தமிழில் தொழில்நுட்பப் பாடங்களை வழங்கும் ஒரு தமிழனின் படைப்பு!

2

“தொட்டனைத் தூறும் மனற்கேணி மாந்தர்க்கு
கற்றனை தூறும் அறவு”

இக்குறளுக்கு பொருள் அறிந்தோர் எத்தனை பேர் என்பதில் ஒரு ஐயம் இருந்தாலும், தமிழ் மொழியை மதிப்பதை மட்டுமின்றி இக்குறளுக்கு எடுத்துக்காட்டாகவே விளங்குபவர்தான் “GUVI” நிறுவனத்தின் நிறுவனர் அருண்பிரகாஷ்.

அப்படி என்ன செய்தார் இவர்?

மதுரையில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் ஒரு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆவார். தான் படித்ததை பிறருக்கு ஏன் கற்றுத்தர வேண்டும் என்று நினைக்கும் இந்த சுயநலமிக்க உலகில், தான் கற்றதை பிறருக்கு புரியும் வகையில் எளிதாக கற்பிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டவர்தான் இவர். குடும்பச் சூழ்நிலையின் காரணமாக முதலில் காகிதங்களில் தனக்கு தெரிந்த கணிப்பொறி நிரல்களை பதிவுசெய்யத் தொடங்கிய இவர் தனது நண்பர்கள் மற்றும் 9 பேர் கொண்ட குழுவின் உதவியால் இன்று 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் கொண்ட “GUVI” எனும் ஆன்லைன் தமிழ்வழி குறியீட்டு (Coding) கற்றல் வளைதளத்தை நிறுவியுள்ளார்.

அருண், ஹனிவெல் என்னும் தனியார் நிறுவனத்தில் 13 வருடங்கள் பணியாற்றி விட்டுப் பின்னர், பேபால் என்னும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தொழில்நுட்பத்தில் சிறந்த கலைஞரான இவர் தன்னைப் போலவே ஆர்வமுள்ள இரண்டு நண்பர்களான பாலமுருகன் மற்றும் ஸ்ரீதேவியை சந்தித்தார். பாலமுருகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற எம்.சி.ஏ பட்டதாரி, ஸ்ரீதேவி சாஸ்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற பொறியியல் பட்டதாரி ஆவார். இவர்கள் மூவரும் இணைந்து தங்களது சொந்த முதலீட்டைக் கொண்டு தொடங்கிய நிறுவனம், சில காலங்களிலேயே IITM RTBI, உதவியால் 5 லட்சம் ஊக்கத்தொகையைப் பெற்றது. இன்று பெரிய அளவில் வாடிக்கையாளர்கள் பெற்று, 55 கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே பாராட்டுக்குரிய இனையதளமாகவே GUVI விளங்குகிறது.

100 சதவீத மக்கள் இடையே 10% மக்கள் மட்டுமே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் மீதம் உள்ள 90% மக்கள் தன் தாய்வழியில் கல்வி கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் ஆதலால் தமிழில் குறியீட்டுகளை கற்பிக்க நாங்கள் முடிவு செய்தோம்” என்கிறார் அருண்.

GUVI தொடங்கிய கதை

“என்னதான் தேர்வுக்கு ஒரு மாத காலம் விடுமுறை விட்டாலும் கடைசிநாள் புத்தகத்தைப் புரட்டி எடுத்து படிக்கும் மாணவர் சதவீதமே அதிகம். அதிலும் நம் சக நண்பர், தான் படித்ததை விளக்கிக் கூறும் பொழுது அதனை மனதில் ஏற்றி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதமே அதிகம், இதனை கருத்தில் கொண்டு கடினமான சில தொழில்நுட்பப் பாடங்களை எளிதாக மிகவும் சாதாரண முறையில் தமிழில் கற்றுக்கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம்” என்றார் பாலமுருகன்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் தொழில்நுட்பத்தை பயில விரும்பினார், அவருக்கு உதவும் வகையில் வீடியோ பதிவு செய்து அதனை யூட்யூபில் பதிவேற்றினோம், அதனை கண்ட சில பார்வையாளர்கள் அதிக அளவில் தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலவசமாக C, C++, Java, Python, ROR, R Programming, IOS மற்றும் Android பற்றிய வீடியோ பாட பதிவுகளை பதிவேற்றினோம். பின்னர் இதையே முழுநேர வேலையாக செய்ய முடிவு செய்தோம்” என்கிறார் அருண்.

அருண் மற்றும் அவரது நண்பர்கள் முதலில் தமிழ், கன்னடம், பெங்காளி ஆகிய மொழிகளில் தொடங்கிய இச்சேவை, பின்னர் தமிழில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கியது. GUVI வீடியோ பதிவுகள் 7-8 நிமிடங்களை தாண்டுவதில்லை இருப்பினும் சிறிய காலகட்டத்தில் புரிதலை உருவாக்குவது இதன் சிறப்பு என்றே சொல்லலாம்.

இலவசமாக கொடுக்கப்பட்ட தொழில்நுட்பப் பதிவுகளுக்கு தற்போது ரூபாய் 500 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் எந்த ஒரு கேள்வி எழுந்தாலும் அவற்றிற்கு பதிலளிக்கவும், மறந்துபோன சில பாடங்களை மீண்டும் மலரவைப்பதில் GUVI முக்கிய பங்காற்றுகிறது. தங்களிடம் பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுதான் வெளியேற வேண்டும் என்று எண்ணும் GUVI இணையதளம், தங்கள் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்தியேகமாக “Inbuild coding playground to practice” என்னும் தேர்வினை வைத்துள்ளது. மேலும் இதில் ஒரு வாடிக்கையாளர் தான் கற்றுக்கொண்டதை பயிற்சி செய்தும் பார்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி GUVI தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் பெற்று தருகிறது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

எதிர்காலத்திட்டம்

இதுவரையில் தமிழில் மட்டுமே அதிகளவில் தொழில்நுட்பப் பதிவுகளை கொடுத்த GUVI, இனிவரும் காலங்களில் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காளி, கன்னடம் முதலான மொழிகளில் பதிவுகளை வெளியிட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இணையதள வாடிக்கையாளர்களை தவிர்த்து கைபேசி பயனாளிகளுக்கும் செயலி APP மூலம் பதிவுகளை தர உள்ளது.

இளைஞர் சமுதாயம் பின்பற்றவேண்டியது

எவ்வளவு தோல்விகள் வந்தாலும் அவை அனைத்தையும் படிப்பினையாகக் கருத வேண்டும். அனுபவமே ஒருவரை சிறந்த மனிதராக்க முடியும், பொறுமையும் விடாமுயற்சியும் இளைஞர்கள் தங்களின் தாரக மந்திரமாக பின்பற்ற வேண்டும். எந்த ஒரு முடிவையும் விரைவில் எடுக்க வேண்டியது தற்காலத்தில் அவசியமாகிறது என்று அருண்பிரகாஷ் தனது வெற்றியின் ரகசியத்தை இளைஞர்களுக்கு கூறிகிறார். 

எதையும் ஆக்கபூர்வமாக முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் தொழிலில் வெற்றி அடையலாம் என்று இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் தெம்பூட்டுகிறார் அருண்பிரகாஷ்.

இணையதள முகவரி: GUVI