வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே- நீங்கள் தயாராக இருந்தால் தொடங்குங்கள் உங்கள் நிறுவனத்தை!

0

காலம் மாறிக்கொண்டே வருகிறது. கடந்த சில வருடங்களாக தங்களின் வழக்கமான பாதையிலிருந்து மாறி ஸ்டார்ட் அப்பை நோக்கி பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக நடுத்தர வயதுடைய பெண்களின் ஸ்டார்ட் அப் எண்ணிக்கை 2007-ல் 2 முதல் 3 சதவீதமாக இருந்து தற்போது 15 முதல் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடக்க நிறுவனத்தில் நாம் சாதிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. வாஷிங்டன்னில் தலைமையகம் கொண்ட 'Global Entrepreneurship and Development Institute' (GEDI), 17 நாடுகளில் சர்வே நடத்தியது. பெண்கள் தொழில்முனைவை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சர்வேயில் உகாண்டாவைவிட ஒருபடி மேல் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. இது 2013ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதேபோன்ற சர்வே இப்போது மேற்கொண்டால் இந்தியா நிச்சயமாக அந்த வரிசையிலிருந்து முன்னேறியிருக்கும். ஆனாலும் அதை நாம் போதுமான அளவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

படித்தவர்களும் ஓரளவுக்கு திறமையானவர்களும் ஸ்டார்ட் அப்பில் நுழைவதைப் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. இது இளைஞர்களுக்கான தளம் மட்டுமல்ல என்று தெரியும்போது அந்த உற்சாகம் அதிகரிக்கிறது. தொழில்முனைவோர் மாடலில் 40 மற்றும் 50 வயதிற்கு மேல் தொழில்முனைவில் நுழையும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

'பாட்டர்ஸ் ப்ளேஸ்' எனும் நிறுவனத்தின் நிறுவனர் ஷலான் டெரே, 45 வயதில்தான் மட்பாண்ட தொழிலை தொடங்கினார். அதற்குமுன், முப்பது வருடங்களாக சிறு தொழில் உற்பத்தி பிரிவை நடத்தி வந்தார். ரெட் போல்கா நிறுவனத்தின் நிறுவனர் விஷாகா சிங் ஆன்லைன் ஃபேஷன் டிஸ்கவரி ப்ளாட்ஃபார்மை தொடங்கும்போது அவரது வயது 41. நுகர்வோரின் நடத்தை குறித்து ஆராய்வதிலும் மார்க்கெட்டிங்கிலும் திறமைவாய்ந்தவர். மார்க்கெட்டிங் மற்றும் ஸ்ட்ராடெஜி ரோல்ஸில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அந்த தளத்தின் அறிவை மையமாகக் கொண்டு ஒரு புதிய தொழில்முயற்சியில் ஈடுபட நினைத்தார்.

இந்த இரு வேறு எடுத்துக்காட்டுகள் ஒட்டுமொத்தமாக நமக்கு உணர்த்துவது என்னவென்றால், நடுத்தர வயதுடைய பெண்கள் அதிக ஆர்வம் அல்லது அவர்களின் தளம் சார்ந்து அறிவை மையமாகக்கொண்டு தொழில்முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஒரு சில பெண்கள் தங்களின் திறமைசார்ந்த தளத்திலிருந்து அதிக ஆர்வத்தின் காரணமாக வேறு துறைக்கு மாறுகிறார்கள். ஒரு சில நடுத்தர வயதுடைய பெண் தொழில்முனைவோர் தங்களின் பலவருட அனுபவம் மிகுந்த துறையே பொருத்தமாக இருக்கும் என்று அதையே ஸ்டார்ட் அப்பாக தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் இதனால் அவர்களின் நட்புவட்டத்தின் தொடர்புகள் தொழிலில் வேகமாக வளர உதவும் என்றும் நம்புகிறார்கள்.

உண்மை என்றவென்றால் “ஸ்டார்ட் அப்பை பொறுத்தவரை என்றுமே தாமதம் இல்லை”. முதலீட்டாளர்களோ அல்லது வழிகாட்டிகளோ ஸ்டார்ட் அப் என்பது 20 வயதினருக்குரியது என்று சொல்வதை நம்பாதீர்கள். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் நடுத்தர வயதுடைய தொழில்முனைவோர் இருபதுகளின் தொழில்முனைவோரை விட சிறந்தவர்கள் ஏனென்றால்,

• பல வருட அனுபவம் அவர்களுடன் இருக்கும்.

• தளம் சார்ந்த நட்புவட்டம் இருக்கும்.

• தொழில்முனைவில் பெருந்தொகையை முதலீடு செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.

• 40 வயதுடையவர்களாக இருப்பதால் சுயமாக தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும் குழந்தைகள் இருப்பார்கள்.

• வயதும் முதிர்ச்சியும் இருப்பதால் அவர்கள் தோற்பதற்கான வாய்ப்பு குறைவு. அதனால் உங்கள் முதலீடும் வீணாகாது.

அதீத ஆர்வம் காரணமாகவோ அல்லது துறை சார்ந்த அறிவு காரணமாகவோ தொடங்கப்பட்ட தொழில்முனைவில், நடுத்தர வயதுடைய பெண் தொழில்முனைவோர் சில சவால்களை சந்திக்க நேரிடும். அவை நம்பிக்கை குறைவில் தொடங்கி நிதியை பெருக்கும் திறன் வரை இருக்கலாம். அப்படிப்பட்ட சில சவால்களும் அதை எதிர்கொள்ள சில வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. தடைகளை கடந்து உங்கள் கனவுகளை நனவாக்க இது உதவும்.

கற்றதை அகற்றுதல் : வருடக்கணக்காக சேமித்து வைத்திருக்கும் அனுபவத்தைக் கொண்டே அனைத்தையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இதுவே உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை அளிக்கக்கூடும். காரணம் ஸ்டார்ட் அப்பில் பல மாற்றங்கள் வந்தவண்ணம் இருக்கிறது. உங்களது அனுபவம் சுற்றுச்சூழலுடன் ஒருங்கிணைந்து சென்றால்தான் வெற்றியை அடையமுடியும் அல்லது நீடித்து நிலைக்கமுடியும்.

வளைந்துகொடுத்து செல்லுதல் : கார்ப்பரேட்டில் ஒரு சிறந்த நபராக முன்னாளில் இருந்திருப்பீர்கள். ஒரு பெரிய குழுவிற்கு தலைமை வகித்திருப்பீர்கள். சிறந்த கார்ப்பரேட் கூட்டத்தில் கலந்து இருந்திருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப். க்ளையண்ட் நிறுவனத்திற்கு நீங்கள் செல்லவேண்டும். நிறுவனத்துடன் தொழிலில் இணைவதற்கு ஜூனியர் லெவலில் இருக்கும் சில பணியாளரை சந்திக்க வேண்டும். தலைமை பொறுப்பில் இருந்துவந்த பல பெண்கள் இதுபோன்ற தருணங்களை எதிர்கொள்ள சிரமப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்த சிலர் இதுபோல ஜூனியர்ஸை சந்திக்க தயங்கி தங்களிடம் பணிபுரியும் யாராவது ஒருவரை க்ளையண்ட் நிறுவனத்திற்கு அனுப்பிவைப்பார்கள். இதன் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். அதனால் இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் தயக்கம்காட்டாதீர்கள். உங்களுக்கு யாருடன் தொழிலில் இணைய விருப்பமோ நீங்களே நேரடியாக அதை கையாள்வது சிறந்தது.

க்ளையண்டின் தயக்கத்தை போக்குதல்: நீங்கள் 40 அல்லது 50 வயதுகொண்ட பெண்மணியாக இருந்தால் உங்கள் க்ளையண்ட் உங்களுடைய பொருளையோ அல்லது சேவையையோ ஏற்றுக்கொள்ள சற்றே தயங்கலாம். உங்களுடைய வயது அதிகமாக இருப்பதால் நீங்கள் இயங்கும் விதம் அவர்களின் தேவைக்கேற்ப இருக்குமா என்ற தயக்கம் ஏற்படலாம். சுறுசுறுப்பான இளம் பணியாளர்களையும் அனுபவமிக்க மூத்த பணியாளர்களையும் நீங்கள் பணியில் நியமிக்கலாம். இதனால் க்ளையண்ட் மனதில் இருக்கும் தேவையற்ற குழப்பங்களை போக்கலாம்.

நிதியை பெருக்குவதில் உள்ள தடையை போக்குதல் : பல VC க்கள் உங்களது நிறுவனத்திற்கு முதலீடு செய்யத் தயங்குவார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான தொழில்முனைவர்கள் 20 வயதுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து வந்த பொறியாளர்கள். இதைக் கண்டு நாம் மனம் தளர வேண்டியதில்லை. முன்னேறி வரும் நடுத்தர வயதினரிடம் அவர்களின் கவனம் திரும்பும்வரை அமைதியாக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. நடுத்தர வயதுடைய பெண் தொழில்முனைவோர் தங்களுடைய ப்ரொபஷனல் நெட்வொர்க்கை பயன்படுத்தி ஸ்டார்ட் அப்பின் மேல் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஸ்ட்ராடெஜிக் முதலீட்டாளர்களை அணுகலாம். ஆரம்ப நிலையிலான உங்களது நிறுவனத்திற்கு முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் இருப்பார்கள். கார்ப்பரேட் உலகில் உங்களுக்கான பெயர் நிறுவப்பட்டால், Series A நிதியுதவி பெறுவதற்கு பல VC க்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும்.

ஆகவே தயங்காதீர்கள். உங்கள் கனவுகளை துரத்திச் செல்ல இது சரியான தருணம்தான். வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.

பெண்ணே, உனக்கு வயதானாலும் நீ சாதிக்கவேண்டுமானால் பல தடைகளை தகர்த்தெறிந்து நெடுந்தூரம் பயணிக்கவேண்டும் என்ற கருத்தினைக்கொண்ட Australian Band - AC/DC - ‘It’s a long way to the top, if you wanna rock n roll’ என்ற புகழ்பெற்ற பாடல் வரிகளுடன் நிறைவடைகிறது.

(பொறுப்புத்துறப்பு - இதில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துக்களாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை.)

ஆசிரியர் : சாவி டேங் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!

பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!

பெண்கள் சாதனையாளராக மாற தகர்த்தெறிய வேண்டிய 10 நம்பிக்கைகள்!