'ஸ்டார்ட் அப் சமூகம் வெற்றியடைய சிறப்பாக செயல்படுவேன்'- மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு

0

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த சுரேஷ் பிரபு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வலுவடைவதை உறுதிசெய்யவேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் புதுமையான வேறுபட்ட சிந்தனை கொண்ட தொழில்முனைவோருக்கு மாநிலம் துணை நிற்கும் என்பதையும் புதிய வர்த்தக அமைச்சராக பொறுப்பேற்றதும் தனது முகநூல் பக்கத்தில் நேரடியாக பதிவிட்டார்.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றதை செப்டம்பர் 4-ஆம் தேதி முகநூல் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் தான் மேற்கொள்ளவிருக்கும் பணிகளை பட்டியலிடும் வகையில் “#EmploymentGeneration,” “#FDI,” “#StartUpIndia,” “#MakeInIndia,” “#EaseOfDoingBusiness,” and “#Logistics.” (#வேலைவாய்ப்புஉருவாக்குதல்#, #எஃப்டிஐ#, #ஸ்டார்ட்அப்இந்தியா#, #மேக்இன்இந்தியா#, #தொழில்புரிவதில்எளிமை) போன்ற ஹேஷ்டேக் மூலம் சுட்டிக்காட்டினார். 

அதைத் தொடர்ந்து மோடியின் அரசாங்கத்தால் துவங்கப்பட்ட ’ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டேண்ட் அப் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

“இந்த அமைச்சகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இணைந்தேன். ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் கவனித்து ஸ்டார்ட் அப்களை பெரியளவில் ஊக்குவிக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார்,” என்றார்.

தங்களது வாழ்க்கையில் உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ ஸ்டார்ட் அப்பில் ஈடுபடவிருக்கும் தொழில்முனைவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அவர், 

“ஒரு புகழ்பெற்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொரு நாளும் புதிய நாள். ஸ்டார்ட் அப்பிற்கு எந்த நாளைத் தேர்ந்தெடுத்தாலும் அது தவறான நாள் அல்ல,” என்றார்.

தொழில்முனைவோர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்றார் வர்த்தக அமைச்சர். “மாற்றம் என்பது வாய்ப்பு. மற்றவர்களின் மாற்றம் உங்களுக்கு வாய்ப்பை வழங்கும். நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது அது அடுத்தவருக்கு வாய்ப்பாக மாறும். இதனால் நீங்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவராக மாறுகிறீர்கள். உங்களால் பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும்.” என்றார். 

மேலும் உலகின் முன்னணி நிறுவனங்கள் நூறு வருடங்களாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள் அல்ல. அவை மிகுந்த ஆர்வத்துடன் சமீபத்தில் துவங்கப்பட்ட நிறுவங்களே. இந்த நிறுவனங்கள் இன்று ஸ்டார்ட் அப்பை துவங்க உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும். ஏனெனில் இந்நிறுவனமே நாளை உலகின் முன்னணி நிறுவனமாக உருவாக முடியும்.

இதற்கு முன்பு வரை தொழில்முனைவோரின் பாதையில் அரசாங்கம் தடங்கல்களை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் நிலவியது. ஆனால் தற்போதைய அரசாங்கம் தடைகளை அகற்றுகிறது. அத்துடன் ஸ்டார்ட் அப்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து ஊக்குவிக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.

இதற்கு முன்பு போராட்டத்தை எதிர்கொண்ட நீங்கள் இப்போது அரவணைத்து செல்லும் போக்கை உணர்வீர்கள். ரிஸ்க் எடுக்க விரும்புவோருக்கும், வேற்பட்ட சிந்தனைகளைக் கொண்டவர்களுக்கும், பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. 

”என்னைப் பொருத்தவரை நீங்கள் எனது சமூகத்த்தில், எனது குடும்பத்தில் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். ஸ்டார்ட் அப் சமூகம் வெற்றியடையவும் சிறப்பிக்கவும் நான் சிறப்பாக செயல்படுவேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

ஸ்டார்ட் அப் சமூகத்திற்கு உந்துதலளிக்கும் விதத்தில் பல்வேறு திட்டங்களை அரசாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப்களுக்காக 10,000 கோடி ரூபாய் கார்பஸ் ஒதுக்குகிறது. 2,000 கோடி ரூபாய் அளவிற்கு உத்தரவாதம் வழங்குகிறது. இகோசிஸ்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரு மையத்தை உருவாக்குகிறது. இறுதியாக ஸ்டார்ட் அப்களுடன் ஆன்லைனில் நிகழ்நேர அடிப்படையில் தொடர்புகொள்ள ஏதுவாக இருக்கும் வகையில் ஒரு செயல்முறை உருவாக்குகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா