20 ஆண்டுகளாக தினமும் பள்ளிக்கு நீச்சல் அடித்துச் செல்லும் கணக்கு ஆசிரியர்!

1

அப்துல் மாலிக்- 42 வயதாகும் இவர், கேரளா மலப்புரத்தில் உள்ள படிஞ்சதுமுரு முஸ்லிம் கீழ்நிலை பள்ளியில் கணக்கு வாத்தியாராக உள்ளார். 24 கிமி தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு சாலை வழியாக சென்றால் தூரம் என்பதால் தினமும் இடையில் உள்ள ஆற்றில் நீச்சல் அடித்து பள்ளிக்கு செல்கிறார். இதை இவர் 20 வருடங்களாக செய்து ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் செல்கிறார்.

மூன்று பேருந்துகள் மாறி அதிக நேரம் பிடிக்கும் நீண்ட சாலை பயணத்தை தவிர்க்க அப்துல் மாலிக் நீச்சல் அடித்து பள்ளிக்கு செல்கிறார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டியில் கூறிய அவர்,

“முதல் ஆண்டு நான் பஸ்ஸில் பயணம் செய்து பள்ளிக்கு சென்றேன். ஆனால் என்னுடன் பணி செய்வோர், பள்ளியைச் சுற்றி ஆறு இருப்பதால் வீட்டில் இருந்து நீச்சல் செய்து வந்தால் சுலபமாக வந்து விடலாம் என அறிவுரைத்தனர். எந்தவித செலவுமின்றி, பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தையும் இது தவிர்க்க உதவும் என்று கூறினார்கள்.”

ஒரு பிளாஸ்டிக் பையில் தனது துணியையும் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு நீச்சல் அடிப்பார் இவர். கரையை அடைந்தவுடன் தன் உடையை மாற்றிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் சென்றுவிடுவார் அப்துல்.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆன இவர், பல ஆண்டுகளில் ஆறு மிகவும் மாசடைந்துள்ளதை பற்றி கவலை தெரிவிக்கிறார். தன் மாணவர்களுடன் ஆறில் இறங்கி நீச்சல் அடித்தவாறே அதில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபடுகிறார் இந்த நேர்மையான கணக்கு ஆசிரியர்.

“நாம் நம் குளங்களை, ஆறுகளை அசுத்தம் செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அது இறைவன் நமக்கு அளித்த இயற்கை வரம்,” என்கிறார் இந்த நிஜ உலக நாயகன்.

கட்டுரை: Think Change India