ஒரு தொழில்முனைவரின் அனுபவம்: முதல் தேடல் #FundSeeking - பாகம் 1

ஒரு தொழில்முனைவோராக என் ஸ்டார்ட்அப்பிற்கு தேவையான முதல் தேடும் பயணத்தில் நான் கற்ற பாடங்களும் அனுபவங்களும்...

6

முதலீடு இல்லாமல் தொழில் இல்லை. பணம், உழைப்பு, செலவிடும் நேரம் எல்லாமே முதலீடு தான். இதில் பணம் அடிப்படையான முதலீடு. அதை ஒரு தொடக்க நிறுவனம் எப்படி பெறுவது என்பதை என் அனுபவத்தின் ஊடாக உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடுகளை பல வழிகளில் பெற வாய்ப்புகள் உண்டு. அதன் சுற்று ஒவ்வொன்றிலும் பல நிலைகள் (steps) உண்டு. சுயமுதலீடு பற்றி இன்று பார்க்கலாம்.

“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை“குறள் 758, அதிகாரம் –பொருள்செயல்வகை

ஒருவன் சுய முதலீடு கொண்டு தொடங்கும் தொழில் யானைகளின் போரினை குன்றின் மீது நின்று பார்ப்பது போல பாதுகாப்பானது. ஆம் அவர் சொல்வது உண்மை தான்.

ஆனால் என் அனுபவத்தில் அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கும் முன்பு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது வீடு கட்ட கடன் வாங்கிவிட்டேன். ஸ்டார்ட்அப் தான் வாழ்க்கை என்று இறங்கியபோது கொஞ்சம் திணறித் தான் போனேன். தாத்தன் பாட்டன் சொத்து என்று எதுவுமில்லை. முதல் தலைமுறை பட்டதாரி. முதல் தலைமுறை தொழில்முனைவோர். என் தந்தையாருக்கு என் முயற்சியில் விருப்பமில்லை. மனைவி நகைகளை கொடுத்து உதவினார். எங்களது ஸ்டார்ட்அப் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சமாக வருமானம் கொடுத்து வருவதால் தப்பி பிழைத்திருக்கிறது. 

ஆனால் ஆரம்பநாளில் ஸ்டார்ட்அப்பிற்கு ஆகும் செலவுகள் அதிகமாக இருந்தது. அதை தவிர்க்கவும் முடியாது. அதை குறைக்க சிக்கன வழிகளை மேற்கொண்டேன். ஸ்டார்ட்அப் பயணத்தில் சிக்கனமும் ஒரு முதலீடு தான். அதன் முதல்கட்டமாக மெட்ரோ நகரமான பெங்களூரிவில் இருந்து மதுரைக்கு குடிபெயர்ந்தேன். இதில் பல இழப்புகள் இருந்தாலும் அந்த முடிவு சரியானது. No point of return என்றொரு நிலைப்பாடு இருக்கும். அதாவது முன்வைத்த காலை பின் வைக்கக் கூடாது என்று திரும்பிச் செல்வதற்கான பாதைகள் அனைத்தையும் அடைத்துவிடுவது. இந்த முடிவு எடுத்த நாள் அன்று தான் ஒருவன் முழுமையான தொழில்முனைவோராக மாறுகிறார்.

எல்லோராலும் சுய முதலீடை திரட்டி தொழில் தொடங்கிவிட முடியாது. இந்திய சூழலில் தொழிலை விட்டு ஒயிட்காலர் வேலைக்கு செல்வது தான் மேன்மை. அப்படியிருக்க ஒயிட்காலர் வேலையை விட்டுவிட்டு தொழில் செய்வேன் என்று தொடங்குவதை சமூகம் அந்நியமாக பார்க்கிறது. அதுவே தான் இந்திய வங்கிகளின் பார்வையிலும் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. வேலை செய்யும் போது மூன்று நாட்களில் பெர்சனல் லோன் கொடுத்தவர்கள், தொழில் துவங்குவதற்கு லோன் என்றால் ஊரை சுத்த விடுவார்கள். தொழிலில் வெற்றி பெற்ற பிறகே கடன்கள் கிடைக்கும். விதிமுறைகள் அப்படி தான் இருக்கிறது. அதற்கும் உங்களிடம் நிறைய சொத்துக்கள் அடமானமாக காட்ட இருக்க வேண்டும். இதில் நான் ஒரு வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டேன். அதாவது Information Technology சார்ந்த தொழில்களுக்கு கடன் கொடுக்க ஆய்வு செய்ய அந்த துறைசார்ந்த வல்லுனர்கள் இல்லை அதனால் கடன் வழங்க முடியாது என்று கையை விரித்தன சில வங்கிகள்.

பெண்களுக்கும், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கும் உதவவே தமிழ்நாடு அரசில் ஒரு அருமையான திட்டம் உண்டு. அதன் பெயர் NEEDS (New Entrepreneur -cum-Enterprise Development Scheme)

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

குறைந்தபட்சம் பத்து லட்சம் முதல் அதிகபட்சம் ஒரு கோடி வரை கடன் வழங்கப்படும்

அதில் தொழில்கட்டிடங்கள், இயந்திரங்கள், மூலப்பொருட்கள் வாங்க பயன்படுத்தப் படும் மூலதனத்தில் இருந்து 25% மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நாங்கள் கோரியது 80 லட்சம் ரூபாய். அதில் 60 லட்சம் வரை இயந்திர பாகங்கள், நிறுவன கட்டமைப்புக்கு செலவு செய்வதாக காட்டியிருந்தோம். ஆகவே எங்களுக்கு 15 லட்சம் வரை மானியம் வழங்க அரசு ஒப்புக்கொண்டது. அரசு ஒப்புக்கொண்டாலும் வங்கிகள் கடன் கொடுக்காமல் அந்த மானியம் உங்களுக்கு வந்து சேராது. வங்கிகள் தான் கடன் கொடுக்க வேண்டும். மானியம் நேரடியாக வங்கிக்கு சென்றுவிடும்.

இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சம் இதற்கு மத்திய அரசின் Startup Mitra ஆதரவும் உண்டு. அதன்படி கடன் கேட்பவர் சொத்துக்களை அடமானம் காட்டத் தேவையில்லை. அதாவது சொத்துக்கள் இல்லாவிட்டாலும் கடன் கிடைக்கும்.

மேலும் எதிர்காலத்தில் நிறுவனம் வெற்றிபெறாமல் போனால் வங்கிகளுக்கு மத்திய அரசே அதை கட்டிவிடும். இன்னுமொரு சிறப்பம்சம் இந்த திட்டத்தில் மூலம் சிலருக்காவது ஒவ்வொரு வங்கியும் கடன் கொடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வற்புறுத்தல் இருக்கிறது. 

இப்படியான அருமையான திட்டத்தில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் வங்கிகளின் ஆதரவில்லாமல் போனது துயரம். பல வங்கி மேலாளர்கள் அப்படியா என்று எங்களையே திருப்பிக்கேட்டார்கள். திட்டத்தை பற்றி நன்கு தெரிந்த வங்கிகள் சாப்ட்வேர் ஐடி நிறுவனங்களுக்கு நாங்கள் கடன் கொடுப்பதில்லை. காரணம் அதை ஆராயும் வல்லுனர்கள் எங்களிடம் இல்லை என்றார்கள். நான் பல ஆதாரங்களை தாக்கல் செய்தேன். 60,000 க்கும் அதிகமான பயனாளிகள் எங்கள் பொருளை பயன்படுத்தியிருக்கிறார்கள். பலர் இன்றும் எங்களது சேவையை பணம் செலுத்தி வாங்குகிறார்கள். இதுவே எங்களது வெற்றிக்கான அடையாளம். மேலும் எங்கள் App பணத்தை பெருக்கும் Fin-Tech வகையறா. ஆகவே சரியான முதலீடு கிடைத்தால் பெரிய வெற்றி என்பது சர்வ நிச்சயம். 

Google Play Store-இல் எங்களது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஐந்துக்கு நான்கு ஸ்டார் என்று நல்ல ரேட்டிங் கொடுத்து வருகிறார்கள். நல்ல கமென்ட் கொடுத்திருக்கிறார்கள். மூன்று ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் எங்களது ஆப்பை தங்கள் நிறுவனத்தின் சேவைக்கு பயன்படுத்த தயாராக இருக்கிறார்கள். தயார் செய்வது மட்டும் தான் பாக்கி. தயவு செய்து உதவுங்கள். மத்திய அரசு முதலுக்கு (Capital) பாதுகாப்பு கொடுக்கிறது. மாநில அரசு கால் பங்கு முதலீட்டை மானியமாக உங்களிடமே கொடுத்துவிடுகிறது என்று எண்ணற்ற தரவுகளை எடுத்துக் கொடுத்தும் கண்டுகொள்ளவே இல்லை. எல்லாம் சரி தான் சார் ஆனால் இதை எல்லாம் Verify பண்ண எங்களிடம் வல்லுநர் குழு இல்லையே என்று எளிதாக தட்டிக்கழித்தார்கள்.

தனியார் வங்கி மேலாளர்கள் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார். அப்படியே மத்திய அரசு கொடுத்தாலும் அதையெல்லாம் திரும்ப பெறுவதற்கு நிறைய ப்ராசஸ் இருக்கு. அதை செய்வதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை. சொத்து இருக்கிறதா பேசுங்கள் ஒரே பல்லவியை பாடினார்கள். எனக்கு சொந்த வீடு இருக்கு ஆனால் வீட்டுக்கடனில் இருக்கிறது என்பேன். சிரிப்பார்கள். வேறு என்ன செய்ய நானும் சிரித்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு வருவேன். உள்ளே மனம் கொந்தளிக்கும். என் அனுபவம் உங்களுக்கும் நேரும் என்று கட்டாயமில்லை. ஆகவே நீங்கள் இந்த திட்டத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யுங்கள். கிடைக்க வாய்ப்புண்டு. http://www.msmeonline.tn.gov.in/needs/# . 

இதற்கு முன் மத்திய அரசின் https://www.standupmitra.in/ தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். இதற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை.

என் தேடலின் முடிவில் என்ன தான் ஆனது. சொல்கிறேன் அடுத்த பதிவில்...

(கட்டுரையாளர்: கார்த்திகேயன். இவர் ஃபாஸ்துரா டெக்னாலஜீஸ், நிறுவனத்தின் நிறுவனர்.  இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)