1320 கிராமப்புற மாணவர்களுக்கு வீட்டிலே கல்வி அளித்து, பின் பள்ளிக்கூடம் கட்டி தந்த ஆசிரியர்!

0

1989-ம் ஆண்டு கிராமவாசி ஒருவர் ஒரு சிறந்த நோக்கத்திற்காக உத்திரப்பிரதேசத்தின் ராம்பூர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றார். கிராமவாசிகளுடனான ஒவ்வொரு உரையாடலிலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். அந்த கிராமத்தில் அதுவரை பள்ளி எதுவும் இயங்கவில்லை. அதன் தேவையையும் மக்கள் உணரவில்லை. எனவே அவர்கள் இந்த கருத்தை ஏற்கவில்லை. ஆனால் மக்களிடையே காணப்பட்ட ஆர்வமின்மை கேசவ் சரணின் முயற்சியை தடுக்கவில்லை. அவர் தொடர்ந்து செயல்பட்டு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்கிற கனவை நனவாக்கினார்.

பட உதவி:  Kenfolios,  Nek In India
பட உதவி:  Kenfolios,  Nek In India

இன்று தனது மகனுடனும் மருமகளுடனும் சேர்ந்து ராம்பூரில் ஒரு பள்ளி நடத்தி வருகிறார். இதில் 1320 பேர் படிக்கின்றனர். இவர்களில் 670 பேர் மாணவிகள். கேசவ் தனது வீட்டிலேயே வகுப்பெடுப்பதால் கிராமத்தில் ஒரு பள்ளியை கட்டுவதற்காக தனது நான்கு ஏக்கர் விவசாய நிலத்தை விற்றார். 1988-ம் ஆண்டு அவர் கிராம தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பள்ளி கட்டுவது உள்ளிட்ட பல திட்டங்களை கிராமத்திற்காக உருவாக்கினார்.

மாலை நேரங்களில் வயதானோருக்கும் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். இது இளம் சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக இருந்ததாக ’கென்ஃபோலிஸ்’ தெரிவிக்கிறது. இந்த செயல்முறையில் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அவர்களது சொந்த கிராமத்தைத் தாண்டி வெளியில் அனுப்ப தயங்குவதை அவர் புரிந்துகொண்டார். அவர் கூறுகையில்,

"நான் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் வரை வருவாய் ஈட்டினேன். அது என்னுடைய குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இருந்தது. நாங்கள் எளிமையான வாழ்க்கைமுறையையே பின்பற்றியதால் 1989-ம் ஆண்டு ஒரு பள்ளியை கட்டும் அளவிற்கு என்னால் பணம் சேமிக்க முடிந்தது."

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் அவரது வீட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே அருகில் உள்ள சமூக வளாகத்திற்கு மாறுவதுதான் ஒரே தீர்வாக இருந்தது. விரைவிலேயே இது அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. பள்ளிக்கு ஜூனியர் ஹை ஸ்கூல்’ என பெயரிடப்பட்டது. இன்று இது பிரபலமாக ‘கேசவ் இண்டர் காலேஜ்’ என அழைக்கப்படுகிறது.

கிராம மக்களுக்கு கல்வி வழங்கவேண்டும் என்கிற கேசவின் நோக்கத்தை நன்குணர்ந்த அவரது மகன் கிருஷ்ணா அவருடன் இணைந்து கொண்டார். இன்று கிருஷ்ணாவும் அவரது மனைவியும் 21 ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளியை நிர்வகித்து வருவதாக ’நெக் இன் இந்தியா’ அறிக்கை தெரிவிக்கிறது.

பட உதவி: kenfolios
பட உதவி: kenfolios

2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த 450 மாணவர்கள் பொதுத் தேர்வெழுதினர். இதில் பெரும்பாலான மாணவர்கள் மேற்படிப்பை படிக்கின்றனர் அல்லது நல்ல பணியில் சேர்ந்துள்ளனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA