பள்ளி மூடப்படாமல் தடுக்க தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கும் மாணவி!

0

மங்களூரு தாலுக்காவைச் சேர்ந்த முல்கியின் கில்படி ஆரம்பப்பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வகுப்புகள் எடுக்கிறார். இந்தப் பள்ளியை மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நான்கு மாணவர்களில் ஒருவரான இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த நிஷ்மிதா அந்தச் சூழல் ஏற்படாமல் தடுத்து உதவியுள்ளார். 

இவரது அப்பா வாசுதேவ் மூல்யாவும் அம்மா லஷ்மியும் தினக்கூலிகளாக பணியாற்றுகின்றனர். இவர்கள் உதவியதால் இந்த பள்ளி மூடப்படவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டது. இதனால் இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும்.

நிஷ்மிதா தினமும் அவரது அம்மாவுடன் சுமார் ஒரு மணி நேரம் நடந்து பேருந்து நிலையத்தை வந்தடைவார். அங்கிருந்து கில்படி பகுதியைச் சென்றடைய மேலும் இரண்டு பேருந்துகளில் பயணிக்கவேண்டும். அதன் பிறகு மறுபடி பன்னிரண்டு நிமிட நடைப்பயணம் செய்தால்தான் பள்ளியைச் சென்றடைய முடியும். அது மட்டுமன்றி இந்த 60 கிலோமீட்டர் பயணத்திற்கான கட்டணமாக தினசரி 70 ரூபாய் செலவிடுகின்றனர். ஆனால் இவை அனைத்தையும் சமாளித்து படிப்பதற்காக அம்மாவுடன் பள்ளிக்குச் செல்கிறார் நிஷ்மிதா.

மேலும் இரண்டு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றனர். அடுத்த ஆண்டு இவ்விருவரும் தேர்ச்சி பெற்று பள்ளியை விட்டு சென்றுவிட்டால் பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். இந்தப் பள்ளியின் ஆசிரியர் ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’-விற்கு தெரிவிக்கையில்,

”பள்ளிக்கு அருகிலேயே வசித்து வந்த நிஷ்மிதாவின் பெற்றோர் கடந்த அக்டோபர் மாதம் கர்கலாவின் குடிரி படவு பகுதியில் வீடு கட்டினர். நிஷ்மிதா பள்ளியை விட்டுச் சென்றுவிட்டால் பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் பள்ளியை மூடவேண்டிய சூழல் ஏற்படும் என்பதை அவர்களிடம் தெரிவித்தோம். நீண்ட தூர பயணத்தையும் ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு வர தீர்மானித்தனர்.”

பள்ளியின் ஆசிரியர் பள்ளியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கிறார். தினமும் ஆறு பேருந்துகள் ஏறி இறங்கி பயணித்தால்தான் வீட்டை வந்தடையமுடியும். கன்னட வழி கல்வி பயிற்றுவிக்கப்படும் இந்தப் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளியைச் சுற்றி ஆங்கில வழி கல்வி வழங்கும் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நிஷ்மிதாவும் அவரது அம்மாவும் எடுக்கும் முயற்சிகளால் இந்தப் பள்ளி மூடப்படாமல் மீண்டு வருகிறது.

கட்டுரை : Think Change India