'தகவல் திங்கள்'- இணையத்தை ஈர்த்து வைராலாகிய இரண்டு புகைப்படங்கள்!

0

கிம் மீண்டும் ஒரு முறை இணையத்தை உடைக்க முயன்று தோற்றிருக்கிறார். இல்லை, இணையத்தை உடைக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறது என்பதை உணர்த்த விரும்பியதில் அவர் ஜெயித்திருக்கிறார்!.

இணையத்தில் உலாவி வருபவர்களுக்கு கிம் என்பது அகிலம் போற்றும் அமெரிக்க ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தாஷியானின் சுருக்கம் என்பதும், சமீபத்தில் அவர் எடுத்து வெளியிட்ட தன்பாணியிலான சுயபடம் மூலமே இணையத்தை உடைக்க முயன்றார் என்பதும் தெரிந்திருக்கும். இணையத்தில் அவ்வளவாக பரிட்சயம் இல்லாதவர்களும் கூட கிம்மின் அந்த அற்புத சுயபடம் வெளியானதை தவற விட்டிருக்க முடியாது. ஏனெனில் உலக மீடியா முதல் உள்ளூர் மீடியா வரை அந்த செய்தி பதிவானதால் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

கிம்மை நன்கறிந்தவர்களுக்கு, அந்த சுயபடம் அவர் தன்னை நிர்வாணமாக கிளிக் செய்து பகிர்ந்து கொண்டது எனும் தகவலையும், அதன் காரணமாகவே இணையம் முழுவதும் வைரலாக பரவி பார்க்கப்பட்டு, இணையத்தை முறித்துவிடும் என்று கருதப்பட்டதையும் இங்கு நினைவு படுத்த வேண்டியதில்லை தான்.

ஏற்கனவே ஒரு முறை கிம் இப்படி தனது நிர்வாண படத்தை வெளியிட்டு இணையத்தின் உள்கட்டமைப்பின் வலிமையை சோதித்துப்பார்த்திருக்கிறார்.

கிம்மின் இந்த செயல் பற்றியோ, இது உண்டாக்கிய பரபரப்பு பற்றியோ இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அதை ஆதரிக்கவும் விரும்பவில்லை, எதிர்க்கவும் எண்ணமில்லை.

ஆனால் கிம் எப்படி எளிதாக இணையத்தின் கவனத்தை ஈர்க்கிறார் அல்லது இது போன்ற வெளிப்படுத்தலை உலகம் எப்படி உடனடியாக கவனத்தில் கொள்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, கடந்த வாரத்தில் இணையத்தை ஈர்த்த இன்னொரு புகைப்படம் பற்றி பிரதானமாக பேச விரும்புகிறேன்.

கிம்மின் அட்டகாசமான சுயபடம் அளவுக்கு இந்த படம் கவனத்தை பெறவில்லை என்றாலும் கூட, ஐபிஎம் நிறுவன பெண் அதிகாரி ஒருவர் எடுத்து வெளியிட்ட இந்த புகைப்படம் நம் காலத்துக்கான செய்தியை உரக்கப்பேசி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காரணத்திற்காகவே இந்த புகைப்படம் பற்றி குறிப்பிட்டு பேச வேண்டியிருக்கிறது.

லிசா சிகேட் டிலூகா (Seacat DeLuca) என்பது அவரது பெயர். ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் மிகவும் புகழ்பெற்ற பெண்மணிகளில் ஒருவர் என்றே லிசா வர்ணிக்கப்படுகிறார். மொபைல் சாப்ட்வேர் துறை தான் அவரது தொழில்நுட்ப பேட்டை. 400 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்று வைத்திருக்கும் கண்டுபிடிப்பு கில்லாடியாகவும் அவர் கருதப்படுகிறார். தொழில்நுட்பம் பற்றி சிந்தனைதூண்டும் வகையில் பேசக்கூடிய ஆற்றலும் படைத்தவர். ஊக்கமிகு பேச்சாளர்களுக்கான பிரத்யேக இடமாக கருதப்படும் டெட் மேடையில் பேசி கைத்தட்டல் வாங்கியவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

லிசாவின் இணையதளத்திற்குள் எட்டிப்பார்த்தால் அவரது பெருமைகளை மேலும் தெரிந்து கொள்ள முடிகிறது. தினசரி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயலும் சாப்ட்வேர் பொறியாளர், ஆண்களின் பேட்டையான கம்ப்யூட்டர் அறிவியலில் கலக்கி கொண்டிருக்கும் பெண் என்றெல்லாம் அவர் பாராட்டப்பட்டிருக்கிறார்.

ஐபிஎம்மிற்கு புதிய வழி காட்டும் ராக்ஸ்டார் அந்தஸ்து கொண்டவராகவும் பாராட்டப்படுகிறார்.

இந்த பெருமைகள் மற்றும் பட்டங்களுடன் சமீபத்தில் தாயானவர் என்ற பட்டதையும் சேர்த்துக்கொள்ளலாம். -லிசா அதை விரும்பவும் செய்வார்!.

நவயுக பெண்மணியான லிசா தனது பணியில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தொழில்முறையாக தான் நிகழ்த்தி வரும் சாதனைகளில் மட்டும் அல்ல தனது துறையில் பங்களிப்பு செலுத்த முடிவதற்காகவும் சேர்த்து பெருமிதம் கொள்பவர். அதோடு தாய்மை பேற்றை அடைந்ததையும் பெருமிதமாகவே நினைப்பவர்.

பணி வாழ்க்கை - தாய்மை பொறுப்பு, இரண்டையும் தன்னால் சேர்த்து கையாள முடியும் என்று நம்பிக்கை கொண்ட லிசா, சமீபத்தில் ஐபிஎம் கனெக்ட் நவ் மாநாட்டில் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் கலந்து கொண்ட விதம் ஹாட்ச் ஆப் சொல்ல வைப்பதாக இருந்தது. தனது ஐந்து மாத பெண் குழந்தையை தன்னோடு அனைத்தபடி (தொட்டில் கவசத்துடன்) அவர் மாநாட்டுல் உற்சாகமாக பங்கேற்றார்.

இந்த படமே ஒரு செய்தி தான். பணி வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண்கள் தடைகளை நினைத்தும் கவலைப்பட வேண்டியதில்லை, அந்த முன்னேற்றத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்பதை இந்த படம் உணர்த்திக்கொண்டிருந்தது.

தொழில் வாழ்க்கை சிகரத்தை நோக்கிச்செல்லும் பெண்கள் தங்கள் அக வாழ்க்கையையும் மறக்க வேண்டியதில்லை; தாய்மையை கொண்டாடவும் தயங்க வேண்டியதில்லை!

லிசா இப்படி தான் நம்பினாரேத்தவிர இதை சொல்ல விரும்பினாரா? என்று தெரியவில்லை.

ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட 50 வயது மனிதர் ஒருவரால் இந்த காட்சியை பொருத்துக்கொள்ள முடியவில்லை. தொழில்முறை மாட்டில் இரு பெண்மணி குழந்தையுடன் பங்கேற்பதா? என கேட்டு கடந்த நூற்றாண்டின் மனப்போக்கை வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தையுடன் மாநாட்டில் இப்படி பங்கேற்பது பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வு பற்றி, லிசாவின் சகாவான அன்னா சிகேட் கூறுகையில்,’ தொழில்முறை மாநாட்டிற்கு உங்கள் குழந்தையை அழைத்து வருவீர்களா? எனும் தலைப்பில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் நம்மூர் களத்து மேடுகளிலும், வயல்வெளிகளிலும் பணிபுரியும் பெண்கள் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வேலை செய்யும் காட்சி அல்லது அருகாமையில் விளையாட வைத்துவிட்டு பணி செய்யும் காட்சியை நினைத்துப்பார்க்க வேண்டும். விவசாயக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்னா இது போன்ற அனுபவத்தை நினைவுக்கூர்ந்து தான் அந்த பதிவை துவக்கியிருக்கிறார்.

பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் அதன் நிதிநிலை இரண்டையுமே கவனித்துக்கொள்ள உதவிய சிறு வணிக சூழலில் குழந்தைகள் எப்போதுமே அங்கம் வகித்திருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அன்னா, கார்ப்பரேட் அமெரிக்கா தான் இதை மறந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்கள் வெற்றிகரமான தொழில் வாழ்க்கை மற்றும் குழந்தைகள் இரண்டையும் ஒன்றாக பெறுவது சாத்தியமில்லை எனும் நிலையை கார்ப்பரேட் சூழல் உருவாக்கியுள்ள நிலையில், லிசா டிலூகா போன்றவர்கள் இந்த உரையாடலை தலைகீழாக மாற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்று பாராட்டி, அவர் குழந்தையுடன் மாநாட்டில் கலந்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

லிசா போன்ற தொழில்நுட்ப அம்மாக்கள், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

லிசாவும் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தார். குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்திற்கு அருகே, ”இது தான் என் வாழ்க்கையின் எல்லாமும், இன்று கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டாலும், நான் முதலில் அம்மா அதன் பிறகு தான் தொழில்நுட்பவாதி என குறிப்பிட்டிருந்தவர், அம்மாவாக பணி செய்பவரே தவிர பணி செய்யும் அம்மா அல்ல என்றும் தெரிவித்திருந்தார். அதாவது தான் முதலில் அம்மா என்பதை அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டு அது எவ்விதத்திலும் தனது தொழில் செயல்பாட்டை பாதிக்காது என உணர்த்தியிருந்தார். அதைவிட முக்கியமாக தொழில் வாழ்க்கையும், முன்னேறும் வேட்கையும் தனது தாய்மையை பாதிக்காது என்பதையும் உணர்த்தியிருந்தார்.

இந்த கருத்தை வலியுறுத்த அவர் #motherworking, #workingmother ஆகிய இரண்டு ஹாஷ்டேகுகளை உருவாக்கியதோடு, #lifeisshort எனும் ஹாஷ்டேகையும் உருவாக்கி இருந்தார்.

வொர்கிங் மதர் என்று சொல்வதைவிட, மதர் வொர்கிங் என்று சொல்வது மாறுபட்டதாக இருப்பதுடன் சரியாகவும் இருக்கிறது அல்லவா! அதோடு வாழ்க்கையில் நமக்கான காலம் குறைவு என்பதையும் நினைவூட்டியிருக்கிறார்.

ஆம் உண்மை தான், நாம் பூமியில் வாழும் காலம் குறுகியது என்பதால் சமரசங்கள் மற்றும் பிற்போக்குத்தனத்தால் நாம் எதையும் இழந்துவிடக்கூடாது. இந்த ஹாஷ்டேகுகள் இணையத்தில் பிரபலமாகி தொழில்வாழ்க்கையில் ஈடுப்பட்டிருக்கும் பெண்கள் தனி வாழ்க்கையை கவனிக்காமல் விட வேண்டுமா என்ன எனும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றாக யோசித்துப்பார்த்தால் இதில் ஆண்களுக்கான செய்தியும் இருப்பது தெரியும்.

அந்த வகையில் இந்த புகைப்படம் பணி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை சமன் பற்றிய கேள்விகளை எழுப்பி யோசிக்க வைக்கிறது. அது மட்டுமா, மேலும் பலர் தங்கள் பிள்ளைகளை தங்களுடன் பணியிடத்திற்கு அழைத்து வருவதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும் என நம்பலாம்.

இந்த இடத்தில் இன்னொரு புகைப்படத்தையும் நினைத்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும். எகிப்து நாட்டில் டிவி பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகனை இடுப்பில் தூக்கி வைத்தபடி, கையில் மைக்குடன் கேள்விகளை கேட்பது போன்ற அந்த புகைப்படம் கடந்த ஆண்டு வெளியான போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மகனுக்கு உடல் நலக்குறைவு என்பதால் அவனை பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு நேராக வந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார். பிபிசியில் வெளியான அந்த செய்தி: http://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-32249831