமைப் பண்புகளில் பயிற்சியளித்தவர்

0

உலகிலேயே அதிக இளம் வயதினரை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது என்பது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்ட இளைஞர்களை சரியாக வழிநடத்தி நம்பிக்கையையும், நல்லெண்ணங்களையும்  விதைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது.

இரு முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியவர், தனது தன்னம்பிக்கை மூலமே வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், வெற்றி பெறுவதற்கான பண்புகளையும் இளம் தலைமுறையினருக்கு பயிற்சியளிக்கிறார். ஸ்கூல் ஒஃப் சக்ஸஸ் மூலம் இரண்டு லட்சதிற்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினருக்கு இது வரை பயிற்சி அளித்துள்ள, தீபா ஆத்ரேயா இடம் யுவர் ஸ்டோரி உரையாடியது. இளம் பருவத்தினர் சந்திக்கும் சவால்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு குறித்து கேட்டறிந்தோம்.

தீபா ஆத்ரேயா
தீபா ஆத்ரேயா

பதின்பருவத்தினர் சந்திக்கும் சவால்கள்

நிராகரிப்பு, தோல்வி ஆகியவற்றை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. அளவுக்கு அதிகமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பினை அமைத்துக் கொடுப்பதே இதற்கு முக்கியக் காரணம். எதுவும் எளிதாக கிடைக்கும் பொழுது, இல்லை என்ற நிதர்சன தருணம் இவர்களை வெகுவாக பாதிக்கிறது. தோல்வி நேரும் பொழுது சகஜமாக எடுத்துக் கொண்டு அடுத்து என்ன என்ற மன நிலைக்கு பிள்ளைகளை தயார் செய்வது மிக அவசியம் என்றார். 

பெற்றோர்களின் பங்கு

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை அவசியம் சரி செய்தல் வேண்டும். பெரும்பாலும் நான் பார்த்த வரை குழந்தைகள் தங்களின் பெற்றோரிடம் எதையும் பகிரும் நிலையில் இல்லை என்றே கூற வேண்டும். தாங்கள் சிறந்ததையே அவர்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக நிறைய சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அதனலாயே நீங்கள் அவர்களின் உற்ற நண்பன் என்றாகி விடாது. அடுத்தவர்களோடு ஒப்பிடாமல், குறை கூறாமல், அவர்களின் எண்ணத்தை காது கொடுத்து கேட்டு வழி நடத்தினாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆசிரியர்களின் பங்கு

கற்பித்தலை தவமாக மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. பல ஆசிரியர்கள் இந்தத் துறையில் ஈடுபாடின்றியே உள்ளனர். இன்று ஆசிரியப் பணி என்பது ஒரு பொழுதுபொக்கு வேலையாக மாறி உள்ளது. ஆசிரியர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை செப்பனிடும் திறன் படைத்தவர்கள். ஒரு ஆசிரியர் தனது கற்பிக்கும் வாழ்நாளில் பல மாணவர்களை சந்திக்கிறார். ஒவ்வொரு பாட்ச்சிலும் ஒரு மாணவனை சாம்பியனாக உருவாக்கினால்,  நிறைய கலாம்களும், கல்பனா சாவ்லாக்களும் இந்நாட்டுக்கு கிடைக்கும் வாய்புள்ளது. ஆசிரியர்களின் எண்ணங்களிலும் அணுகுமுறையிலும் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

இளைஞர்களுக்கான அறிவுரை 

கவனச்சிதறல்களிலிருந்து வெளியில் வாருங்கள். உங்களின் கனவை அறிந்து அதில் முழுமையாக ஈடுபடுங்கள். ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது உங்களின் கனவு, ஆர்வம் ஆகியவற்றை மெருகூட்டுவதில் செலவிடுங்கள். உங்கள் ஒவ்வொருவரிலும் திறமை ஒளிந்துள்ளது, அதனை வெளிக்கொணர்வது உங்கள் கையில் தான் உள்ளது.

இவரின் அறிவுரை மற்ற குழந்தைகள் பெற்றோர்களுக்கு என்று மட்டுமல்லாது, தனது வீட்டிலும் செயல் படுத்துகிறார். இவரின் மகள் காமாக்‌ஷீ சமீபத்தில் லிட்டில் மிஸ் வொர்ல்ட் கோல்ட் 2017 பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவிலிருந்து ஒருவர் இந்த பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

தீபாவின் மகள் காமாக்‌ஷி
தீபாவின் மகள் காமாக்‌ஷி

சிறு வயது முதலே மாடலிங் துரையில் ஈடுபாடு கொண்ட தன் பெண்ணை அத்துறையில் சாதிக்க ஊக்கம் அளிக்கிறார். பெண் சக்தியில் அதிக நம்பிக்கை உடைய காமாக்ஷீ தனது ஒன்பாதவது வயது முதலே சமூக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

"உயரப் பறந்திடு ஆனால் நம் பாரம்பரியத்தை கடைபிடி" என்ற அவர் தாயின் சொற்களை அப்படியே கடைப்பிடிப்பதாக கூறுகிறார் காமாக்ஷீ ஆத்ரேயா.

விதைப்பது சரியாக இருப்பின் நாம் அறுவடை செய்வதும் நன்மையே பயக்கும் என்ற கூற்றின் படி, இளம் வயதிலேயே சரியான வழிகாட்டுதலோடு நம் இளைஞர்களை இட்டுச் சென்றால், கலாம் அவர்கள் கண்ட கனவு இந்தியா மெய்படும் என்பதில் ஐயமில்லை.

a passionate communication professional, loves writing , networking, travelling, strongly believes that every brand has a compelling untold story to share. follow me @sandhyatwits

Related Stories

Stories by Sandhya Raju