அடுத்த 7 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலரை எட்டும்: அமைச்சர் சுரேஷ் பிரபு

0

அடுத்த 7 ஆண்டுகளில் இந்திய ஏற்றுமதி, 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக மத்திய வர்த்தகம், தொழில்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருக்கிறார். சென்னையில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு, வர்த்தக சங்கங்கள், வர்த்தக சபைகள் ஆகியவற்றின் உறுப்பினர்களிடையே அவர் உரையாற்றினார்.

இந்திய உற்பத்தித் துறை, சேவைத் துறை, விவசாயத் துறை ஆகியவை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், இந்த நிலையை அடைவதற்கான ஏற்றுமதி ஆற்றலும் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 
File Photo
File Photo

அடுத்த 10 ஆண்டுகளில் சேவைத் துறை விற்பனைத் துறையைவிட, விரைவாக வளர்ச்சி பெறுவதற்கான பெரும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது என்று அவர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு, சேவைத் துறையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

12 முன்னோடித் துறைகளில் ரூ.5,000 கோடி அளவுக்கு அரசு முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் முதல்முறையாக சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 500 மில்லியன் டன்னாக இருந்த வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உற்பத்தி, 620 மில்லியன் டன்னை எட்டும் என்றும் முதல்முறையாக வேளாண் ஏற்றுமதிக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரசு 10 ஏற்றுமதி இயக்கங்களைத் தொடங்க விரும்புகிறது என்று கூறிய அவர், உலகம் முழுவதும் முக்கிய சர்வதேச வர்த்தக மையங்களில் ஏற்றுமதி மேம்பாட்டு அலுவலகங்களைத் திறக்க விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

ஏற்றுமதியில் தடைகளைத் தவிர்க்க, உலக வர்த்தக அமைப்புக்கு இணையாக ஏற்றுமதிக்கு ஊக்குவிப்புகள் இருக்கும் என்று ஏற்றுமதியாளர்களுக்கு அமைச்சர் உறுதியளித்தார்.

அண்மையில், வங்கியாளர்கள் கூட்டத்தைத் தாம் அழைத்திருந்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், முன்னுரிமை கடன் துறையின்கீழ் ஏற்றுமதி துறையைக் கொண்டுவரவேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்.

அமைச்சருடனான கலந்துரையாடலில், தமிழ்நாடு, புதுச்சேரி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் சி.பி. ராவ், சென்னை சுங்கத்துறை ஆணையர் பிரகாஷ் குமார் பெஹேரா, சென்னை சுங்கத்துறை ஆணையர் பத்மஸ்ரீ, மண்டல வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குநர் டி.கே. சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.