உலகின் மிகவும் சக்திவாய்ந்த 2-வது பெண்மணி ஆனார் இந்திரா நூயி! 

0

பெப்சிகோ சிஇஒ மற்றும் இயக்குனர் இந்திரா நூயி, ஃபார்தூன் வெளியிட்டுள்ள ’உலகின் மிக சக்திவாய்ந்த 51 பெண்கள்’ பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து மீண்டும் ஒரு முறை தன் நிலையை நாட்டி, இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளார். ஜென்ரல் மோட்டார்ஸ் தலைமை இயக்குனர் மற்றும் சிஇஒ மேரி பாரா இந்த பட்டியலில் முதலாம் இடத்தை பிடித்து உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஃபார்தூன் வெளியிட்ட இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் இந்திரா நூயி மட்டுமே. 2014 ஆம் ஆண்டு இதே பட்டியலில் இந்திரா, மூன்றாம் இடத்திலும், 2015 இல் இரண்டாம் இடத்திலும் இருந்தார். இம்முறை தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார் இந்திரா நூயி. பிரபல நிறுவனங்களின் 22 சிஇஒ’க்கள் மற்றும் பல முக்கிய அலுவலக மேலாளார்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் 9 புதுமுக பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர். 

தனது 10ஆம் ஆண்டு சிஇஒ பணிவாழ்க்கையில் இருக்கும் நூயி, ஃபார்தூனுக்கு அளித்த பேட்டியில்,

“நான் என் பணியின் வேகத்தை எந்தவிதத்திலும் குறைக்கப் போவதில்லை. கடந்த 12 மாதங்களில், பெப்சிகோ’வின் சந்தை மூலதன மதிப்பு 18சதவீதம் உயர்ந்து 155பில்லியன் அமெரிக்க டாலார் மதிப்பை எட்டியுள்ளது. 2015 இல் சர்வதேச அளவில் ஏற்ற இறக்கம் இருந்தும் இந்நிலையை அடைந்துள்ளோம். பெப்சிகோ’ வின் விற்பனை 2015 இல் 5சதவீதம் வீழ்ச்சி அடைந்து, 13 சதவீதம் லாப வீழ்ச்சியை சந்தித்தது,” என்றார். 

முதலீட்டாளர்கள் நூயி சந்தைப்படுத்தும் ஆரோக்கிய உணவு மற்றும் பானங்கள் முயற்சி, சிறந்த லாபத்தை அளிக்கும் என நம்பிக்கைக் கொண்டுள்ளனர். ஃபார்தூனின் செய்திகளின் படி, விரைவில் இவர்கள் ஆரோக்கியம் சார்ந்த நிறுவன கையகப்படுத்தலில் ஈடுபடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நூயி, சோடா உற்பத்தியில் இருந்து வேறுபட்ட துறைகளில் நுழைய திட்டங்கள் வகுத்துள்ளதாகவும் தெரிகிறது. 

’மிக சக்திவாய்ந்த பெண்மணி’ என்ற நிலையை மேரி பாரா தக்கவைத்துக்கொள்ள, அவர் நிறுவனத்தில் ஏற்படுத்திய வரலாற்றுமிக்க வளர்ச்சியே முக்கியக் காரணமாகும். 152.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை எட்டி, ஜென்ரல் மோட்டார்ஸ்; ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவானாக தொடர அவரின் பங்கு பெரும் பங்கு வகிக்கிறது.  

2014இல் ஏற்பட்ட துறை வீழ்ச்சியின் போது, சில கடின முடிவுகளை எடுத்து, ரஷ்யாவில் அவர்களது இயக்கத்தை நிறுத்தி, ரைட் ஷேரிங் நிறுவனம் ‘லிஃப்ட்’ இல் முதலீடு செய்து, 2015 இல் 9.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டி சாதனை படைத்தார் மேரி பாரா என்று ஃபார்தூன் குறிப்பிட்டுள்ளது. 

இவர்களை தவிர சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில்: லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின்  மரில்ன் ஹெவ்சன் மூன்றாம் இடத்திலும், ஐபிஎம் கின்னி ரொமெட்டி நான்காம் இடத்திலும், பிடிலிட்டி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அபிகெயில் ஜான்சன், ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். பேஸ்புக்கின் ஷெரில் சாண்ட்பெர்க் ஆறாம் இடத்திலும், மேக் விட்மன் ஏழாம் இடத்திலும், பெபா நோவாகோவிக் எட்டாம் இடமும், ஐரீன் ரோசென்ஃபெல்ட் ஒன்பதாம் இடமும், ஆரக்கிள் சிஇஒ சாஃப்ரா காட்ஸ் பத்தாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவல்: பிடிஐ