பாலியல் துன்புறுத்தல்கள் வெளியில் மட்டுமல்ல பணியிடத்திலும் நடக்கிறது என்பதை உணருங்கள்!

0

நீங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்ததும் பலவீனமானவர்களை அச்சுறுத்தி துன்புறுத்தும் தவறான நடத்தைகள் முடிவிற்கு வந்துவிட்டது என்று நினைத்தீர்களா? அப்படியானால் அப்படிப்பட்ட நடத்தைகளை மறுபடி ஒருமுறை நினைத்துப் பார்க்கவேண்டிய நேரம் இது. ஒருவரது பணியிடம்கூட மோசமான துன்புறுத்தல்களுக்கான தளமாக மாறலாம். பல நேரங்களில் இப்படிப்பட்ட அச்சுறுத்துல்கள் நிறைந்த சம்பவங்கள் தீவிர துன்புறுத்தலாக மாறக்கூடும்.


இந்தச் சூழலை கற்பனை செய்து பாருங்கள். புதிதாக பணியில் சேரும் ஒருவர் தனது பணியிடத்தை தொழில்முறை வளர்ச்சிக்கான களமாகவே பார்க்கிறார். அவரிடம் இளமை, திறமை, பல்வேறு புதிய சிந்தனைகள், திட்டங்கள் போன்றவை நிரம்பியிருக்கிறது. அவருக்கு ஒரு மேலதிகாரி. அவரால் புதிதாக சேர்ந்த ஊழியரின் அறிவுத்திறன், சரியான அணுகுமுறை, கடின உழைப்பு போன்றவற்றை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இப்போது அந்த மேலதிகாரி தனது தன்னிறைவிலிருந்து விடுபட்டு தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த சூழ்நிலை அந்த மேலதிகாரிக்கு எரிச்சலூட்டுவதாக அமையும். தனக்குக் கீழே பணிபுரிபவரிடம் தவறுகளை கண்டறியத் துவங்குவார். இதிலிருந்து துன்புறுத்தல் ஆரம்பிக்கும். நீண்ட நேரப் பணி, குறைவான காலக்கெடு, விரும்பத்தகாத நடத்தை என இறுதியாக புதிதாக சேர்ந்தவர் வேலையை ராஜினாமா செய்ய நேரிடும். இதுவே பணியிடத்தில் நடக்கும் துன்புறுத்துல்களுக்கு ஒரு பொருத்தமான உதாரணமாகும்.

The Devil Wears Prada திரைப்படம் குறித்து அறிவோம். இதில் வரும் ரன்வே பத்திரிக்கை எடிட்டரான Miranda Priestley மோசமான மேலதிகாரிக்கு ஒரு சரியான உதாரணம். மேலதிகாரியாக இருக்கட்டும் குழுவாக துன்புறுத்துபவர்களாக இருக்கட்டும் பணியிடத்தில் நடக்கும் துன்புறுத்தல்கள் காரணமாக உதவியற்ற நிலை, பாதுகாப்பின்மை, மன அழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.

நாட்டின் ITES-BPO பிரிவை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு பணியிடத்தில் நடக்கும் துன்பறுத்தல்களை நேர்காணல் நடத்தி அதன் தரவுகள் வாயிலாக அறிய ஆறு நகரங்களைச் சேர்ந்த 1036 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை Premilla D’Cruz மற்றும் Charlotte Rayner ஆகியோரால் கட்டுரையாக பதிவுசெய்யப்பட்டது.

இந்த மாதிரிகளில் 44.3 சதவீதம் பேர் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும், 19.7 சதவீதம் பேர் மிதமான மற்றும் தீவிரமான அளவுகளில் அனுபவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் படிநிலைகளை பின்பற்றும் சூழலில் மேலதிகாரிகளே அதிகம் துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு குறிப்பிட்ட பணி சார்ந்த நடத்தைகளிலும் அதை வெளிப்படுத்துகின்றனர்.

வேலை வாய்ப்புத் தளமான CareerBuilder.in கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட 55 சதவீத இந்திய ஊழியர்கள் தங்களது பணியிடங்களில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். செய்யாத தவறுகளுக்கு குற்றம் சாட்டப்படுகின்றனர் (33 சதவீதத்தினர்). அதைத் தொடர்ந்து ஒதுக்கப்படுவதால் அவர்களது கருத்துக்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை (32 சதவீதத்தினர்). இப்படிப்பட்ட துன்புறுத்தல்களே ஊழியர்களின் பொதுவாக புகார்களாகும்.

பணியிடத்தில் நடக்கும் வெவ்வேறு வகையான துன்புறுத்தல்களும் அவைகளை எதிர்கொண்டு வெற்றியடைவதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சூழல்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் தவறாக நடத்தப்படுகிறீர்கள் என்று பொருள்.

• காரணமின்றி தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். உங்களது விளக்கங்கள் நிராகரிக்கப்படும்.

• மற்றவர்களைக் காட்டிலும் மாறுபட்ட விதத்தில் நடத்தப்படுவீர்கள். உதாரணத்திற்கு உங்கள் குழுவில் மற்றவர்கள் எந்த பிரச்சனையும் இன்றி நேரத்தை பின்பற்றாமல் அலுவலகத்திற்கு வந்து செல்கையில் நீங்கள் மட்டும் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக வந்தாலும் உடனே கேள்வியெழுப்புவார்கள்.

• மற்றவர்கள் முன்னிலையில் உங்களது தவறுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டப்படும். பெரும்பாலும் இந்தத் தவறுகள் அற்பமானதாகவே இருக்கும்.

• ஒதுக்கப்படுவீர்கள். உதாரணத்திற்கு குழுவாக மதிய உணவிற்கு செல்லுதல், முக்கிய விவாதங்கள் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளாமல் ஒதுக்குவார்கள்.

• பயமுறுத்தப்படுவீர்கள், உங்களைப் பார்த்து கூச்சலிடுவார்கள். அடுத்தவர் முன்னிலையில் அவமானப்படுத்துவார்கள்.

• உங்களை சுற்றி நடப்பவற்றிலிருந்து குறிப்பாக குழுவாக செயல்படும் சூழலில் நீங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவீர்கள்.

• சாத்தியமற்ற இலக்குகளையும் காலகெடுவையும் நிர்ணயிப்பார்கள்.

• அதிகமான பணிச்சுமை இருக்கும் அல்லது எந்தப் பணியுமே ஒதுக்கப்படாது.

• நீங்கள் முடிக்கவேண்டிய பணி குறித்த தகவல்கள் மறுக்கப்படும்.

• நீங்கள் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் பணியிலிருந்து கடைசி நிமிடத்தில் விலக்கிவிடுவார்கள்

• உங்களது அறிவுசார் தகவல்களும் கருத்துக்களும் அபகரிக்கப்படும்

• காரணமின்றி விடுப்பு மறுக்கப்படும். விடுப்பு அளித்தாலும் தொலைபேசி வாயிலாக உங்களுக்கு அழைப்பு அல்லது இ-மெயில் வந்துகொண்டே இருக்கும்.

• உங்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான புகார்களும் விரும்பத்தகாத கடிதங்களும் அனுப்பப்படும்.

• மீட்டிங்கில் பங்கேற்ற அனுமதி மறுக்கப்படும். பெரும்பாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்படும்.

• சற்றும் தொடர்பு இல்லாத விஷயங்களுக்காக உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுத்துவார்கள்.

• ராஜினாமா வழங்கும் நிலைக்குத் தள்ளுவார்கள் அல்லது பணியிடைநீக்கம் செய்யப்படுவீர்கள்.

இப்படிப்பட்ட துன்புறுத்தல்கள் உங்களை எவ்வாறு பாதிக்கும்?

• பயம், மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்றவை ஏற்படும்.

• உங்கள் மீதும் உங்கள் பணி மீதும் உள்ள நம்பிக்கை குறையும்.

• பணியில் சிறப்பிக்க முடியாமல் வெற்றியடைய முடியாமல் போகும்.

• பணிக்குச் செல்வதிலும் பணியை செய்து முடிப்பதிலும் இருக்கும் ஊக்கம் குறையும்.

• பணிக்கு வெளியே இருக்கும் வாழ்க்கை அதிக அழுத்தத்துடன் இருக்கும். இதனால் குடும்ப உறவுமுறைகளிடையே சிக்கல் ஏற்படும்.

• தலைவலி, முதுகுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

இந்த பிரச்சனைகளை எப்படி கையாள்வது?

தயார்நிலையில் இருக்கவேண்டும்

பிரச்சனைகள் கைமீறி போகும்போது உங்களிடம் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தோ நடந்துகொண்ட விதம் குறித்தோ குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பாரபட்சமற்ற விசாரணைக்கான நேரம் வரும்போது நீங்கள் தடுமாறிவிடாமல் இருக்க கையில் அனைத்துத் தகவல்களையும் வைத்துக்கொண்டு தயார்நிலையில் இருக்கவேண்டும்.

உங்களுக்கான வரையறையை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்

உங்களிடம் மற்றவர் என்ன பேசாலம் என்பதற்கான வரையறையை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். மற்றவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதும் இதில் அடங்கும். உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத விரும்பத்தகாத விஷயங்களை அமைதியாக ஏற்றுக்கொள்ளவேண்டாம்.

உங்களை வெளிப்படுத்துங்கள்

உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்களுடன் பணிபுரியும் நம்பகமான சக பணியாளர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது கிசுகிசுவாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தகவல்களை சாமர்த்தியமாக அடுத்தவரிடம் தெரிவிக்கவேண்டும்.

கண்ணோட்டத்தை மாற்றுங்கள்

சில சமயம் உங்களை துன்புறுத்துபவரின் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறித்து ஒரு கனம் சிந்தித்துப் பார்த்தால் அவர் அந்த குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்வதற்கான காரணம் குறித்த நுண்ணறிவு கிடைக்கும். அவர் உங்களிடம் மட்டும் அவ்வாறு நடந்துகொள்கிறாரா அல்லது எல்லோரிடமும் இப்படியே நடந்துகொள்கிறாரா? அவரது உயர் அதிகாரியிடமிருந்து கிடைத்த அழுத்தத்தை அப்படியே உங்களிடம் காட்டுகிறாரா? எந்த காரணத்திற்காகவும் துன்புறுத்தல்களை நியாயப்படுத்த முடியாது என்றாலும் அவர்கள் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று புரிந்துகொள்வதற்கும் இப்படிப்பட்ட சூழலை கையாள்வதற்கும் இந்த கண்ணோட்டமும் புரிதலும் உதவும்.

நடுநிலையாக பேசுபவரை கண்டறியுங்கள்

விஷயம் கைமீறி போகும்போது அது குறித்து விவாதிக்க விவேகத்துடன், நடுநிலையாக, முதிர்ச்சியுடன்கூடிய அணுகுமுறை கொண்ட நபரை கண்டறியுங்கள். அவர் ஏதேனும் மூத்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது மனிதவளத் துறையைச் சேர்ந்தவராக இருக்கலாம். பணியிடத்திற்கு வெளியே இருக்கும் நெருங்கிய நண்பர் விஷயத்தை பகுத்தறிவுடன் ஆராய்ந்து உங்களுக்கு ஆலோசனை வழங்கமுடியும்.

உங்களது உள்ளுணர்வை நம்புங்கள்

உங்களை தவறாக நடத்தினால் அத்தகைய சூழல்களை உங்களால் திறமையாக கையாள முடியும் என்று நம்புங்கள். நீங்கள்தான் உங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். நியாயமற்ற விஷயங்களும் காரணமற்ற பிரச்சனைகளும் ஏற்படும் இடத்தில் கட்டாயம் நாம் இணைந்திருக்கவேண்டுமா என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு இந்தச் சூழல் சரிவராது என்று தோன்றினால் அதற்கான மாற்று வழியை சிந்தித்து அதில் உங்களது பயணத்தை தொடருங்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன்