எச்.ஐ.வி. பாதித்தோருக்கு புதுவாழ்வு தரும் 'ஜோத்பூர் நெட்வொர்க் ஆஃப் பாசிட்டிவ் பீப்பிள்'

0

2003... தினேஷ் ஜோஷிக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்தத் தருணத்தில் அவரிடம் இரண்டு முடிவுகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. அதில், முதலாவது எளிதானது. நான்கு சுவற்றுக்குள் முடங்கி தனிமையிலும் துக்கத்திலும் வாழ்க்கையைக் கடத்துவது என்பதே அது. இரண்டாவது, தன்னைத் தானே முடுக்கிவிட்டுக் கொண்டு, குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறி, எச்.ஐ.வி.யால் பாதித்தோருக்கு இயல்பு வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்துவது என்பதே. தன்னைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களை சாதாரண மக்கள் இயல்பாக அணுகும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற இரண்டாவது முடிவையே தினேஷ் கையிலெடுத்தார்.

"நான் வெளியே வந்தபோது, எனக்கு இருந்த எச்.ஐ.வி. பாதிப்பை அறிந்தவர்கள், என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். முழுமையான புறக்கணிப்பும் அல்லாத - அதிகப்படியான இரக்கமும் அல்லாத பார்வை அது. அந்த நிலைதான் எச்.ஐ.வி. பாதிப்பைக் காட்டிலும் அதிக மனக்காயத்தைத் தந்தது" என்ற தினேஷுக்கு பக்க பலமாக இருந்தவர், எஸ்.என். மருத்துவக் கல்லூரியின் பொறுப்பு முதல்வரான டாக்டர் அர்விந்த் மாத்தூர். தினேஷுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் விதைத்து அவர்தான் மாற்றத்துக்கு அடித்தளம் அமைத்தார். அந்த மாற்றத்தின் பலனாக 2003-ல் உருபெற்றது "ஜோத்பூர் நெட்வொர்க் ஆஃப் பாசிட்டிவ் பீப்பிள்" (JNP+) (ஜேஎன்பி+).

தினேஷ் மேலும் கூறும்போது, "சமூகத்திடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. அரசின் உதவி பெறுவதும் மிகவும் சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஓர் இயக்கத்தின் தேவையை உணர்ந்தேன். மக்களை ஒன்றிணைத்து, உதவிக்கான அடித்தளம் அமைத்து, மற்றவர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்த ஓர் இயக்கம் தேவைப்பட்டது. அந்த நோக்கத்தில் உருவானதுதான் 'ஜேஎன்பி+'" என்கிறார்.

தினேஷால் தோற்றுவிக்கப்பட்ட 'ஜேஎன்பி பிளஸ்' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் 'ஜோத்பூர் நெட்வொர்க் ஆஃப் பாசிட்டிவ் பீப்பிள்', ஒரு சமூக அமைப்பைத் தாண்டி, நம்பிக்கையிழந்தோருக்கு தன்னம்பிக்கையூட்டும் இயக்கமாகவே செயல்படத் தொடங்கியது. சமூகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதை விட, பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று சேர்த்து, அவர்களைக் குற்ற உணர்வில் இருந்து விடுவித்து, நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதையே 'ஜேஎன்பி பிளஸ்' தனது முக்கிய நோக்கமாகக் கொண்டது.

"முதலில் மனப்போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், நம் சமூகத்தை உறுதியுடன் எதிர்கொண்டு திறமைகளை வெளிப்படுத்தி, அதற்கு உரிய பலன்களைப் பெறுவதும் எளிதாகவிடும்" என்பதே தினேஷின் மந்திரச் சொல்.

விஹான் திட்டம்

"நோயின் தன்மையைத் தாண்டி, சமூகப் புறக்கணிப்பு என்ற அவலநிலைதான் எச்.ஐ.வி. பாதித்தோருக்கு அடிப்படையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்.ஐ.வி. நோயாளிகள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, சமூகத்திடமிருந்து முற்றிலுமாக தனிமையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். இந்தப் பிரச்சனைகளைத் தீர்வுகாணவே விஹான் (Vihaan) திட்டம் உருவாக்கப்பட்டது" என்கிறார் தினேஷ்.

இது குறித்து அவர் மேலும் விவரிக்கும்போது, "விஹான் என்பது சூரியனின் முதல் ஒளிக்கதிர் என்ற பொருள் தரும் சமஸ்கிருதச் சொல். ஊக்கத்தின் அளவைக் கூட்டி, இருளைப் போக்கும் ஒளியை ஏற்றுவதுதான் விஹான் திட்டத்தின் முக்கிய நோக்கம். முதலில் தயக்கத்தைப் போக்கி, நம்பிக்கை உணர்வை மக்களிடம் ஊட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். அதன்படி, எச்.ஐ.வி. பாதித்தவர்களை சிறு குழுக்களாகத் திரட்டி கூட்டங்களை நடத்துகிறோம். அந்தக் கருத்தரங்கில் அரசின் திட்டங்கள், கொள்கைகள், தேவையான மருத்துவ வசதிகளைப் பெறுதல் முதலானவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். நம்மை சமூகம் அணுகும் விதத்தைப் பார்த்து வெதும்பி, எந்தச் சூழலிலும் வாழ்க்கையில் சோர்வடைந்துவிடக் கூடாது என்பதை உணர்த்துகிறோம். இவ்வாறாக, ஆலோசனை அளித்தல், ஊக்கப்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளால் விஹான் திட்டம் மூலம் அவர்களுக்கு உறுதுணைபுரிகிறோம்" என்கிறார்.

எச்.ஐ.வி. பாதித்த மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது விஹான் திட்டம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார அட்டைகளைப் பெறுவதற்கும், எச்.ஐ.வி. பாதித்த தாயார்களுக்கு உறுதுணையாக இருப்பதும், விதவைகள் ஓய்வூதியம் பெறுவதற்கு வழிவகுப்பதும் விஹான் திட்டம் மூலம் சாத்தியப்படுத்தப்படுகிறது.

எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்காக பால பசேரா குழந்தைகள் காப்பகம்

"எச்.ஐ.வி. பாதித்த பெரியவர்களுக்கு சமூக உளவியலைப் புரிந்துகொள்ளச் செய்வதும், அதற்கு ஏற்ற செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் ஓரளவு எளிதானது. ஆனால், குழந்தைகளை அப்படி எளிதில் அணுக முடியாது. நம்மிடம் சமூகம் ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது என்பதை அந்தக் குழந்தைகளுக்குப் புரியவைப்பது சாத்தியமல்ல" என்று நம் சமூகத்தின் கண்ணோட்டத்தை கலக்கத்துடன் பகிர்கிறார் பாவனா பரேக். தன் கணவரையும், மகளையும் எச்.ஐ.வி.யால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த பாவனா இப்போது பால பசேராவில் செயலாற்றி வருகிறார். இந்த மரணங்கள் தந்த அதிர்ச்சியால் தன் பெற்றோரையும் இழந்தவர் இவர். இன்று, எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை அக்கறையுடன் கவனித்து மகிழ்ச்சியைத் தேடிக்கொண்டவர்.

இந்தக் காப்பகத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் எச்.ஐ.வி. பாதிப்பால் தங்கள் பெற்றோர்களைப் பறிகொடுத்தவர்கள். "பால பசேரா ஒரு புனித மையம். இங்கே குழந்தைகள் விளையாட்டு, படிப்பு, வாழ்க்கைக் கல்வி என எல்லா குழந்தைகளைப் போலவே இயல்பாக வாழ்கிறார்கள். அவர்களின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்" என்கிறார் பாவனா.

தாங்கள் செய்யாத தவறுக்காக, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட 60 குழந்தைகள் இப்போது பால பசேரா காப்பகத்தில் வாழ்கின்றனர். அவர்களுக்கு எந்தப் பாகுபாடுமின்றி அன்புடனும் அக்கறையுடனும் அனைத்தையும் தினேஷ் ஜோஷியும், அவரது குழுவும் செய்கிறது. இதனால், தங்கள் எச்.ஐ.வி. பாதிப்பு நிலை குறித்த எந்தக் கவலையும் இல்லாத நம்பிக்கையாளர்களாக அந்தக் குழந்தைகள் வளர்கின்றனர்.

இறுதியில் கிட்டியது வெற்றி

விஹான் திட்டம் மற்றும் பால பசேரா பள்ளியைத் தவிர, பகிர்ந்துகொள்வதற்கு நிறைய வெற்றிக் கதைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது 'ஜேஎன்பி+'. சுய இரக்கம், குற்ற உணர்வு மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றை அகற்றி பலரும் இயல்பாக வாழ்வது குறிப்பிடத்தக்க ஒன்று. இவர்கள் அனைவரும் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் அறிந்து, சமூகத்தால் சிறுமைப்படுத்தப்படுவதில் இருந்து தற்காத்துக்கொண்டு, தங்களது உரிமைகளை நிலைநாட்டிக் கொள்கின்றனர். எச்.ஐ.வி. பாதித்தவர்கள் முறையான சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் தங்கள் சந்ததியினருக்கு அந்தப் பாதிப்பு வராமல் காத்திட வழிவகுக்கிறது. "தங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்தும், அது தங்கள் குழந்தைகளைத் தீண்டாதது குறித்து அறியும் சில பெற்றோர்கள் இன்ப அதிர்ச்சி அடைவதைப் பார்க்க முடிகிறது" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் தினேஷ்.

எதிர்கால இலக்குகள்

"வன்கொடுமைகளுக்கு எளிதில் இலக்காகும் எச்.ஐ.வி. பாதித்த பெண்கள், குழந்தைகளின் நிலையை மேம்படுத்துவதான் 'ஜேஎன்பி+' அடுத்த திட்டம். அரசுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். உரிய நிலம் ஒதுக்கப்பட்டால், எங்களால் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளுக்கு ஒரு புனித இல்லத்தை உருவாக்க முடியும். நம் சமூகப் பார்வையிலும், எச்.ஐ.வி. பாதித்தோரிடத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்" என்று நேர்மறைச் சிந்தையுடன் நிறைவு செய்தார் தினேஷ்.

முடிவுரை

2013 புள்ளிவிவரத்தின்படி, எச்.ஐ.வி. பாதித்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. 2014 நிலவரப்படி, 15,000 எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை சுகாதார மையங்கள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டோரில் 13 சதவீதத்தினர் மட்டுமே தங்களது நிலை குறித்து அறிந்துள்ளனர். இதனால், எய்ட்ஸ் நோயை ஒழிப்பது என்ற கனவு நனவாவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த 13 சதவீதத்தினரில் பெரும்பாலானோர் சமூகத்தில் இருந்து விலகி இருண்ட வாழ்க்கையையே நடத்துகின்றனர். இத்தகைய சமூக அவலத்துக்கு ஆளானோரை மீட்கும் பணியைத்தான் 'ஜேஎன்பி+' போன்ற அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் எச்.ஐ.வி. குறித்த ஆலோசனைகளைப் பெறவும், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவும், வைரஸ் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வழிவகுப்பதற்கு, இந்த இயக்கத்தின் தேவை மிகவும் அவசியமான ஒன்று.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்