தற்போது ஃப்ரீலான்ஸராக வருவாய் ஈட்ட அதிக வாய்ப்புள்ள 10 துறைகள்!

20

20ஆம் நூற்றாண்டுகளில் ஒருவர் தொழில் செய்ததைக் காட்டிலும், தற்போதைய காலத்தில் தொழில் புரிவோர் பல சவால்களை சந்திக்கவேண்டி உள்ளது. போட்டி பல அளவுகளில் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் உரிமையாளர்களின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை எதிர்த்து போராடவும், தங்களின் செலவினங்களை குறைத்துக்கொள்ளும் விதத்திலும் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டன. அதற்கான முதல் அடி, முழுநேர ஊழியர்களை விட ஃப்ரீலான்சர்ஸ் அதாவது வேலையின் தேவைக்கேற்ப ஆட்களை அந்த பணிக்கு மட்டும் நியமித்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். 

இது நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துவதாக நம்புகின்றனர் நிறுவனங்கள். அதே சமயம், ஃப்ரீலான்சர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க எண்ணுவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நீங்கள் ஃப்ரீலான்சராக பணியாற்றி சம்பாதிக்க வழி காட்டும் 10 துறைகள் இதோ...

உள்ளடக்க எழுத்தாளர் (Content writing)

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எழுதப்படும் எல்லா எழுத்துக்களும், கணினியின் முன் உட்கார்ந்து யாரோ எழுதிய ஒருவரின் படைப்பாக இருக்கும். ஆயிரக்கணக்கான தளங்கள், பல நாளிதழ்கள், ப்ளாகுகள் மற்றும் மாத இதழ்கள் உள்ளன, அதில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பை பற்றி யோசியுங்கள். ஒரு கண்டெண்ட் எழுத்தாளராக ஆக, நீங்கள் மொழியின் ஆளுமையை பெற்று, இலக்கணத்தை நன்கு தெரிந்து கொண்டு, உங்கள் எழுத்து திறமையை கூர் ஏத்துங்கள். அப்போதுதான் உங்கள் எழுத்துக்களுக்கு வருமானம் ஈட்டமுடியும். இந்தியாவில் சுமாரான ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்கள் வருடத்திற்கு 1.8லட்சம் வரை சம்பாதிக்கின்றனர், இதுவே நல்ல எழுத்தாளர்களுக்கு 10-15 மடங்கு அதிகம் கிடைக்கிறது. 

கிராபிக் டிசைனிங் (Graphic designing)

எழுத்தை போலவே, கிராபிக் டிசைன் செய்யத் தெரிந்தால் நீங்கள் தனிச்சையாக பணிகள் எடுத்து செய்யமுடியும். அவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமுள்ளது. பல டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள், வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் மாத இதழ்கள், திறமையான கிராபிக் டிசைனர்களுக்கு பணிகள் கொடுக்க தேடி வருகின்றனர். ஆனால் நீங்கள் அழகிய டிசைன்களை குறைந்த நேரத்தில் முடித்துக்கொடுக்கும் வல்லவராக அதற்கு இருக்கவேண்டும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், போட்டோஷாப் மற்றும் அதை சார்ந்த சில சாப்ட்வேர்களை கற்று தேர்ந்திருக்கவேண்டும். இதற்கான வாய்ப்புகள் சந்தையில் அதிகமாக உள்ளது.  

வலைபதிவர்கள் (Blogging)

நீங்கள் உங்கள் சொந்த ப்ளாகை தொடங்கலாம், அல்லது வேறு ஒருவருடைய வலைதளத்தில் பதிவுகள் செய்து வருமானம் ஈட்டலாம். தனிச்சிறப்புள்ள தலைப்புகளில் எழுத தேர்ந்திருந்தால் இதில் நல்ல வாய்ப்பு உள்ளது. முக்கியமாக, தொழில்நுட்பம், ஃபேஷன், பயணம், கேளிக்கை மற்றும் தனிப்பட்ட நிதி ஆகிய துறைகள் பற்றி எழுதும் வல்லமை இருந்தால் அதற்கு அமோக வரவேற்பு உள்ளது. இதில் சம்பாதியத்தை பொருத்தவரை வானமே எல்லை. நீங்கள் கிட்டத்தட்ட 50-60 லட்சம் வரை ஒரு வருடத்தில் ஈட்டமுடியும். சிலர் இந்த தொகையை ஒரே மாதத்தில் சம்பாதித்தும் விடுவர். 

சமூக ஊடக மார்க்கெட்டிங் (Social media marketing)

கடந்த பத்தாண்டில், ட்விட்டர், ஃட்ஸ்புக், லிங்க்ட் இன், பிண்ட்ரெஸ்ட், இன்ஸ்டாக்ராம் மற்றும் ரெட்டிட் ஆகியவை சமூக ஊடக தளங்களில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள சமூக ஊடகங்களை நாடுகின்றனர். அதற்கு வழிவகை செய்வோர்களே சமூக ஊடக வல்லுனர்கள். இதற்கு தொழில்நுட்ப வல்லமை ஏதும் தேவையில்லை, வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்ள உதவினால் போதுமானது.   

வெப் டெவலப்மெண்ட் (Web development)

இப்போதுள்ள நிறுவனங்கள் அனைத்திற்கும் வெப்சைட் இல்லாமல் இல்லை. அதற்கு வெப்சைட்டின் பின்புலத்தில் இருந்து பணிபுரிய ஆள் தேவைப்படுகின்றனர். வெப்சைட் வேகமாக செயல்பட, அவ்வப்போது அப்டேட் செய்ய என்று அதில் வல்லுனர் ஒருவர் கண்காணிக்க வேண்டியுள்ளது. அந்த இடத்தை நிரப்ப வெப் டெவலப்பர் தேவை அதிகமாகிறது. இது ஒரு தனிச்சையாக செய்யக்கூடிய பணியே அதனால் அதில் வல்லமை படைத்தவராக நீங்கள் இருந்தால், தினமும் ஒரு சில நேரம் மட்டும் செலவிட்டு நல்ல வருமான ஈட்டமுடியும். 

பின்னணி குரல் கலைஞர் (Voice-over artists)

மக்கள் விரும்பி கேட்கக்கூடிய நல்ல குரல் உங்களுக்கு இருக்கிறதா? விளம்பரங்கள் முதல், கார்ப்பரேட் வீடியோ வரை பின்னணி குரல் கலைஞர்களுக்கு அமோக வரவேற்பு இருக்கிறது. அதற்கான சம்பளமும் நன்றாகவே உள்ளது. நல்ல பேச்சுத்திறன், அழகிய குரல்வளம், இவை இருந்தால் நீங்கள் வாய்ஸ் ஓவர் என்று சொல்லப்படும் துறையில் முயற்சி செய்யலாம். 

தேடு இயந்திர தேர்வுமுறை  (Search engine optimisation)

ஆன்லைனில் நீங்கள் வருமான ஈட்ட, குறிப்பிட்ட இணையதளத்திற்கு பார்வையாளர்களின் ட்ராபிக் அத்தியாவசியமாக இருக்கிறது. அதற்கு சர்ச் எஞ்சின் அதாவது தேடு இயந்திரங்களான யாஹூ, பிங், கூகிள் மற்றும் சமூக ஊடக தளங்கள் அதிக பார்வையாளர்களை கொண்டு சேர்க்கும். இதற்கு ப்ரீலான்சாக பணிபுரியும் எஸ்இஒ (SEO) வல்லுனர்களை நிறுவனங்கள் அவ்வப்போது பணியமர்த்திக் கொண்டு தேவையான வேலையை பெற்றுக்கொள்வர். இன்றைய காலகட்டத்தில் SEO தெரிந்திருந்தால் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும். 

மொழிபெயர்ப்பு (Translation)

உங்களுக்கு ஒரு மொழிக்கு மேல் நன்கு படிக்க, எழுத, பேச தெரிந்திருந்தால் நீங்கள் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் ஆகலாம். ஏனெனில் மொழிப்பெயர்ப்பு துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. பிராந்திய மொழி வல்லமை மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் உங்களால் நல்ல ஒரு வருமானத்தை ஈட்டமுடியும். மொழிப்பெயர்ப்பு பணிகள் பெரும்பாலும் ப்ரீலான்சாக செய்பவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. 

நிர்வாகிகள் தேடு வல்லுனர்கள் (Executive search specialist)

நிறுவனங்களுக்கு தேவையான, பாங்கான ஊழியர்களை நீங்கள் அடையாளம் கண்டு கொடுக்கமுடியும். எச்ஆர் எனப்படும் மனிதவளத்துறைக்கு அவ்வப்போது அவர்களின் தேவைக்கேற்ப நிர்வாகிகளை தேடிப்பிடித்து பணிக்கு அனுப்பிவைக்க உங்களால் முடிந்தால், அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதற்கும் வானமே எல்லை, அதிக தொடர்பு உள்ளோர் இந்த பணியை இடைவிடாமல் முழுநேரமாக அலுவலகம் செல்லாமலே வீட்டிலிருந்தே செய்தால் வருமானம் உங்களை தேடி வரும்.

செயலி உருவாக்கம் (App development)

இணையதள உருவாக்கம் போலவே ஆப் டெவலப்மெண்ட் இன்று பெரிதும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு துறையாக உள்ளது. இதில் நீங்கள் நல்ல வருமான ஈட்டமுடியும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதற்கு கொஞ்சம் திறமைகள் தேவை. மொபைல் யுஐ டிசைனிங், பாக்எண்ட் கம்ப்யூட்டிங், ப்ரோக்ராமிங் மற்றும் சில தகுதிகள் செயலி உருவாக்க தேவைப்படுகிறது. இதை நீங்கள் சுலபமாக கற்றறியமுடியும். வருங்காலமே செயலிகளை நம்பி இருக்கும் இந்த வேளையில் அதை உருவாக்க நீங்கள் தெரிந்திருந்தால், ப்ராஜெக்ட் அடிப்படையில் பணிகள் எடுத்துக்கொண்டு வருமானம் ஈட்டமுடியும். 

இந்தியாவில் ப்ரீலான்சிங் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உங்களுக்கு தனித்திறமை இருந்தால், நிறுவனங்களோடு நல்ல தொடர்பும், இணக்கமும் இருந்தால் பலவித பணிகளை வீட்டில் இருந்தே முடித்துக்கொடுத்து நிலையான வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கமுடியும்.

ஆங்கில கட்டுரையாளர்: புபேந்திர ஷர்மா