'வந்தாரை வாழ வைக்கு சென்னை'- உட்லண்ட்ஸ் ஹோட்டல் நிறுவிய கிருஷ்ணா ராவ்! 

0

வாழ வைக்கும் சென்னை!

உழைப்பு ஒரு மனிதனை எந்தளவுக்கு உயர்த்தும் என்பதற்கு உதாரணம்தான் சென்னையில் இருக்கும் 'உட்லண்ட்ஸ் ஹோட்டல்'. அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த ஒரு மனிதரின் வியர்வைத் துளிகள் விஸ்வரூபம் எடுத்த கதை ரொம்பவே விறுவிறுப்பானது. கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்த கடந்தலெ என்ற சிறிய கிராமத்தில் ஏழை அர்ச்சகர் வீட்டில் பிறந்தவர் கிருஷ்ண ராவ். இளமையிலேயே வறுமையை கண்டு பழகியவர். 1898இல் பிறந்த கிருஷ்ணா ராவ் சிறு வயதிலேயே உடுப்பி பகுதியில் ஒரு மடத்தில் வேலைக்கு சேர்ந்தார். இது அதிக காலம் நீடிக்கவில்லை. பின்னர் ஒரு கிராமப்புற உணவகத்தில் உதவியாளர் பணி. தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவுவது, இட்லிக்கு மாவாட்டுவது... இவை தான் வேலை. இதற்கு மாதம் ரூ.3 சம்பளம்.

இந்நிலையில் உறவினர் ஒருவரின் அழைப்பை ஏற்று சென்னை பட்டணத்திற்கு வந்த அவர், ஐந்து ரூபாய் சம்பளத்துக்கு ஒரு வீட்டில் சமையல்காரராகச் சேர்ந்தார். பிறகு, தம்பு செட்டித் தெருவில் உள்ள உணவகத்தில் எட்டு ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது. சில மாதங்கள் கழித்து அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் வெங்கடராமய்யர் என்பவரின் ஹோட்டலில் இருபது ரூபாய் சம்பளத்தில் வேலை. அவரது சுறுசுறுப்பும், கடமை உணர்ச்சியும் வெங்கடராமய்யரைக் கவர்ந்தன.

உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் ( உள்படம்- கிருஷ்ண ராவ்)
உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் ( உள்படம்- கிருஷ்ண ராவ்)

வெங்கடராமய்யருக்கு ஜார்ஜ் டவுனின் ஆசாரப்பன் தெருவில் இன்னொரு சிறிய ஹோட்டல் இருந்தது. இதை சரியாக பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் அங்கு வியாபாரம் சற்று டல்லடித்தது. எனவே இந்த ஹோட்டலை ரூ.700க்கு கிருஷ்ணா ராவிற்கு விற்க வெங்கடராமய்யர் முன்வந்தார். அதையும் ரூ.50 என்ற மாதத் தவணையில் செலுத்தினால் போதும் என்றார். மாதம் ரூ.20 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா ராவ், மாதம் ரூ.50 தவணை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முதலாளி ஆனார். அந்த சிறிய ஹோட்டலில் முதலாளி, சர்வர், சரக்கு மாஸ்டர் எல்லாம் கிருஷ்ணா தான். அவரது அயராத உழைப்பிற்கு பலன் கிடைத்தது. வியாபாரம் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்தது. அடுத்ததாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த மவுண்ட் ரோடுக்கு மாறுவது என கிருஷ்ணா முடிவெடுத்தார். 1926-ல் ஒருவரோடு கூட்டு சேர்ந்து சென்னை மவுண்ட் ரோடில் 'உடுப்பி ஹோட்டல்' ஒன்றைத் தொடங்கினார். சென்னையின் முதல் நவீன சைவ உணவகமான 'உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண விலாஸ்' உதயமானது. மாதம் நூற்று அறுபது ரூபாய் வாடகை. அதிலும் நல்ல வியாபாரம்.

உட்லண்ட்ஸ் உருவான கதை!

அந்த சமயத்தில் ராயப்பேட்டையில் ராமநாதபுரம் ராஜா ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதிக்கு சொந்தமான பங்களா ஒன்றை முனிவெங்கடப்பா என்பவர் வாங்கி இருந்தார். அதை ஹோட்டலாக மாற்ற நினைத்த வெங்கடப்பா, அந்த கட்டடத்தை ஐந்நூறு ரூபாய் வாடகையில் கிருஷ்ணா ராவிற்கு 10 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தார். 1938-ல், இப்படி தொடங்கப்பட்டதுதான் ராயப்பேட்டை 'உட்லண்ட்ஸ் ஹோட்டல்' (Old Woodlands). மரங்கள் சூழ்ந்த கட்டடம் என்பதால் 'உட்லண்ட்ஸ்’ என்று பெயர் வைத்துவிட்டார்.

45 அறைகள் கொண்ட ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை பயணியர் விடுதியாக மாறியது. இரட்டைக் கட்டில் போடப்பட்ட அறைக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.5 வசூலிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகள் முடிந்ததும் வெங்கடப்பா குத்தகையை புதுப்பிக்க மறுத்துவிட்டார். எனவே நகரின் வேறு பகுதியில் இடம் தேடினார் கிருஷ்ணா ராவ். அப்போது மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த ஏ.எம்.எம். முருகப்பா குடும்பத்தின் 4 ஏக்கர் மாளிகை விலைக்கு வந்தது. இதை அந்த காலத்திலேயே ரூ.2.5 லட்சம் கொடுத்து வாங்கினார் கிருஷ்ணா ராவ். அதை 'நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டல்' என பெயரிட்டார் அவர். 

ஒரு கல்யாண மண்டபம், அதை அடுத்து ஒரு கோவில், கூட்டங்கள் நடத்த தனி அரங்கு, குடும்பங்கள் தங்குவதற்காக சிறிய காட்டேஜ்கள் என இந்த மாளிகையை தனது எண்ணங்களுக்கு ஏற்ப மாற்றினார். ரம்மியமான சூழல், சுத்தமான உணவு, தரமான சேவை போன்ற காரணங்களால் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலை மெட்ராஸ்வாசிகள் இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டனர்.

இதனிடையே மற்ற நாடுகளில் ஹோட்டல்கள் எப்படி இயங்குகின்றன எனத் தெரிந்து கொள்வதற்காக லண்டன், ஜெர்மனி, பாரிஸ், ரோம், நியூயார்க் என ஒரு சுற்றுசுற்றிவிட்டு வந்தார் கிருஷ்ணா. அந்த உலகப் பயணத்தின் பலன்தான், 1962இல் சென்னை வேளாண் விவசாய வாரியத்தின் தோட்டத்தில் விளைந்த சென்னையின் முதல்  'உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல்'. பின்னர் நியூயார்க், சிங்கப்பூர் என உலகின் பல இடங்களில் உட்லண்ட்ஸ் ஹோட்டல்கள் திறக்கப்பட்டன.

பல பிரபலங்களின் விருப்ப இடமான உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல், 2008 ஆம் ஆண்டு கோர்டின் உத்தரவின் படி மூடப்பட்டு, தமிழக அரசால் 'செம்மொழி பூங்கா' அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்றப்பட்டது. 

தகவல்கள் உதவி: பத்திரிகையாளர், எழுத்தாளர் பார்த்திபன், http://bodhiparthi.blogspot.in/