ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதையும், விபத்துகளை தவிர்க்கவும் தடுப்புச்சுவர் கட்டும் பணி!

3,000 கோடி ரூபாய் செலவிலான இந்திய ரயில்வேயின் இந்த திட்டம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதுடன் ரயிலின் வேகம் அதிகரிக்கவும் உதவும்!

0

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பஞ்சாபின் அம்ரிஸ்டர் பகுதியில் உள்ள ஜோதா பதக் அருகே ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதிகமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் எதிரெதிரே இரண்டு ரயில்கள் விரைந்து வந்ததே இந்த விபத்திற்குக் காரணம். ராவண வதம் நிகழ்ச்சியைக் காண கூடியிருந்த சுமார் 300 பேர் மீது ஜலந்தர்-அம்ரிஸ்டர் டிஎம்யூ மோதி விபத்து நேர்ந்தது. இதிலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் குதித்த சிலரும் அம்ரிஸ்டர்-ஹௌரா விரைவு ரயில் மோதி உயிரிழந்தனர்.

இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கும் ரயில் தண்டவாளங்களில் மக்கள் அத்துமீறி நுழையும் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்கும் தண்டவாளம் அருகே 3,300 கிலோமீட்டருக்கு தடுப்புச்சுவர் எழுப்ப இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகளை 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. 

2.7 மீட்டர் உயரம் கொண்ட ஆர்சிசி தடுப்புச்சுவரை 3,000 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்புச்சுவர் ரயில் தண்டவாளங்களில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதுடன் ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லவும் உதவுகிறது.

அதிக விபத்துகள் நேரும் பகுதிகளில் இந்தத் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட உள்ளன. 967 கிலோமீட்டர் தடுப்புச்சுவர் டெல்லி மற்றும் மும்பை செண்ட்ரல் ரயில் நிலையங்கள் மற்றும் டெல்லி-ஹவுரா இடையே கட்டப்பட்டவுள்ளது. தங்க நாற்கரச் சாலையை ஒட்டி 901 கி.மீ தூரத்திற்கு கட்டப்படவுள்ளது என ’பிசினஸ் டுடே’ தெரிவிக்கிறது.

இந்த திட்டத்தில் டெல்லி-என்சிஆர் பகுதியும் அடங்கும். ரயில்வே வாரிய உறுப்பினர் (பொறியியல் துறை) விஷ்வேஷ் சௌபே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கையில்,

அத்துமீறல், கால்நடைகள் கடந்து செல்லுதல் போன்றவற்றைத் தடுத்து அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் தடுப்புச்சுவர் எழுப்ப திட்டமிட்டுள்ளோம். உதாரணத்திற்கு மாடுகளின் மீது ரயில் மோதும்போது ரயில் தடம்புரள நேரிடும். இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க விரும்புகிறோம்.

விஞ்ஞானி அனில் ககோட்கர் தலைமையிலான உயர் மட்ட பாதுகாப்பு ஆய்வுக் குழு அறிக்கையின்படி வேலிகள், தடுப்புகள், மேம்பாலங்கள் போன்றவை இல்லாததே அத்துமீறல்களுக்கான காரணம் என ’ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ குறிப்பிடுகிறது.

முக்கிய ரயில் நிலையங்களுக்கு அருகே மக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்வதால் விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

800 கி.மீ டெல்லி-மும்பை-கொல்கத்தா-சென்னை தங்க நாற்கரச் சாலை பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டும் பணி 2019-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,500 கி.மீ தொலைவிற்கான பணி 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL