பல ஆண்டுகள் போராடி இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற கேதார் ஜாதவ் கடந்து வந்த பாதை...

1

இந்தியா தனது முதல் ஓடிஐ மேட்சை இங்கிலாந்து எதிராக புனேவில் விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 63/4 என்ற குறைந்த ரன்களில் திணறிக்கொண்டிருந்தது. யுவராஜ் சிங், தோனி போன்ற ஆட்டக்காரர்கள் எல்லாம் அவுட் ஆகி பெவிலியனில் அமர்ந்து இருந்தனர். விராட் கோலி ரன்கள் எடுக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்க அவருக்கு ஜோடியாக விளையாடிய கேதார் ஜாதவ் என்ற உள்ளூர் வீரர் ஆடுகளம் பக்கம் வந்தார். விளையாட ஆரம்பித்த கேதார், ஆங்கிலேய பந்து வீச்சாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அவர்களின் பந்துகளை விளாசினார். 120 ரன்களை 76 பால்களில் எடுத்து எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். பன்னிரண்டு ஃபோர்கள், நான்கு சிக்சர்கள் அடித்த ஜாதவ், இந்திய அணியை கேப்டன் கோலியுடன் நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். இந்திய அணிக்கு மொத்தம் 356 ரன்களை எடுத்துத் தந்து, எதிரணிக்கு சவால் இலக்கை அளித்தார். மேன் ஆப் தி மேட்ச் ஆன ஜாதவ், தன் ஊர் கிரவுண்டில் மகிழ்ச்சியுடன் தனது பெற்றோர்களுடன் இந்த வெற்றியை கொண்டாடினார்.  

முதல் வெற்றிக்கு பின் இரண்டாவது முறையும், இங்கிலாந்தை எதிர்த்து 321 இலக்கு ரன்களை விரட்டி விளையாடிய இந்திய அணி, 173-5 என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. பேட்ஸ்மேன்கள் எல்லாரும் அவுட் ஆகிய நிலையில், வாய்ப்பை இழந்த நிலையில் இருந்த இந்திய அணியை மீண்டும் காப்பாற்ற களம் இறங்கினார் ஜாதவ். அற்புதமாக விளையாடி பல ஃபோர்களை அடித்தார். இருப்பினும் இந்தியா 5 ரன்களில் தோல்வியை தழுவியது. ஆனால் ஜாதவ் 90 ரன்கள் அடித்து மீண்டும் எல்லாரது கவனத்தையும் பெற்றார். 

இது தற்போதைய அதிரடி கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் பற்றிய பின்னணி. புனேயை சேர்ந்த கேதார், ஒரு சிறந்த நடு வரிசையில் ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஆகியுள்ளார். 

மஹாராஷ்டிர மாநிலம் மாதா என்னும் சிறிய ஊரில் பிறந்தவர் கேதார் ஜாதவ். அவரது வாழ்க்கையில் ஆரம்ப நாட்கள் அவ்வளவு சரியாக இல்லை. ஜாதவின் அப்பா மாநில மின்சார வாரியத்தில் ஒரு கிளர்க். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் உள்ளனர். அவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்கள் ஆனால் ஜாதவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை. அதனால் ஒன்பதாவது படிக்கும் போது பள்ளியில் இருந்து நின்றுவிட்டார். 

ஆரம்பத்தில் அவர் புனே உள்ளூர் கிரிக்கெட் க்ளப்பிற்கு விளையாடினார். கடுமையான உழைப்பிற்கு பின் மஹராஷ்டிரா 19 வயதுக்கு கீழ் அணியில் 2004 இல் தேர்வாகி விளையாடினார். ஹிந்து ஜிம்கானா மைதானத்தில் பலமணி நேரம் விளையாடி பயிற்சி மேற்கொள்ளும் ஜாதவ், வேகமாக ஒரு நல்ல ஆட்டக்காரராக உயர்ந்தார். 2012 இல் தனது முதல் மூன்று சென்சுரியை எடுத்து 327 ரன்களை குவித்து, மஹராஷ்டிரா மாநில உள்ளூர் மேட்சில் அதிக ரன் எடுத்த இரண்டாவது ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றார். 2013-14 ரஞ்சி கோப்பை மேட்சில் கேதார் சூப்பர் ஸ்டார். 6 சதம் அடித்து 1223 ரன்கள் மொத்தமாக குவித்தார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்தார்.  

மஹராஷ்டிராவை சேர்ந்த கேதார், சுமார் 10 ஆண்டுகளாக விளையாடி அப்போது தான் பிசிசிஐ தேர்வு குழுவினரின் கவனத்தை பெற்றார். ஐபிஎல் போட்டியில் ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ குழு இவரை 2013 இல் வாங்கியது. 2013 முதல் 2015 வரை அதில் விளையாடினார். பின்னர் 2016 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியால் வாங்கப்பட்டார். 

பல சோதனைகளை, போட்டிகளை தாண்டி, ஜாதவ் தேசிய அணியில் விளையாட 2014 இல் தேர்வானார். பாங்களாதேசத்துக்கு எதிராக விளையாட அவர் சென்றார். அவருக்கு அப்போது விளையாட வாய்ப்பு கிடைக்காததால், அதே ஆண்டு இலங்கைக்கு எதிரான ஓடிஐ மேட்சில் தனது முதல் விளையாட்டை ஆடினார். 2015 இல் அடுத்து ஜிம்பாபேவுடனான மேட்சில் 87 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து சதம் எடுத்தார். அதுவே அவரது முதல் சர்வதேச சதம் ஆகும். 

அண்மையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மேட்சில், ஜாதவ் தான் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்து, நடு வரிசையில் விளையாடக்கூடிய நிலையான ஆட்டக்காரர் என்ற பெயரை பெற்றார். 32 வயதாகியும் வேகமாக ஓடி ரன்கள் குவிக்கக்கூடியவர் மற்றும் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உடையவர் ஜாதவ். 

தி ஹிந்து பேட்டியில் பேசிய ஜாதவின் பயிற்சியாளர் சுரேந்திர பாவே,

“நடுவரிசையில் இறங்கும் ஆட்டக்காரராக சில மேட்சுகளை நன்றாக விளையாட தவறவிட்டார் என்பதை ஜாதவ் தாமதமாகவே உணர்ந்தார். ஆறாவது ஆட்டக்காரராக களம் இறங்குபவரை பொதுவாக மேட்சின் தோல்விக்கே அடையாளப்படுத்துவர். அதை அவர் அறிந்து கொண்டதால், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த முடிவெடுத்து நல்ல நிலையை அடைந்துள்ளார்,” என்றார். 

தாமதமாக கிடைத்தாலும் வெற்றி என்பது வெற்றிதான். வாய்ப்பு கிடைக்காததால் பாதியில் மனம் உடைந்து போய்விடுபவர்களுக்கு இடையில் தன்னம்பிக்கையுடன் தனது கவனத்தை விளையாட்டில் மட்டுமே வைத்ததன் விளைவை இன்று ஜாதவ் வெற்றிகள் மூலம் கண்டுள்ளார்.

கட்டுரை: Think Change India