பத்தொன்பதே வயதில் தொழில் முனைபவராக உருவெடுத்தது எப்படி?

0

என்னிடம் பேசும் பலரது முதல் கேள்வி, ‘கல்லூரி மாணவியில் இருந்து தொழில் முனைபவராக நான் மாறியது எப்படி?’ என்பதுதான்.

இதற்குக் காரணம் என்னைப் போன்ற பலரின் கடின உழைப்புதான். இந்த முன்னேற்றத்தை அடைவதற்கு முன்னர் எத்தனையோ தவறுகளைச் செய்து சரிவடைந்தோம். அதில் கற்ற பாடங்களைக் கொண்டுதான் முன்னேற்றம் கண்டுள்ளோம். பலருக்கும் தாம் போகும் பாதை சரியா? எப்போது தொழிலைத் தொடங்கலாம்? என குழப்பம் நிலவியபடியே இருக்கும். நாம் எதிர்பார்ப்பதை அடையவேண்டுமெனில், வெற்றி பெறும்வரை போராட வேண்டும். முதல் முயற்சியில் அனைவருமே ஜெயிப்பது இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலில் 9-5 மணிவரைதான் பணி புரிவேன் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இரண்டாவதாக நமது எண்ணங்களை செயலாக்கும் வழிமுறையை தெரிந்துகொள்ள வேண்டும். இவையனைத்துக்கும் மேல் மிகவும் முக்கியமானது, ஒரு தொழில் முனைவோராக நமது எண்ணத்தை செயல் வடிவமாக்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதன் முதல்கட்டமாக உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள சில கேள்விகளைக் கேட்க வேண்டியது அவசியம். உங்களது யோசனை ஏதாவது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக உள்ளதா? ஆம் எனில், எவ்வளவு பெரிய பிரச்சனைக்கு தீர்வாகின்றது? இல்லை எனில், உங்களது ஸ்டார்ட்-அப் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தைக் கொண்டுவரும்?

குடும்பத்தினரிடம் உரையாட வேண்டும்

உங்களது குடும்பத்தினர் புரிந்துகொள்ளும்படி நீங்கள் அதீத ஆர்வமாக செய்ய விழையும் தொழிலைப்பற்றி அவர்களிடம் விளக்க வேண்டும். உங்களது குறிக்கோள்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என முதல் முயற்சியிலேயே எதிர்பார்க்கக்கூடாது. தங்களின் சின்ன குழந்தை ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைக்கப்போகின்றது என்பதை அவர்கள் உணர நேரம் கொடுங்கள். நீங்கள் தொழிலில் ஏதேனும் பிரச்சனையை சமாளிக்க முயலும்போது குடும்பம்தான் ஆதரவாக இருக்கும் என்பதால், அவர்களின் கேள்களுக்கு பதிலளிக்கும்போது அமைதியையும், பொறுமையையும் கையாளுங்கள். ஒருவேளை நீங்கள் இந்தத் தொழிலில் இறங்குவதை விரும்பவில்லையென்றால் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை காத்திருங்கள். அதேவேளை மனதளவில் தொழில் தொடங்க உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு வேண்டி சொந்தமாக அவர்கள் தொழில் தொடங்கும்முன் ஒரு பட்டப்படிப்பையாவது முடித்திருக்க வேண்டும் என்ற விரும்புவர். உங்களது பார்வையை குடும்பம் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணும் நீங்கள், உங்களது பெற்றோரின் பயம் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

அழுத்தமான முடிவெடுத்து அதை நோக்கிப் பயணித்தல்

தொழில் தொடங்குவதைப் பற்றிய யோசனை தோன்றியதும் உடனடியாக கல்லூரிப்படிப்பை விட்டுவிட வேண்டாம். ஏனெனில், கல்லூரியில் இருந்து நீங்க முயல்வது ஒரு மாபெரும் முடிவு. அத்தகைய முடிவுக்கு வரும்முன் படிப்பை கைவிட வேண்டிய அவசியம் உள்ளதா? என நன்கு யோசிக்க வேண்டும். தொழில் முனைபவராக உருவெடுக்க கல்லூரிப் படிப்பு என்பது கட்டாயத் தகுதி இல்லை. எனினும், அதை விட்டுவிடாமல் முழுமையாக முடிக்க முயல்வது முதிர்ச்சி மற்றும் பொறுப்பான முடிவு ஆகும்.

தொழில் தொடங்குதல் மற்றும் முடிவெடுப்பதின் முக்கியத்துவத்தை உணர்தல் 

தொழில் தொடங்கிய பின்னர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நாம் பயணிக்கப்போகும் பாதையை தீர்மானிக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்தப் பயணத்தில் தவறுகள் நிகழ்வது சுலபம் எனப் பலரும் கூறுவர். தவறுகள் அவ்வப்போது நிகழலாம் என்றாலும், ஒவ்வொரு அடியையும் பின்விளைவுகளை யோசித்து வைக்க வேண்டியதும் அவசியம். முதல் ஆறு மாதங்கள் தொழிலில் மிகவும் கடினமானதாக இருக்கும்.

உங்களது சிந்தனையை செயலாக்க எத்தனை பேர் கொண்ட குழு தேவை; எப்படி ஒரு உபயோகமான பொருளாக அதை வடிவமைப்பது; இதற்காக கடன் வாங்க வேண்டுமா? அல்லது ஏற்கனவே தெரிந்தவர்களின் ஆதரவைப் பெறலாமா? என சிந்திக்க வேண்டும். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுத்து எதிர்காலத்தை சூன்யமாக்கிக்கொள்வதைக் காட்டிலும் சிறப்பான வழி அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முன்பு அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை யோசிப்பதுதான் சாதுர்யம்.

ஆபத்துக்களை அறிவதும் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வதும்

உங்களுடன் இணைந்து பணிசெய்ய விரும்புபவர் எந்த ஆதாயத்தை முன்னோக்கியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எவ்வளவு நல்ல மனிதராக இருப்பினும் தொழில் என வரும்போது, தமக்கென ஆதாயத்தை தேடுபவராகவே இருப்பார். ஆகவே, உங்களது முடிவு எத்தகைய ஆதாயத்தை உண்டாக்கும் என சிந்தியுங்கள். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், அதில் இருக்கும் ஆபத்துக்களை அறிய மறக்காதீர். சின்ன முடிவுகளும் பெரிய மாற்றத்தை உண்டாக்கலாம். எனவே, உணர்ச்சிவசப்படாமல் ஆய்ந்தறிந்து முடிவுகளை எடுக்கவேண்டும்.

தங்களது தொழில்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தை தெரிந்துகொள்ளுங்கள்

பெண் தொழில்முனைவோர்கள் பலரும் ‘கார்pபரேட் ஆண்களின் உலகம்’ என்ற கருத்தை மாற்றிவருவதை கண்கூடாகக் காணமுடிகின்றது. இந்தத் துறையில் வெற்றியடைய உங்களது படைப்பாற்றல்தான் அத்தியாவசியம். ஆகவே, ஒரு பெண்ணாக தன்னந்தனியாக இந்தத் தொழிலில் இறங்கமுடியாது என்று எண்ணவேண்டாம். நம்பிக்கையோடு உங்களது உள்ளுணர்வு சொல்வதைக் கேளுங்கள். உங்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் தொழில்முனைவோராவதைத் தடுக்க முடியாது என்பதை மறவாதீர்.

ஆக்கம்: அஃப்ரீன் அன்சாரி |தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்