ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா களத்தில் கவனத்தை ஈர்க்கும் ஐந்து நிறுவனங்கள்!

0

இந்திய ஸ்டார்ட் அப்களில் 2015 ல் முதலீட்டாளர்கள் 9 பில்லியன் டாலர் நிதியை கொட்டியுள்ளனர். 2016 லும் இதே வேகத்தில் முதல் 10 நாட்களில் 38 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய பிரதமர் திட்டத்தை துவக்கியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில் கூகுள் நிறுவனம் ஸ்டார்ட் அப்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இந்தியா ஸ்டார்ட் அப் புரட்சியில் முன்னிலை வகிக்கும் நிலையில் கூகுள் இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு துணை நிற்கும் வகையிலான நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது. கூகுளின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவுக்கான துணைத்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜன் ஆனந்தன் இது தொடர்பாக கூறியதாவது:

"இந்திய அரசின் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துடன் இணைந்து செயல்படுவதன் ஒரு பகுதியாக துவக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப்கள். எங்கள் லாஞ்ச்பேட் திட்டத்தின் கீழ் தங்கள் கருத்துக்களை உலகின் முன் வைப்பதற்கான சிறப்பு பகுதியை வழங்குகிறோம்”.

கூகுள் ஐந்து துவக்க நிலை ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்துள்ளது. இவை தங்கள் தீர்வுகளை, முக்கிய துணிகர முதலீட்டாளர்கள், சர்வதேச கூகுள் நிறுவன அதிகாரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு முன் சமர்பிக்கும். முதல் மூன்று நிறுவனங்கள் கூகுளின் லாஞ்ச்பேட் 5 நால் வழிகாட்டி திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும். வெற்றி பெறும் நிறுவனம் 100,000 டாலர் மதிப்பிலான கூகுள் கிளவுட் வசதியை பெறும்.

தேர்வு செய்யப்பட்ட ஐந்து ஸ்டார்ட் அப்கள்:

ரீப் பெனிபிட் Reap Benefit

2013 ஜூலையில் நிறுவப்பட்ட ரீப் பெனிபிட்( Reap Benefit ) இளைஞர்கள் உதவியுடன் சுகாதாரம், கழிவு, காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் சமூக நோக்கிலான நிறுவனமாகும். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனம் 200 டன் கழிவுகள், 2 மில்லியன் லிட்டர் தண்ணீர், 100,000 யூனிட் மின்சாரம் ஆகியவற்றை கையாண்டியிருப்பதுடன் நீரில்லா சிறுநீர் கழிப்பிட வானிலை மையங்கள், உணவுக் கழிவை உரமாக மாற்றும் வசதி உள்ளிட்டவற்றை உருவாக்கியுள்ளது.

கார்டியாக் டிசைன் லேப்ஸ் Cardiac Design Labs

மொபைல் இண்டலிஜெண்ட் ரிமோட் கார்டியாக் மானிட்டரின் சுருக்கம் தான் மிர்காம் (MIRCaM ). உடலில் அணியும் பகுதி, நோயாளியின் படுக்கை அருகே உள்ள பகுதி, டாக்டரின் டெர்மினல் மற்றும் அவரது மொபைல் செயலி ஆகியவற்றை இது கொண்டுள்ளது. அவ்வப்போது கண்காணித்து ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளித்து நோயாளி நலன் காக்க உதவுகிறது. அணியக்கூடிய பயோமெடிகல் சென்சார்கள் மூலம் முக்கிய காரணிகளை கண்காணிக்க வழிசெய்கிறது. மேலும் நோயாளிகளுக்கு சுதந்திரம் அளிக்கும் அதே நேரத்தில் அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கவனிக்கப்படும் வசதியையும் அளிக்கிறது.

குரு-ஜி Guru-G

2013 மே மாதம் துவக்கப்பட்ட குரு -ஜி (Guru-G ) தற்போதுள்ள உள்ளடக்கத்தை தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் வழியாக மாற்றுகிறது. ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த இவை பல்விதமாக உதவுகின்றன. ஆசிரியரின் செயல்பாடுகள், மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப இது அமைவதால் மாணவர்களுக்கு சிறந்த பலன் உண்டாகிறது.

ஸ்லம்டன்கியு SlamdunQ

2014 ஆகஸ்ட்டில் துவக்கப்பட்ட ஸ்லம்டன்கியு (SlamdunQ ) விளையாட்டு ஆற்றலை மேம்படுத்த, அணி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் பட்டைகள் உதவியுடன் இது விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற அணி சாதனங்களை அளிக்கிறது.

எஸ்பிலாலாப்ஸ் லிட் - ஜேக்பாய் சென்ஸ் அண்ட் காலின்க்

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் காற்றை மாசு படுத்தும் கார்பனை வெளிப்படுத்துகின்றன. இந்த மாசை அச்சுத்துறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் இங்க் மற்றும் பிக்மண்டாக மாற்றும் செயலில் ஸ்பிலாலாப்ஸ் ( Sblalabs ) ஈடுபட்டுள்ளது.

உங்களுக்கு பிடித்தமான ஸ்டார்ட் அப்பிறகு வாக்களிக்க: http://www.google.co.in/landing/startupindia/

( இந்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா ,ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் பங்குதாரராக யுவர்ஸ்டோரி இருக்கிறது).

ஆக்கம்: ஹர்ஷித் மல்லயா | தமிழில்: சைபர்சிம்மன்