விவசாயியாக இருந்து தொழில் முனைவர் ஆன கோதாவரி தங்கே...

0

2011-ம் ஆண்டு 31 வயது கோதாவரி தங்கே தனது வாழ்நாளில் முதல் முறையாக விமானத்தில் ஏறியபோது மஹாராஷ்டிராவின் துல்ஜாபூர் தாலுகாவின் உஸ்மானாபாத் மாவட்டம் அதைக் கொண்டாடியது. கோதாவரி இந்தியாவில் உள்ள அடிநிலையில் இருக்கும் பெண்கள் அடங்கிய நெட்வொர்க்குகளின் பிரதிநிதியாக பெண்களின் நிலைக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் பங்கேற்க நியூயார்க் சென்று கொண்டிருந்தார்.

மராத்வாடா பகுதியில் உள்ள விவசாயிகளின் நெருக்கடி குறித்து மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் மராத்தியில் எடுத்துரைத்தார் விவசாயியாக இருந்து தொழில்முனைவோர் ஆன கோதாவரி. ஏழு வருடங்களில் 14 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர் பங்கேற்ற பெரும்பாலான நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகித்தார். 

’உன்னதி க்ளோபல் ஃபோரம்’ நிகழ்வில் யுவர்ஸ்டோரி உடனான உரையாடலில் கோதாவரி 19 வயதில் கணவரை இழந்த நிலை துவங்கி தன்னுடைய பகுதியைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகளுக்கு பாதை வகுத்தது வரை தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை விவரித்தார்.

கோதாவரியின் குடும்பப் பின்னணி

கோதாவரியின் உடன் பிறந்தோர் மூன்று சகோதரிகள். இவர் மூத்தவர். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கிராமத்தில் அதற்கு மேல் படிக்க போதுமான பள்ளிகள் இல்லை என்பதால் அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டார். பதினைந்து வயதில் இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவருக்கு பத்தொன்பது வயதிருக்கையில் விவசாயியான இவரது கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

கோதாவரியையும் அவரது இரண்டு குழந்தைகளையும் அவரது பெற்றோர் பராமரித்து வந்தனர். சுய உதவிக் குழுவில் பணியாற்றிய பாலு என்கிற சக கிராமவாசி ஒருவர் மூலம் அவருக்கு நம்பிக்கை பிறந்தது. அவர் அந்த சமூகத்துடன் கோதாவரி இணைந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். 

1999-ம் ஆண்டு பெண்கள் சுய உதவிக் குழுக்களில் பங்கேற்கத் துவங்கினார். விரைவில் மற்ற பெண்களையும் இந்த குழுக்களில் இணைத்துக்கொண்டார். உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுவான ’யஷ்வந்தி சக்தி சன்ஸ்தா’-வில் இவருக்குப் பணி கிடைத்தது. அங்கு ஆவணங்கள் எழுதும் பணியில் ஈடுபட்டார்.

”நான் வீட்டை விட்டு வெளியே சென்றபோது பேருந்தை நிறுத்துவதில்கூட சிரமத்தைச் சந்தித்தேன். ஒருவேளை பேருந்து நிற்கவில்லை என்றால் சுற்றி இருக்கும் மக்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்களே என்று நினைப்பேன். அறியாத மக்கள் மத்தியில் தனியாக பயணம் செய்வதற்கோ ஒரு உரையாடலை துவங்கவோகூட பயப்படுவேன்,” என்றார் கோதாவரி.

கோதாவரி தன்னுள் இருந்து பயம் அனைத்தையும் தகர்த்தெறிந்து விண்ணப்பங்களை ஆய்வு செய்தல், திரும்ப செலுத்தப்படும் தொகையை கண்காணித்தல் என அவரது பணி பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. நலிந்த மக்கள் பலரை அவர் இணைத்துக் கொண்டார். அவர்கள் தங்களுக்கென வகுத்துக்கொண்ட எல்லைகளைத் தாண்டி துணிவுடன் வெளிவர உதவினார். பின்னர் பெண்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி செயல்பட்டு வரும் ’சஷாகத் சகி சன்ஸ்தா’ என்கிற அரசு சாரா நிறுவனத்தில் கூட்டமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

18 ஆண்டுகளுக்கும் மேல்…

2000-ம் ஆண்டு சேவைகள் மற்றும் வசதிகள் மறுக்கப்படும் சமூகத்தினரின் நிலையான வளர்ச்சிக்குப் போராடி அடிநிலையில் இருக்கும் பெண்களின் நிலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபடும் ’ஸ்வயம் சிக்‌ஷான் பிரயோக்’ என்கிற புனேவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனத்தில் இணைந்தார். 

இத்தனை ஆண்டுகளில் கோதாவரி பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். மேற்கொண்டு படிக்க விரும்புகிறார். தொடர்ந்து பெண்களுடன் உரையாடுவது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த நுண்ணறிவு கிடைக்க உதவுவதாக அவர் தெரிவித்தார். அவர் பெண்கள் ஒருங்கிணைந்த குழுவை ஊக்குவித்து ஆரோக்கியம், ஊட்டச்சத்து, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் துவங்கினார். 

எஸ்எஸ்பி–யில் சேர்ந்த ஓராண்டில் கோதாவரி பெண்களின் பொருளாதார மற்றும் தலைமைத் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட பெண்களின் முதல் கூட்டமைப்பை நிறுவினார். தற்போது இந்த கூட்டமைப்பில் 5,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

2012-ம் ஆண்டு மரத்வாடா பகுதியில் தீவிர பஞ்சம் ஏற்பட்டபோது கோதாவரி உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த காய்கறிகள் மற்றும் உணவுப் பயிர்களை வளர்க்க 110 கிராமங்களைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான பெண்களை ஒன்று திரட்டினார்.

அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலான விவசாயிகள் கரும்பு மற்றும் சோயா பயிரிட்டனர். இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும். இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்துவிடும். ஒரு ஏக்கர் நிலத்தில் 25 வெவ்வேறு வகை காய்கறிகளை வளர்க்க ஊக்குவிக்கும் எஸ்எஸ்பி-யின் ஒரு ஏக்கர் மாதிரி மூலம் விவசாயிகள் லாபமடையத் துவங்கினர். பெண் விவசாயிகளில் முக்கிய கவனம் செலுத்தும் இந்நிறுவனம் இந்த மாதிரியை ஆர்கானிக் விவசாய நுட்பங்களுடன் சேர்த்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

தற்போது எஸ்எஸ்பி-யில் கோதாவரி புதுமைகளுக்கு வித்திடும் சமூக புதுமை நிதிக்கு பொறுப்பேற்றுள்ளார். விவசாயம், நீர் பாதுகாப்பு, பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் போன்றவற்றிற்காக ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். உஸ்மானாபாத் மாவட்ட ஊரக வளர்ச்சி ஆணையத்தின் (DRDA) மாவட்ட அளவிலான சிறந்த பயிற்சி அளிப்பவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு தேசிய மற்றும் உலகளவிலான கற்றல் பரிமாற்றங்கள், துவக்கநிலை அகாடமி, சர்வதேச கருத்தரங்குகள் போன்றவற்றில் தனது கூட்டமைப்பின் சாதனைகளை சுட்டிக்காட்டினார்.

இந்நிறுவனம் பெண் விவசாயிகளுக்கு சிறு கடன் உதவிகளும் வழங்குகின்றனர். “பெரும்பாலான வங்கிகள் சிறு நிதிகளை வழங்குவதில்லை. இந்த காரணத்தினால் நாங்கள் மூன்று வகையான கடன்களை அறிமுகப்படுத்தியபோது மரத்வாடா பெண்களுக்கு நிதி உதவிக்கான ஆதரவு கிடைக்கப்பட்டது,” என்றார் கோதாவரி.

”ஒரு பெண் விவசாயி தனது மாடுகளுக்கு வைக்கோல் வாங்கவேண்டியிருந்தால் இதற்கான கடனை எந்த வங்கியும் வழங்குவதில்லை. விவசாயியிடம் நிலம் இல்லாத சூழலிலோ அல்லது குறைவான நிலம் வைத்திருக்கும் நிலையிலோ கடன் என்பது கிடைக்காது. இதனால் எங்களது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.”

கோதாவரி எஸ்எஸ்பி உடன் பணியாற்றிய கடந்த 18 ஆண்டுகளில் பெண்களுக்கான பிரத்யேக நிதியுடன் உஸ்மானாபாத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 4,500-க்கும் அதிகமான விவசாயிகள் பயிற்சி பெற உதவியுள்ளார்.

எஸ்எஸ்பி இடமிருந்து ஒரு விவசாயி கடன் பெற அவரிடம் ஆதார் அல்லது ரேஷன் கார்டு அவசியம். அத்துடன் அவர் சுய உதவி விவசாயக் குழுக்களின் உறுப்பினராக இருக்கவேண்டும். கடன் வழங்கப்படுவதற்கு முன்பு அவருக்குச் சொந்தமான நிலம் மற்றும் கால்நடை குறித்த விவரங்கள் ’சஷாகத் சகி சன்ஸ்தா’ உறுப்பினரால் சரிபார்க்கப்படும்.

பெண் விவசாயிகளை அங்கீகரித்தல்

கடந்த 18 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் உள்ள பெண் விவசாயிகள் அங்கீகாரம் பெறத் துவங்கியுள்ளதாக கோதாவரி குறிப்பிட்டார். 

”ஒவ்வொரு விவசாய நிலத்திலும் 80 சதவீத விவசாயிகள் பெண்களாக இருப்பினும் அவர்கள் தொழிலாளர்களாகவே கருதப்படுகின்றனர். பெரும்பாலான நிலங்களின் சொந்தக்காரர்கள் ஆண்களாக இருப்பதால் இந்தப் பெண்கள் பொறுப்பேற்க உதவுவது சவாலாகவே இருந்தது. விதைத்தல், அறுவடை, விளைச்சலை சுத்தம் செய்தல் என எங்கும் பெண்களே உள்ளனர். ஆனால் விலை நிர்ணயம், தொழிலாளர்களை பணியிலமர்த்துதல், நிதி, விளைச்சலை சந்தைக்குக் கொண்டு செல்லுதல் போன்றவற்றில் இவர்கள் தலையிடுவதில்லை. நாட்டில் 55 பண்ணை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் பெண்களுக்கென பிரத்யேகமாக எதுவும் இல்லை. இதனால் எங்களது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,” என்றார் கோதாவரி.

விஜயலஷ்மி ஃபார்மர் ப்ரொட்யூஸ் கம்பெனி, மஞ்சரி ஃபார்மர் ப்ரொட்யூஸ் கம்பெனி ஆகிய இரண்டு பண்ணை பொருட்கள் நிறுவனத்தை கோதாவரியின் தலைமையின்கீழ் எஸ்எஸ்பி துவங்கியது. கடந்த மூன்றாண்டுகளில் 250 விவசாயிகளும் 10 இயக்குனர்களும் இந்நிறுவனத்துடன் இணைந்துள்ளனர்.

18 ஆண்டுகளில் 14 நாடுகள்!

உலகம் சுற்றுபவர் என கேலி செய்யப்படும் இவர் கென்யா, தி ஃபில்லிஃபைன்ஸ், இத்தாலி, நேபால், அமெரிக்கா, துருக்கிஸ்தான், பிரேசில், சுவிட்சர்லாந்து, மலேசியா, செண்டாய், துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பயணித்துள்ளார். 

2011-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் CSW-வில் உரையாற்றினார். நிலையான வளர்ச்சியில் சமூகத்தின் அடிநிலையில் இருக்கும் பெண்களின் முக்கிய பங்கை காட்சிப்படுத்த ரியோ+20-யில் பங்கேற்றார். ஜெனீவாவில் வறட்சி ஏற்படும் சூழலில் பெண்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எடுத்துரைக்கும் ஐக்கிய நாடுகளின் பன்னாட்டு பேரிடர் குறைப்பு அணுகுமுறை (UNISDR) ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார். சமீபத்தில் வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதிக்கான (IFAD) ஐக்கிய நாடுகளின் உலகளாவிய தூதரானார். அத்துடன் 20 நாடுகளில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய முயற்சியான ‘நிலையான விவசாயத்தில் கிராமப்புற பெண்களுக்கான ஹுவாய்ரூ ஆணையத்திற்கும்’ உலகளாவிய தூதரானார்.

கோதாவரி கூறுகையில்,

”கொள்கைகளும் வாய்ப்புகளும் நிறுவன அளவிலேயே உருவாக்கப்படுகிறது. எனவே அடிநிலையில் இருக்கும் பயனாளிகளைச் சென்றடைவதும், அவர்களது கவலைகளையும் வாய்ப்புகளில் உருவாகக்கூடிய பின்னடைவுகளையும் கருத்தில் கொள்வதும், விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். மேலும் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட்டால் அவர்கள் இந்த நோக்கத்துடன் சிறப்பாக ஒன்றிணைவார்கள்,” என்றார்.

பருவநிலைக்கு ஏற்றவாறான விவசாய முறையை சிறப்பாக ஊக்குவித்ததற்காக சமீபத்தில் கோதாவரிக்கு ராம கோவிந்த தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இன்று இவர் மராத்வாடா பகுதியைச் சேர்ந்த பெண் விவசாயிகளை பிரதிபலிக்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி மோகன் | தமிழில் : ஸ்ரீவித்யா