வரைகலையின் வழியே வித்தியாசம்!

0

வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நம் எல்லாருக்குமே ஏதாவது வித்தியாசமாய் செய்யவேண்டும் என்ற உந்துதல் எழும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஷோபித் அரோராவுக்கும் இப்படியான உந்துதல் எழுந்தது. நம் முயற்சி மற்றவர்கள் வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த வித்தியாசத்தை உருவாக்க அவர் தேர்ந்தெடுத்த மீடியம் வரைகலை.

தன் கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு சுயதொழில் தொடங்குவதில் ஷோபித்துக்கு தயக்கம் இருந்தது. கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் இதுகுறித்த ஆய்வுகளில் மூழ்கியிருந்தார். சர்வதேச சந்தைகளை கவனிப்பது, நிகழ்கால ட்ரெண்ட்களை நோக்குவது, ஓவியர்களையும் வடிவமைப்பாளர்களையும் நேரில் சந்திப்பது, கண்காட்சிகளுக்கு செல்வது என பிசியாய் இருந்தார். ஒருபக்கம் இது லாபம் தரும் துறையாக இருந்தாலும் மறுபக்கம் இந்தியாவில் இந்தத் துறையில் ஒழுங்குப்படுத்தப்பட்ட அமைப்புகள் இல்லை. ஓராண்டு ஆய்வுக்கு பின்தான் அவருக்கு களம் இறங்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.

டிசம்பர் 2014ல் தன் "வேர்ல்ட்ஆர்ட்கம்யுனிட்டி"(Worldartcommunity) நிறுவனத்தை தொடங்கினார். உலகளவில் ஓவியங்களை வாங்க, விற்க உதவும் தளம் இது. நமது வாழிடங்களை அழகாக்கும் பிரத்யேக வடிவமைப்புக் கொண்ட, கைவேலைப்பாடுகளால் ஆன அற்புதமான படைப்புகளை வாங்க குர்கானாய் சேர்ந்த இந்த நிறுவனம் உதவி செய்கிறது.

"இந்தத் தளத்தை வாங்குபவர், விற்பவர் இருவருமே பயன்படுத்திக்கொள்ளலாம். எங்கள் தளத்தில் பதிவு செய்துகொள்வது மிகவும் எளிதுதான். எங்கள் தளம் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். பதிவு செய்தபின் எங்கள் தளத்தை நீங்கள் முழு உரிமையோடு பயன்படுத்திக்கொள்ளலாம்" என்கிறார் இந்த நிறுவனத்தை தோற்றுவித்த ஷோபித்.

ஃபைன் ஆர்ட், ஃபேஷன், அலங்காரம் என பல பிரிவுகளில் படைப்புகளை இந்த நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கிறது. "இங்கே காட்சிப்படுத்த நாங்கள் பணம் வசூலிப்பதில்லை. படைப்பு பற்றி அப்லோட் செய்வது, விலை முடிவு செய்வது போன்றவற்றை எல்லாம் வர்த்தகர்கள்தான் முடிவு செய்கிறார்கள். சமூகவலைதளங்கள் மூலமாகவும் எங்கள் பக்கத்தை அணுக முடியும். குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கொடுக்கவும் நாங்கள் அனுமதிக்கிறோம். விலைகளிலும் வித்தியாசம் காட்டுகிறோம். இங்கே நேரடி விற்பனை நடைபெறுவதால் வாங்குபவர்களுக்கும் அதிர்ஷ்டம்தான்" என்கிறார் இந்த நிறுவனத்தின் துணை இயக்குநரான அப்பச்சு.

இந்த தளம் வழியே நடக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பத்து சதவீதம் கமிஷனாய் வசூலிக்கப்படுகிறது. இந்நிநிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் விராஜ் தியாகி என்ற தொழிலதிபர் 200,000 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளார்.

சந்தையும் போட்டியும்

இந்தியா ஓர் ஆண்டுக்கு 5000 மில்லியன் கலை மற்றும் கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இந்தத் துறையிலிருக்கும் வாய்ப்புகளை தெரிந்துகொள்ள இந்த தகவலே போதும்.

Craftsvilla, IndianRoots, CBazaar, Utsav Fashion, Namaste Craft போன்ற நிறுவனங்கள் இந்த நிறுவனத்திற்கு போட்டியாக திகழ்கின்றன. இவை தவிர்த்து பல இ-காமர்ஸ் நிறுவனங்களும் இந்த துறையில் கவனம் செலுத்துகின்றன. திறமைசாலிகளை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மத்திய அரசோடு கைகோர்த்து ஆன்லைன் விற்பனையை தொடங்கியது. ஸ்நாப்டீல் தன் பங்குக்கு தபால்துறையோடு கைகோர்த்து வாரணாசியை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகளை விற்க உதவுகிறது.

இந்தத் துறையில் இன்னும் பல நிறுவனங்கள் தொடக்க நிலையிலேயே இருப்பதாக கூறுகிறார் ஷோபித். இந்த துறையில் தங்கள் நிறுவனம் உள்பட எல்லாருக்குமே வாய்ப்பு இருப்பதாக கருதுகிறார் இவர்.

இந்தத் துறையில் ஆன்லைன், ஆஃப்லைன் இரண்டிலுமே உறுதியாக கால் பதிப்பதே தங்கள் திட்டம் என்கிறார் ஷோபித். எங்கள் தளத்தை ஒரு பிராண்ட் எக்ஸ்டென்ஷனாக உருவாக்கி அதில் கலை, கைவினை பொருட்களை விற்பதே எங்கள் நோக்கம் என நம்பிக்கையாக சொல்கிறார் இவர்.

இணையதள முகவரி: WorldArtCommunity

ஆக்கம் : தவ்ஷீப் ஆலம் | தமிழில் : சமரன் சேரமான்