’மெய்நிகரில் நேர்காணல்'- பணியமர்த்துவோரை, தகுதியாளருடன் தொழில்நுட்பம் மூலம் இணைக்கும் ’Hireica’ 

4

ஊழியர்களை பணியிலமர்த்தும் முறையில், ஒரு நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை என் தனிப்பட்ட அனுபவத்தில் நான் சந்தித்திருக்கிறேன். இந்த முறையில் இருக்கும் பின்னடைவுகளை எப்படித் தீர்ப்பது என்று சிந்தித்தேன். ஒரு வேலை கிடைத்ததும் பணியிலமர்த்துவதில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து யோசிப்பிதை மறந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்தும் இதிலுள்ள சிக்கல்கள் நீடித்துக்கொண்டிருப்பதை அறிந்தேன். இதை சரிசெய்யும் பணியை நானே கையில் எடுத்து தடையின்றி உடனடியாக தீர்வளிக்க முடிவெடுத்தேன்,” என்ற தனது தொடகத்தை பற்றி பகிர்ந்தார் வினோத்குமார்.

இந்த சிக்கலை சீர் செய்யும் முயற்சியில் வினோத்குமார் தொடங்கிய நிறுவனம் ’ஹையரிக்கா’ ’Hireica’ எனும் மெய்நிகர் நேர்காணல் தளம். இதன் நிறுவனர் மற்றும் CTO-வான இவர் எம்.எஸ்.சி, எம்.டெக் மற்றும் எம்.பி.ஏ முடித்தவர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்.

Hireica நிறுவனர் வினோத்குமார்
Hireica நிறுவனர் வினோத்குமார்

இந்நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் ஹைதராபாத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிந்துள்ளார்.  

”ஒரு நிறுவனத்தின் புதிய தயாரிப்பு என்பது அதன் நிறுவனருடன் தொடர்புடையது என்பது என் திடமான நம்பிக்கை. நான் ஒரு பிரச்சனையை சந்திக்கும்போது அது குறித்து சிந்தித்து அதன் தீர்வுக்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். இதனால் நம் சமூகமும் நம்மை சுற்றியுள்ளோரும் நன்மை அடையவேண்டும்,” என்கிறார்.

Hireica நிறுவனத்தின் சேவைகள் 

ஊழியர்களை பணியிலமர்த்துவது என்பது நிறுவனங்களில் ஒரு முக்கிய பகுதியாகும். அது ஒரு நிறுவனத்தை உருவாக்கவோ அல்லது உருகுலைக்கவோ செய்யும். பாரம்பரிய முறை தற்போதைய தேவைக்கு பொருந்தாத ஒன்றாகும். வேலை தேடுவோர் மற்றும் பணியிலமர்த்துவோர் ஆகிய இருவரின் தேவைகளும் சரியான முறையில் பூர்த்தியாவதில்லை. அதிக நேரம் செலவிடுவது, மனித வளம், அதிகமான செலவு போன்ற பல பிரச்சனைகள் இருந்தாலும் முழு அர்பணிப்புடன் சரியான நபரை தேர்ந்தெடுப்பது என்பது வெறும் கனவுதான். இது தொடர்பான இணையதளங்கள், விண்ணப்பங்களை அடுக்கிக்கொண்டே இருக்கிறது. அல்லது ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே மையப்படுத்துகிறது. இது தவறான அணுகுமுறையாகும் என்று துறையை பற்றி விளக்கினார் வினோத்குமார்.

”Hireica, ஒரு முற்றிலும் மெய்நிகர் இன்டெர்வியூ அனுபவத்தை அளிக்கிறது. பழைய முறையில் இருந்த சிக்கல்களை சமாளிக்க உதவுகிறது. 200 க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளுக்கும் 150 க்கும் மேற்பட்ட துணை துறைகளுக்கும் பணியிலமர்த்த உதவும் சேவையை அளிக்கிறது. வேலை தேடுபவரின் திறமையை பணியிலமர்த்துபவருக்கு காண்பித்து அவருக்கு தேவையான சரியான நபரை தேர்ந்தெடுக்க உதவுவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.”

மேலும் நிறுவனம் இருக்கும் இடத்திற்கு நேரில் செல்லாமல் உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இத்தளத்தைப் பயன்படுத்தி நேர்காணலில் கலந்துகொள்ளமுடியும் என்பதே இதன் சிறப்பாகும் என்று விளக்கினார். 

இந்த விர்சுவல் நேர்காணல் தளத்தின் வாயிலாக HAAS சேவை அளிக்கும் முதல் நிறுவனம் இது. இதில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பணியிலமர்த்த பரிந்துரைக்கப்படுவார்கள். பணியிலமர்த்துவோர் குறிப்பிட்ட பணிக்குத் தேவையான தகுதியுடைய நபரை தேர்ந்தெடுக்க உதவும்.

Hireica பற்றிய காணொளி
Hireica பற்றிய காணொளி

தனித்துவம்

போட்டியாளர்கள் பயன்படுத்தும் பழமையான முறையில் அல்லாமல் ஒரு தனித்துவமான தளத்தின் வாயிலாக பணியிலமர்த்துவோரையும், பணி தேடுபவரையும் இணைக்கிறது. மேலும் பணி தேடுபவர் நேரடியாக பணியிலமர்துவோரைச் சென்று சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. இதனால் இரண்டு பக்கத்தினரும் நேரம், மனித வளம் உள்ளிட்ட பல செலவுகளை தவிர்க்கமுடியும்.

மேலும் விண்ணப்பித்தவர்கள் பட்டியலிலிருந்து பணியிலமர்த்துவோர், குறிப்பிட்ட பணிக்குத் தேவையான அத்தியாவசியமான திறன் கொண்டவர்களை விர்சுவல் தேர்வு முடிவு மூலம் எளிதில் தேர்ந்தெடுக்க உதவும். இப்படிப்பட்ட பட்டியலை எந்த ஒரு போட்டியாளரும் வழங்குவதில்லை. 

மேலும் விர்சுவல் டெஸ்ட், விர்சுவல் நேர்காணல், ஆஃப் லைன் நேர்காணல், விர்சுவல் குழு விவாதம், webIDE போன்ற பல தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது ஹயரிக்கா. இதனால் பணியிலமர்த்தும் முறை எளிதாகி வேலை தேடுவோர் மற்றும் பணியிலமர்த்துவோர் இருவரும் பயனடைகிறார்கள்.

மிகக்குறைந்த செலவில் மனித வளத்தின் தேவையின்றி சரியான ஊழியரை, குறைவான நேரத்தில் கண்டறிய உதவுகிறது. தற்போது வேலை தேடுவோருக்கு இலவச வாழ்நாள் சந்தா அளித்து வருகிறது ஹயரிக்கா. நிறுவனங்கள், 14 நாள் சோதனை காலத்தில் இவர்களின் சேவை குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். அதன் பிறகு பணியிலமர்த்துவோர் மூன்று பேக்கேஜ்களில் அவர்களின் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி ஒரு மாதம், ஆறு மாதம், அல்லது ஓராண்டு சந்தா திட்டம் என வேறுபட்ட கால அவகாசங்களில் உள்ளது.

எதிர்கொண்ட சவால்கள்

மற்ற தொழில்முனைவோர்கள் போலவே வினோத்குமாரும் தனிப்பட்ட முறையிலும் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. முழு நேர தொழில்முனைவோராவதற்கு தனது பெற்றோரை சம்மதிக்கவைத்தார். சொந்த நிறுவனத்தை தொடங்க, தன்னுடைய பணியை ராஜினாமா செய்தபோது மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் அவரது நண்பர்கள் மிகவும் ஆதரவாக இருந்தனர். சிலர் அவரது எதிர்காலம் குறித்த வருத்தத்தில் வேறு ஏதாவது ஒரு மாற்று திட்டத்தையும் யோசிக்க வலியுறுத்தி உள்ளனர்.

பொதுவாக பணம், மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணமாக இருக்கும். இருப்பினும் அது என் உற்பத்தி திறனையோ சரியான முடிவெடுக்கும் திறனையோ சற்றும் பாதிக்கவில்லை. சேமிப்பு, முதலீடு, செலவு போன்றவற்றை முன்கூட்டியே சரிவர திட்டமிட்டேன். இன்றுவரை சுய முதலீட்டில் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,” என்றார் வினோத்.

webIDE-யை 19க்கும் மேற்பட்ட மொழிகளில் டெவலப் செய்யும்போதும், பணியில் அமர்துவரின் தேவைக்கேற்ப ஒட்டுமொத்த வேலையோட்டத்தையும் மாற்றியமைக்கும் வழிகளை உருவாக்கியபோது பல சவால்களை எதிர்கொண்டனர். அதை உருவாக்க காலநேரம் அதிகம் பிடித்திருக்கிறது. இருந்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தியுள்ளார் வினோத்குமார்.

குழுவினர் விவரம்

Hireica, நான்கு நபர்கள் அடங்கிய சிறிய குழுவை கொண்டுள்ளது. நிறுவனத்தின் முதுகெலும்பான இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். வினோத்குமார் சிடிஒ, பார்த்திபன், இணை நிறுவனர் மற்றும் சிஓஓ’ஆக உள்ளார். சிஇஒ’ஆக அரவிந்தனும், தகவல் பாதுகாப்பு பொறியாளராக தமிழ்வாணன் உள்ளனர்.

Hireica நிறுவன குழு
Hireica நிறுவன குழு

கெஸ்வொர்க் நிறுவனர், மணி துரைசாமி, ஃபிக்ஸ்நிக்ஸ் இணை நிறுவனர் சண்முகவேல் சங்கரன், மற்றும் இன்மொபி நிறுவனர் நவீன்திவாரி ஆகியோர் வினோத்குமாருக்கு வழிகாட்டிகளாக இருந்து தன் தொழில்முனைவு பயணத்தை பெரிதும் ஊக்கப்படுதியதாக கூறினார். 

வினோத்குமார் தன்னைப்போன்ற தொழில்முனைவோருக்கு சொல்லிக்கொள்ள விரும்பது, 

“வாழ்க்கை குறுகிய காலத்திற்கானது. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். எதையும் துணிந்து செய்யுங்கள். எந்த விஷயத்தையும் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, அதை நடைமுறைப்படுத்துங்கள். தயாராக இருந்தால் மட்டும் போதாது, செய்யத்தொடங்குங்கள். என்னால் முடியும் என்று சொல்லாதீர்கள், செய்து காட்டுங்கள். லெட்ஸ் ஸ்டார்ட் அப்!”

இணையதள முகவரி: Hireica


Deputy Editor, tamil.yourstory.com I love to meet new people and hear their stories and put it to words for the world to read.

Stories by Induja Ragunathan