படகோட்டி, பாடகி, டெட் பேச்சாளர் மற்றும் டாக்டர் ரோஹினி ராவ்-ன் உந்துதலளிக்கும் வாழ்க்கைப் பயணம்!

பல்வேறு சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு எட்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளார் ரோஹினி

0

சென்னையில் பிறந்து வளர்ந்த ரோஹினி ராவின் அம்மா முழு ஆதரவளித்து உறுதுணையாக இருக்கும் குணம் கொண்டவர். அவரது அப்பாவிடம் எளிதில் பாராட்டைப் பெற முடியாது. பெற்றோரின் இந்த குணாதிசயங்களை சமன்படுத்துவத்தில் அவரது சிறுவயது வாழ்க்கை கழிந்தது.


பெற்றோர்களின் வேறுபட்ட மனநிலையே தான் எதில் சிறப்பாக விளங்கமுடியும் என்பதை உணர்த்தியதாக யுவர்ஸ்டோரியுடன் உரையாடுகையில் தெரிவித்தார் ரோஹினி. இப்படிப்பட்ட சூழலில்தான் ரோஹினியும் அவரது சகோதரரும் தங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார்.

”என்னுடைய அம்மா பெருந்தன்மைமிக்கவர். நாங்கள் செய்யும் அனைத்தையும் எப்போதும் பாராட்டுவார். ஆனால் என்னுடைய அப்பாவிடம் அவ்வளவு எளிதாக பாராட்டுகளைப் பெற முடியாது. இந்த மாறுபட்ட குணாதிசயம்தான் என்னுடைய தற்போதைய நிலையை அடைய உதவியது. பியானோ, வயலின், தற்காப்புக் கலைகள், தியேட்டர், பாட்டு, குதிரை சவாரி, இறுதியாக படகோட்டுதல் ஆகியவற்றில் நாங்கள் ஈடுபட ஊக்குவித்தார் என்னுடைய அம்மா.

அவரது அம்மா போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் மெரைன் மைக்ரோபயாலஜிஸ்டாக (marine microbiologist) இருந்தார். ரோஹினி தனது வெற்றிக்கு அம்மாதான் காரணம் என்கிறார். அவரது அம்மா கருவுற்றிருந்தபோதும் மெட்ராஸ் யாட்ச் க்ளப்பிற்கு (Madras Yacht Club) அடிக்கடி செல்வார். ரோஹினி படகோட்டுதலுக்கு அறிமுகமாகும்போது அவருக்கு வயது ஒன்று. ரோஹினிக்கு பத்து வயதாகும்போது அவரது அம்மா அவரை சம்மர் கோச்சிங் கேம்பில் சேர்த்தார். அதிலிருந்து போட்டிகளில் பங்கேற்கத் துவங்கினார். ரோஹினி படகோட்டுதலை போட்டிக்கான விளையாட்டாகப் பார்க்கவில்லை. வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கிற்காகத் துவங்கிய விளையாட்டு அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விளையாட்டு உடல் திறனைப் போலவே அறிவையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும் என்பது குறித்து விவரித்தார் ரோஹினி.

”வானிலை, காற்றின் பாங்கு, அலையின் பாங்கு, படகோட்டுதலுக்கான விதிகள், நுணுக்கங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இயற்பியல் மற்றும் வானிலை குறித்த அறிவு உங்களுக்கு இருக்கவேண்டும். மற்ற போட்டியாளர்களையும் உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத அம்சங்களையும் கையாளும் விதத்தையும் நீங்கள் தெரிந்துவைத்திருக்கவேண்டும். எனவே இது உங்களை ஒரு முழுமையான மனிதனாக மாற்றுகிறது.”

ஒவ்வொரு வருடமும் இந்த விளையாட்டில் சிறப்பித்துக் கொண்டே வந்தார் ரோஹினி. 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிய படகு சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கபதக்கத்தை வென்றார்.

”அது ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. நாட்டின் பிரதிநியாக இருந்து தேசிய கீதம் ஒலிக்கப்படுவதை கேட்பது, தங்கப்பதக்கத்தின் அருகே தூங்குவது, உற்சாகமாக கண்விழிப்பது என அனைத்தும் கனவு போலவே இருந்தது.

எனினும் படகோட்டுதலுடன் படிப்பை மேற்கொள்வது ரோஹினிக்கு கடினமாக இருந்தது. கணிதப் பாடத்தில் ஆரம்பத்தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால் போர்ட் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவரது பேட்சில் அவர் மட்டும்தான் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார்.

அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து அவர் குறிப்பிடுகையில் ஒரு முறை சாலை வழியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது ரோஹினியின் அம்மா அவருக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களை பட்டியலிடச் சொன்னார். அதிலிருந்து இயற்பியல், பயணம், மக்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்தனர். அவரது ஆர்வத்தில் தொடர்ந்து ஈடுபடத் துவங்கினார். விமன்ஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பிற்காக உளவியல் பிரிவில் சேர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்தார். அதிர்ஷ்ட்டவசமாக அப்போதுதான் அட்மிஷனுக்கு ஸ்போர்ட் கோட்டாவில் முதல் முறையாக படகோட்டுதல் இணைக்கப்பட்டிருந்தது. ரோஹினி நுழைவுத் தேர்வில் மூன்றாம் இடத்தை பிடித்தார். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தது.


கல்லூரியில் சேர்ந்ததும் படகோட்டுதலை விட்டுவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவரது முதலாம் ஆண்டு தேர்வுகளும் உலக சாம்பியன்ஷிப்பும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அது குறித்து நினைவுகூறுகையில் கல்லூரி முதல்வர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க ஊக்குவித்ததாகவும் ஆறு மாதம் கழித்து தேர்வெழுத அனுமதித்ததாகவும் அவருக்கு பெரிதும் கடமைப்படிருப்பதாகவும் தெரிவித்தார் ரோஹினி. அதிக சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து பங்கேற்றதால் தேர்வுகளும் தாமதித்துக்கொண்டே சென்றது. இதனால் ரோஹினி எம்பிபிஎஸ் முடிக்க மூன்றரை ஆண்டுகள் கூடுதலாக அவகாசம் எடுத்துக்கொண்டார்.

ஃபெடரேஷன் சார்ந்த உட்புற அரசியல் காரணமாகவும் ஒழுங்கின்மை காரணமாகவும் படகு ஃபெடரேஷன் நிர்வாகிகளின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. நிதி பற்றாக்குறை, தேவையான அனுமதி கிடைக்கவில்லை போன்ற அடிப்படையில்லாத காரணங்களுக்காக போட்டிகளில் பங்கேற்க விடாமல் தடுத்த சம்பவங்களும் நடந்துள்ளன. ரோஹினி கூறுகையில்,

ஆண்களை வெல்லவில்லையெனில் போட்டிகளுக்கோ வெளிநாடுகளில் நடைபெறும் பயிற்சிக்களுக்கோ என்னை அனுப்ப மறுத்துவிடப்போவதாகவும் ஃபெடரேஷன் தெரிவித்தது. அதையும் சாதித்துக் காட்டினேன். தேசிய சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்தேன்.

2008 தேசிய சாம்பியன்ஷிப் சமயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் குறித்து ரோஹினி குறிப்பிடுகையில், “ஓபன் பிரிவில் (ஆண் மற்றும் பெண்) நான்தான் வெற்றியாளர். பந்தயத்தில் நான்தான் முதலிடத்தில் வந்துகொண்டிருந்தேன். ஆனால் என்னைத் தடுத்தி நிறுத்தி வேறொரு நபர் முன்னேறி செல்லவேண்டும் என்பதற்காக மூன்று ஆர்மி நபர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். டாப் 10 நபர்களில் நான் மட்டும்தான் பெண். மற்ற ஒன்பது பேரும் ஆண்கள். இறுதியில் இரண்டாம் இடத்தை பிடித்தேன். இருப்பினும் பரவாயில்லை. ஏனெனில் அவர்கள் என்னைக் கண்டு பயந்தததால் மட்டுமே எனக்கெதிராக குழுவாக செயல்பட்டு வெற்றியடையச் செய்தனர்.”

ரோஹினி படகோட்டுதலில் ஈடுபட்டவர், மருத்துவர் போன்றவற்றுடன் 2009-ன் TED Fellow. கூகுளில் அவரைப் பற்றி தெரிந்துகொண்ட ஒருவர் அவரை அணுகி அவரது பெயரை பரிந்துரைத்தார். TED குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில் அவர் விண்ணப்பித்து ஃபெலோஷிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார். இது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியாக தெரிவிக்கிறார் ரோஹினி. TED வாயிலாக கனடா, டான்சானியா உள்ளிட்ட பகுதிகளில் பல சுவாரஸ்யமான உந்துதலளிக்கும் பிரபலங்களை சந்தித்ததால் ரோஹினி பல்வேறு இணைப்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் ஆரோக்கியம் சார்ந்த ஆராய்ச்சி தொடர்பான ப்ராஜெக்டுகளை துவங்கவும் உதவியது. அவர் குறிப்பிடுகையில்,

”குழுவில் இருந்த அனைவரும் அற்புதமான விஷயங்களைச் செய்தனர். இவர்களுடன் நான் நானாகவே இருக்க முடிந்தது. நான் வேற்று நபராக உணரவே இல்லை. இங்கு உங்களால் சிறப்பாக ஒன்றிணைய முடியும். உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும்.”

ரோஹினிக்கு 12 வயதிருக்கையில் ஒரு இத்தாலியத் திரைப்படத்தில் நடித்துள்ளார். த்ரீ ரோசஸ் என்கிற தமிழ்த்திரைப்படத்தின் டைட்டில் ட்ராக்கில் ரோஹினி பின்னணி பாடகி. தியேட்டர் நடிகர்/இயக்குனர் மற்றும் தேசிய அளவில் நீச்சல் வீரரான அவரது நண்பர் கிருஷ்ணகுமாரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் ட்யூட்டி மெடிக்கல் ஆபிசராக பணிபுரிகிறார். 2005-ம் ஆண்டு இந்தியா டுடேவின் டாப் 50 இளம் சாதனையாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோஹினி தனது எதிர்காலம் குறித்து குறிப்பிடுகையில்,

”எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் இன்டர்னல் மெடிசனில் எம்எஸ்சி முடிக்க திட்டமிட்டுள்ளேன். பல்வேறு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளேன். என் முன்னே தோன்றும் அனைத்து வாய்ப்புகளையும் கைப்பற்றிக்கொள்ளமுடியும் என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படகோட்டுதலில் மறுபடி ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆனால் எப்போதும் அந்த எண்ணம் தோன்றாது என்று சொல்லமாட்டேன்.”

ஆங்கில கட்டுரையாளர் : சம்பத் புட்ரேவு