பணியிடத்தில் தவிர்க்க வேண்டிய ஏழு சொற்றொடர்கள்...

1

மகத்தான ஐடியாக்களின் செயல்பாடு, சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் அவற்றை எப்படி சிறந்த முறையில் தெரிவிக்க முடிகிறது என்பதை பொருத்து அமையும். பணியிடமாக இருந்தாலும் தனிப்பட்ட உறவாக இருந்தாலும் தன்னம்பிக்கையே முக்கியம். ஆனால் நாம் பேசும் போது தவறான வார்த்தைகளை பயன்படுத்த பழகியிருக்கிறோம். யாரும் இதை திருத்துவதில்லை என்பது ஒரு காரணம். அப்படியே யாரேனும் திருத்த முற்பட்டால் சிக்கலாகிவிடுகிறது. நாம் அறியாவிட்டாலும் கூட தவறான வார்த்தைகள் நம்முடைய வாய்ப்பை பாதிக்கின்றன.

நம்மில் பலரும் இத்தகைய பல சொற்றொடர்களை பயன்படுத்துகிறோம். இவை நமக்கு வித்தியாசமாக தெரியாவிட்டாலும், நாம் தொடர்பு கொள்பவர்களிடம் தவறான பொருளை உண்டாக்கலாம். நமது தொழில்முறை பிம்பத்தையும் பாதிக்கலாம். இப்படி தவிர்க்க வேண்டிய சில சொற்றொடர்கள்:

“என்னால் இயலாது” (I can’t...)”

நீங்கள் பணி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என விரும்பினால் இந்த வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்த வேண்டாம். இந்த வார்த்தைகளை கூறியதுமே உங்கள் செயல்படும் ஆற்றலையும், நீங்கள் ஒரு சொத்து என உணர்த்தும் வாய்ப்பையும் இழந்து விடுகிறீர்கள். வேறு ஒருவரிடம் உங்கள் மீதான கட்டுப்பாட்டை அளிக்கிறீர்கள். பொறுப்பை தட்டிக்கழிக்க முயல்கிறீர்கள் எனும் எண்ணத்தை மற்றவர்களிடம் உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது. உங்களிடம் உள்ள தோல்வி பயத்தை உணர்த்துகிறது.

“என்னிடம் தெரிவியுங்கள்” (Let me know) 

தீங்கில்லாததாக தோன்றும் இந்த வார்த்தைகள் ஒரு உரையாடலை நிறைவு செய்வதற்கான சிறந்த வழியாக தோன்றலாம், ஆனால் உண்மையில் இவை பாதகமாகவே அமையும். இவ்வாறு சொல்வது நம்மிடம் பேசிக்கொண்டிருப்பவர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என உணர்த்தாமல் செய்கிறது அல்லது உரையாடல் எந்த திசையில் செல்கிறது என புரிய வைக்காமல் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இது முடிவெடுக்கும் பொறுப்பை மற்றவர்கள் மீது சுமத்துகிறது. இவ்வாறு சொல்வதற்கு பதில் உங்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக உணர்த்துங்கள்.

“நான் வல்லுனர் இல்லை, ஆனால்..., (I’m no expert, but )

நீங்கள் ஆதிக்கம் செலுத்த அல்லது ஆணவமாக இருக்க முற்படும் போது இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை உணர்த்தும் பொருள் வேறுவிதமாக அமைகிறது. நீங்கள் சொல்பவற்றின் நம்பகத்தன்மையை இது பாதிக்கிறது. உறுதியான முறையில் தகவல் பரிமாற்றத்தை விரும்பினால் இத்தகைய வார்த்தைகளை தவிருங்கள்.

“என் பதவி என்ன என்று தெரியுமா? (I’m the *designation/title*)

நீங்கள் வகிக்கும் பதவியை கூறி உரையாடலை துவங்கினால் ஆணவமாக பேசுவதாக பொருள் கொள்ளப்படும். மற்றவர் கேட்கும் வரை உங்கள் பதவி பற்றி குறிப்பிடாமல் இருப்பதே நல்லது.

“இது சரி தானா? (Is that okay?)

நீங்கள் செய்தது சரியா என்றோ அல்லது அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இருக்கிறதா என கேட்பது, உங்களை தீர்மானம் இல்லாதவராகவும், தனது வேலை பற்றிய உறுதி இல்லாதவராகவும் நினைக்க வைக்கும். உங்கள் செயல் ஏற்கப்பட மற்றவரின் அங்கீகாரத்தை நாடுபவராக உங்களை நினைக்க வைக்கும். உங்களை நீங்கள் பார்க்கும் வேலைக்கு தகுதி இல்லாதவராகவும் நினைக்க வைக்கும். திட்டம் மற்றும் அதற்கு தேவையான பணிகள் என்ன என்று தெரிந்திருக்கும் போது உங்கள் பதிலை தீர்மானமாக அமைத்து, உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

இன்னமும் உங்கள் எண்ணம் பற்றி சந்தேகம் இருந்தால் அதை மற்றவர்களிடம் தெரிவிப்பதற்கும் முன் சீர் தூக்கி பார்ப்பதற்கான வழிகள் இதோ.

“இருக்கட்டும் பரவாயில்லை...” (That’s fine)

நல்லது எனும் வார்த்தை நல்ல விதமாக பொருள் படாமல் போகலாம். இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினால் அணுகுமுறையை கைவிடுபவராக பார்க்கப்படலாம். இதற்கு பதிலாக நீங்கள் உணர்வதை தெளிவாக குறிப்பிடுங்கள்.

“நான் என்ன நினைத்தேன் என்றால்... (I feel like…)

இந்த வார்த்தைகள் பக்குவம் இல்லாதவராக, உங்கள் பணியை பொருட்படுத்தாதவராக நினைக்க வைக்கும். நீங்கள் ஒரு விஷயத்தை சொல்ல முயற்சித்து அது பற்றி உறுதியாக இல்லாத போது இவ்வாறு சொல்லத்தோன்றும். எப்போதும் உறுதியாக பேசுவது நல்லது. இத்தகைய வார்த்தைகள் எதிர்மறையாக அமையலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சரியாக சொல்வதே சிறந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் போது, அதை தெளிவாகவும், உறுதியாகவும் ஈடுபாட்டுடனும் தெரிவிப்பதே பணியிடத்தில் வெற்றியை தேடித்தரும்.

ஆங்கில கட்டுரையாளர்: சோனல் மிஷ்ரா, தமிழில்: சைபர்சிம்மன்