இந்தியாவின் முதல் காப்ஸ்யூல் குழந்தை உருவாக்கிய ஈரோடு மருத்துவர் நிர்மலா சிறப்புப் பேட்டி!

மருத்துவர் தினத்தில் தன் அனுபவங்களை பகிர்கிறார்

2

தேசிய மருத்துவர்கள் தினம்!

அறுபத்தி நான்கு வயது பெண்மணியை தாய்மை அடையச் செய்ததை மருத்துவ சாதனையாக இன்றளவும் பி பி சி தளத்தில் இடம் பெற்றிருக்கிறது இவரது பெயர். இந்தியாவின் முதல் காப்ஸ்யூல் குழந்தை, தமிழகத்தின் முதல் ப்ளாஸ்டோசிஸ்ட் குழந்தை என  நீள்கிறது மகப்பேறு மருத்துவர் நிர்மலா சதாசிவத்தின் சாதனை பட்டியல்.

ஈரோடு மாவட்டத்தில் முதல் ஐ வீ எஃப் க்ளினிக் Genesis Fertility நிறுவியது முதல் இது வரை பல குடும்பங்களில் புன்னகைக்கு வழி வகுத்தவரிடம்,  மருத்துவர் தினத்தை முன்னிட்டு தமிழ் யுவர் ஸ்டொரி, அவர் கடந்து வந்த பாதை மற்றும் வருங்காலம் குறித்து உறையாடியது. 

டாக்டர் நிர்மலா உடன் குழந்தை பெற்ற தம்பதிகள்
டாக்டர் நிர்மலா உடன் குழந்தை பெற்ற தம்பதிகள்

உங்கள் மருத்துவ பயணத்தில், கருவுறாமை சிகிச்சையை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

1978-ம் ஆண்டில் உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை லண்டனில் பிறந்தது. அப்பொழுது நான் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தேன். அத்தை, மாமா, உறவின சகோதரர்கள் என குடும்பத்தில் பல மருத்துவர்கள், ஆகவே மருத்துவக் கனவு இயல்பாகவே எனக்குள் இருந்தது. 

முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை என்ற செய்தி மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட என்னைத் தூண்டியது. இந்தியாவிலும் இது போன்று நான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மருத்துவ படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று, என் கனவும் என்னுடன் பயணம் மேற்கொண்டது. 

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் IVF துறையில் நிபுணத்துவம் பெற்றேன். இந்தியா திரும்பியதும் அப்போலோ மருத்துவமனையில் சில காலம் மருத்துவம் பார்த்த பின், 1996-ம் ஆண்டில் சென்னைக்கு வெளியே முதல் IVF சென்டரை நிறுவினேன்.

இன்னொரு உயிரை பெற உதவும் உங்களின் மறக்க முடியாத அனுபவங்கள் சிலவற்றை பகிர முடியுமா?

ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை ஜனனிக்கும் தருணம் சிலிர்ப்பூட்டும் அனுபவமே. 1997 ஆண்டில் எனது முதல் IVF பேஷன்ட் கருத்தறித்த தருணம், ஃப்ரோஸன் முறையில் கருத்தறித்த முதல் குழந்தை, தமிழகத்தின் முதல் ப்ளாஸ்டோசிஸ்ட் முறையில் கருத்தறித்த குழந்தை, லேசர் முறையில் கரு உருவாக்கம் என பல உண்டு. அறுபத்தி நான்கு வயதான ஒருவருக்கு ப்ளாஸ்டோசிஸ்ட் முறையில் கருத்தறிக்க உதவிய நிகழ்வு, இந்தியாவின் முதல் காப்ஸ்யூல் குழந்தை உருவாக்கியது இவையெல்லாம் மறக்க முடியாத தருணங்கள். 

பெருகி வரும் கருவுறாமைக்கு காரணங்கள் என்ன?

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் பிராதன காரணம். மாசு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிகொல்லிகள், செயற்கையாக உணவில் சேர்க்கும் பொருட்கள், உணவு பழக்கங்கள் என பலவும் இதில் காரணங்களாகிறது. அலைபேசி, லாப்டாப் இவைகளின் அதிகப்படியான உபயோகம் நம் உடலில் ஹார்மோன் அளவை அதிகப்படுத்துவதோடு, மெலடோனின் அளவை வெகுவாக குறைக்கிறது. இது தவிர காலம் கடந்து திருமணம் புரிதல், வேலை பளு இவைகளும் காரணிகள்.

கருவுறாமை பற்றிய புரிதல் எந்த அளவில் உள்ளது? அதே போல் அதிக அளவில் கருவுறாமை மையங்கள் முளைத்திருக்கிறது, இதைப் பற்றி?

பெருகி வரும் கருவுறாமை தீர்க்க அதிக அளவில் இதற்கான மையங்கள் அவசியம் தான். எந்த வகையான சிகிச்சை தேவை என்பதில் அறியாமை இருக்கத்தான் செய்கிறது. பல காரணங்களுக்காக போதிய புரிதல் இல்லாமல் மையங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். கவனம் நிச்சயம் தேவை. முதலில் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை, மையத்தை பற்றிய ஆராய்ச்சி, அதாவது ICMR, ISAR, NARI போன்ற சான்றிதழ்கள் பெற்றவையா என்றும் மருத்துவரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். 

உங்களின் ஆராய்ச்சிகள் பற்றி..

1996 ஆண்டு அநேக கருத்தரிப்பு மையங்கள் இரண்டு நாள் எம்ப்ரியோ கல்ச்சர் முறையில் வெற்றி விகிதத்தை உயர்த்த பாடுபட்ட நிலையில், பெல்ஜியம் நாட்டிலிருந்து கல்ச்சர் மீடியா மூலமாக மூன்று நாள் எம்ப்ரியோ முறையில் நான் ஆராய்ச்சி மேற்கொண்டு, அதிக அளவில் வெற்றி கண்டேன். 

2000-ம் ஆண்டு ஒரு சர்வதேச கருத்தரங்கில் சிங்கப்பூர்  நேஷனல் யூனிவர்சிட்டி மருத்தவமனியின் முன்னோடி ஆராய்ச்சியாளரை சந்திக்க நேர்ந்தது. உடம்பின் வெளியே, 5 நாள் எம்ப்ரியோவை கல்ச்சர் செய்யும் முறை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இதில் எனக்கு பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார். Prof. ஆரிஃப் போங்கொ கீழ் பயிற்சி பெற்று, இந்தியாவில் முதன் முறையாக இதை அறிமுகம் செய்தேன். இதுவே ’ப்ளாஸ்டோசிஸ்ட் கல்ச்சர்’, தமிழகத்தின் முதல் ப்ளாஸ்டோசிஸ்ட் குழந்தை ஜூன் 2001 ஆண்டு பிறந்தது. 

இந்த செயல்முறையில் மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டேன். 2012 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள முண்ணனி ஆராய்ச்சி நிறுவனமான CCMB-ல் பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியாளர் Prof. கே.தங்கராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் பிஎச்டி மேற்கொண்டேன். 2003 ஆண்டு லேசர் முறை கொண்டு கருதறித்தல் முறையை செய்தேன். 20000க்கும் மேற்பட்ட எம்பிரியோக்களை எனது லேசர் உபகரணம் கண்டுள்ளது. இந்தியாவிலேயே லேசர் உபகரணம் உள்ள இரண்டாவது மையம் எங்களுடையது என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

உங்கள் குடும்பத்தில் அனைவருமே மருத்துவர்கள். நேரத்தை எப்படி சமாளிக்கறீர்கள்?

ஆம், அனைவருமே மருத்துவர்களாக இருந்தாலும் குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருந்தததில்லை.  இரண்டையும் சமமாக சமாளிப்பபதில் தான் வெற்றி. என்னுடைய மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் எட்டு மணி நேர வேலை என்பதில் கவனமாக உள்ளேன். IVF சிகிச்சை பத்து நாட்கள், எனது ஆராய்ச்சிக்கு நேரம் என்று வகைப்படுத்தி வேலை செய்வதால், சிரமம் இருந்ததில்லை. ஒரு நாளில் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் மட்டும் தான் என் வேலை நேரம். 

மருத்துவத்தை தாண்டி உங்களின் நேரத்தை எவ்வாறு செலவிடுவீர்கள்?

என் பேத்தியுடன் செலவிடும் நேரம் தவிர்த்து, எனது துறைச் சார்ந்த புத்தகங்களை படிப்பேன். ஸ்டெம் செல் சிகிச்சை முறை பற்றி அதிகம் படிக்கிறேன். எந்த வித நோய்க்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் தீர்வு காணலாம், இந்த முறையை பிற மருந்துகள் போன்று மருந்தகத்தில் பெறச்செய்வதே எனது  நோக்கம்.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...

மருத்துவ படிப்பு என்பதே கடினமான ஒன்று, இந்தத் துறையை தேர்ந்தெடுத்த பின் முழு மூச்சுடன், அதற்கான அர்பணிப்பு, எதில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்ற இலக்குடன் படிக்க வேண்டும். 

நோய்க்கான சிகிச்சை மட்டுமின்றி, நோயாளியின் முழு நலத்தில் அக்கறை கொண்டு, அவர்களை சரியாக வழி நடத்தல் வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபட்டால் நம் வருங்கால தலைமுறையை பல இன்னல்களிலிருந்து காக்க முடியும்.

மருத்துவ துறை பற்றி, இளம் மருத்துவர்கள் அவர்களது பாதையை எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற இவரது ஆர்வமான பேச்சு, மருந்து சிகிச்சை முறையை செல் சிகிச்சை முறை முன்னெடுக்கும் என்ற கோணத்தில் அணுகுமுறை, ஆராய்ச்சி மூலம் அதிக செலவில்லாத அனைத்து மையங்களிலும் எளிய முறை கருவுறாமைக்கான சிகிச்சை என இவரின் லட்சிய திட்டங்கள் பிரம்மிக்க வைக்கிறது. 

இறுதியாக, கருத்தறிக்க உதவும் மையங்களும் பேக்கேஜ் ஆஃபர் அளிப்பதை பற்றி கேட்டோம்.

"இது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும், கருவுறாமை சிகிச்சை என்பதே ஒவ்வொருவரின் பிரச்சனைக்கேற்ப தீர்வு என்பதால், சிகிச்சை முறை வேறுபடும். ஆஃபர், பேக்கஜ் என்பது இந்தத் துறையிலும் வந்துள்ளது வருத்தமளிப்பதாகவே உள்ளது," 

என்று கூறியதுடன், குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே குறை கூறும் போக்கு வெகுவாக குறைந்திருக்கிறது என்கிறார். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பெண்ணை முதலில் பரிசோதனை செய்துக் கொள்ள நிர்பந்திக்காமல்,  கூடவே ஆண்களும் தாங்கள் முதலில் பரிசோதனை செய்துக் கொள்ள செய்வதை கடைப்பிடித்தால், பெண்ணின் மன உளைச்சலுக்கு இதுவே மருந்தாக அமையும் என்பதே உண்மை.

இந்த தினத்தில், தன்னலமற்ற சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் தமிழ் யுவர் ஸ்டோரி தனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறது!