இந்தியாவில் பிஸ்லெரி என்கிற பெயர் பிரபலமானதன் பின்னணியிலிருந்த குஷ்ரூவின் மற்றுமொரு ஸ்டார்ட் அப்

பாட்டில் தண்ணீர் வாங்கவேண்டும் என்றதும் நம்மையும் அறியாமல் நாம் கடைகளில் கேட்கும் பெயர் பிஸ்லெரி. இந்த ப்ராண்டின் செயல்பாடுகளில் ஈடுபட்ட குஷ்ரூ சண்டுக் தற்போது தனது 81 வயதில் தொழில்முனைவில் ஈடுபட்டு வருகிறார்...

1

மும்பையின் செழிப்பான மலபார் ஹில்ஸ் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் குஷ்ரூ சண்டுக்கின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரபலமான வக்கீல். மும்பை உயர் நீதி மன்றம், முல்லா அண்ட் முல்லா போன்ற இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அவரது அம்மா ஐந்தாவது பரோனெட் ஜன்செட்ஜீ ஜீஜீபாயின் மகள்.

அவர்கள் பார்சி இராஜ குடும்பத்தினர் மட்டுமல்ல வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவித்து ரசிப்பவர்கள். இவ்வாறு பாடல், விளையாட்டு என இவரது குஷ்ரூவின் குழந்தைப்பருவம் சிறப்பாக இருந்தது. குஷ்ரூ தனது டென்னிஸ் ராக்கெட்டை கையில் பிடித்து முன்னும் பின்னும் அசைப்பது சாய்கோவஸ்கி, ஸ்ட்ராஸ், பீத்தோவன் போன்ற இசையமைப்பாளர்களின் வாசிப்பைப் போலவே இருக்கும். அவரது அம்மாவும் தாத்தாவும் பியானோ வாசித்துள்ளனர். அவரது அப்பாவிற்கு பல்வேறு வெளிநாட்டு க்ளையண்டுகள் இருப்பதால் அவர்களை சந்திக்க செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு இசைத்தட்டுகளை வாங்கி வருவார். இதில் அதிக ஆர்வமாக இருந்த குஷ்ரூவிடம் தருவார். இதனால் இசைத்தட்டுகள் சேகரிப்பது அவரது வாழ்நாள் பொழுதுபோக்காகவே மாறியது.

டென்னிஸ் விளையாட்டில் அவருக்கிருந்த விருப்பம் மாநில அளவிலுல் தேசிய அளவிலும் விளையாடும் நிலைக்கு இட்டுச்சென்றது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் புகழ்பெற்ற பியானோ கலைஞரான ஓல்கா க்ரயினிடம் பியானோ பயிற்சி பெற்றார். தொழில்முனைவில் அவருக்கு இருந்த ஆர்வம் அவரது வாழ்வில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது.

தண்ணீர் பாட்டில் – புதிய முயற்சி

அவரது முன்னோர்கள் ஈடுபட்ட அதே துறையில் குஷ்ரூவும் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் சட்டம் பயின்று அதே துறையை பின்பற்ற இருந்தார். அப்போது அவர்களது குடும்ப நண்பர்களான இத்தாலியைச் சேர்ந்த தி ரோசிஸ், பிஸ்லெரி என்கிற நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்தனர். இவர்கள் இந்திய சந்தையில் செயல்பட அது சரியான தருணம் என்று நினைத்தனர். இரண்டாம் உலகப் போரின்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை கையாளும் பொறுப்பு வகித்தவர்களில் குஷ்ரூவின் அப்பாவும் ஒருவர். அதனால் ரோசிஸ் அவரையும் இணைந்துகொள்ளுமாறு சம்மதிக்க வைத்தனர்.

முதலில் பிஸ்லெரி மலேரியா எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தது. டிஎன் ரோட்டில் சிறிய அளவில் இந்நிறுவனம் அமைக்கப்பட்டிருந்தது. அது வேறொருவரின் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பும் சொத்து அவர்களிடமே இருந்தது. அந்த பணத்தைக் கொண்டு இந்தியாவில் புரட்சிகராமாக செயல்பட நினைத்தனர்.

டாக்டர் ரோஸிக்கு வெங்கடசாமி நாயுடு, தேவராஜுலு போன்ற தென்னிந்திய வர்த்தகத்தில் மிகப்பிரபலமானவர்களுடன் தொடர்பு இருந்ததால் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் இருந்தது. குஷ்ரூ மீது நம்பிக்கை வைத்து பாட்டில் தண்ணீர் தயாரிக்கும் திட்டத்தில் அவரை இணைத்துக்கொண்டார். அப்போது 1965-ம் ஆண்டு. 

"அவர் ஒரு செல்வாக்குடைய இத்தாலியன். அந்த சமயத்தில் மும்பையில் தண்ணீரின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் மக்களுக்கு வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட்டது. அந்நாளில் பாட்டில் தண்ணீர் தடை செய்யப்பட்டிருந்ததால் அவை விற்பனையில் இல்லை. மேலும் அது ஆடம்பர விஷயமாக கருதப்பட்டது. அந்த தவறான கருத்தை தகர்த்தெறிய வேண்டியிருந்தது,” என்று நினைவுகூர்ந்தார்.

அவர்களுக்கு இத்தாலியில் ’ஃபெர்ரோ சைனா’ என்கிற மது தயாரிக்கும் நிறுவனமும் இருந்தது. அத்துடன் பாட்டில்களில் நிரப்பப்படும் பணியை மேற்கொள்ளும் தொழிற்சாலையும் இருந்தது. இங்கு இயற்கை மினரல் வாட்டர் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் தானேவில் வாகில் எஸ்டேட்டில் (Waghle Estate) இவர்கள் ஒரு தொழிற்சாலையை நிறுவினர். தண்ணீர் முதலில் தண்ணீரிலுள்ள மினரல்கள் நீக்கப்பட்டு கிட்டத்தட்ட காய்ச்சி வடிகட்டப்பட்டது. ஆனால் இதில் மினரல்கள் இல்லாததால் இது பருகுவதற்கு உகந்ததல்ல. எனவே சிறிய அளவு பொட்டாஷியம் மற்றும் சோடியத்தை சேர்த்தனர்.

”மக்கள் எங்களை முட்டாள் என்றே நினைத்தனர். ஆனால் நாங்கள் வோல்டாஸ் நிறுவனத்தை எங்களது விநியோகஸ்தராக இணைத்துக் கொண்டு தயாரிப்பைத் துவங்கினோம்,” என்று குஷ்ரூ நினைவுகூர்ந்தார்.

”முதலில் தண்ணீரை யார் ஒரு ரூபாய் கொடுத்து வாங்குவார்கள் என்றனர். அந்த அளவிற்கு இந்த கான்செப்ட் புதிதாக இருந்தது. தண்ணீருக்கு செலவு செய்ய யாரும் விரும்பவில்லை. ஆனால் மெல்ல மெல்ல ஹோட்டல்களில் வாங்கத் துவங்கினர்.” என்றார். சில நேரங்களில் குஷ்ரூ தாமே களத்தில் இறங்கி பணி புரியவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரே சென்று இரானி ஹோட்டல்களில் டெலிவர் செய்துள்ளார். இறுதியில் தயாரிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. குஷ்ரூவும் அவரது பார்ட்னர்களும் இணைந்து மேற்கொண்ட இந்த நீண்ட பயணத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட பாட்டில் தண்ணீரை அனைவரும் எளிதில் வாங்கும் ஒரு பொருளாக மாற்றினர்.

டாடா குழுவில் இணைந்தார்

மூன்று வருடங்கள் சிறப்பாகவே கடந்தது. ஆனால் மிலனில் ரோசி குடும்பத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இது குறித்து அதிகம் விவரிக்க விரும்பாததால் அவர் மூடநம்பிக்கை காரணமாக பிஸ்லெரியின் பங்குகளை பார்லேவிற்கு விற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாக தெரிவித்தார். சௌஹன் குடும்பம் பார்லே நிறுவனத்தின் உரிமையாளர்கள். இவர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வந்தனர். குஷ்ரூ டென்னிஸ் விளையாடிய நாட்களில் அவருக்கு இவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. 

”நாங்கள் மனமுடைந்து போனோம். ஆனால் வேறு வழியின்றி பார்லே நிறுவனத்திற்கு விற்றுவிட்டோம். சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை,” என்றார்.

இன்னும் இருபதுகளில் இருந்த தகுதி மற்றும் அனுபவமிக்க குஷ்ரூவிற்கு அது வெறும் துவக்கம் மட்டுமே. அந்த சமயத்தில் அவரது அப்பா பல்வேறு டாடா நிறுவனங்களின் இயக்குனராக இருந்ததால் சந்தையில் இணைந்துகொள்ளுமாறு டாடாவிலிருந்து அழைப்பு வந்தது. “அப்போது இருந்த டாடா நிறுவனங்களின் சிறிய நிறுவனத்தில் சேர விரும்பினேன். எனவே ’லாக்மே’ நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்து வந்த சிமன் டாட்டாவுடன் இணைந்துகொண்டேன்.” என்று நினைவுகூர்ந்தார்.

1968-ம் ஆண்டு துவங்கி 30 வருடங்கள் டாடா க்ரூப்பின் பல்வேறு நிலைகளில் பணிபுர்ந்தார். டாடா ஆயில் மில்ஸ் கம்பெனி, ஃபினான்ஸ் லிமிடெட், டாடா மெக்கிரா ஹில், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், டாடா பில்டிங் ஆகிய நிறுவனங்களில் நிறுவனராக பணியாற்றினார். மேலும் வாடியா க்ரூப்பின் நேஷனல் பெராக்சைட், கவுன்சில் ஃபார் ஃபேர் பிசினஸ் ப்ராக்டிசஸ் மற்றும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா (CCI) கமிட்டி போன்றவற்றின் குழுவில் 25 ஆண்டுகள் இருந்தார்.

டாடாவுடன் இணைந்து பணிபுரிந்ததால் இதுவரை கிடைக்காத பல்வேறு அனுபவங்கள் அவருக்கு கிடைத்தது. டாடாவிற்கான அவரது பங்களிப்பில் ரஷ்ய சந்தையில் வெற்றிகரமாக நுழைந்து செயல்படத் துவங்கியதை பெருமையாக கருதுகிறார். ”அந்நாளில் ரஷ்யாவிடம் ரூபாய் வர்த்தகம் அரங்கேறியது. ரஷ்ய பண்டங்களை வாங்குவதற்கு நாம் பண்டங்களை மாற்றவேண்டும். ஏனெனில் அவர்கள் செலுத்துவதற்கு டாலர்கள் இல்லை. எனவே நாங்கள் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ் பூன்வல்லா தயாரித்த பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை குறிப்பாக வயதை குறைக்க உதவும் மருந்துப் பொருட்களை மாற்றிக்கொண்டோம். தோஷிபாவுடன் இணைந்து மருத்துவ உபகரணங்கள் பிரிவிலும் செயல்பட்டோம். இறுதியில் அவர்களிடமே அதை விற்றுவிட்டோம்.” என்றார் குஷ்ரூ.

மருந்துபிரிவை துவங்கியதால் குஷ்ரூ இத்தாலியிலிருந்த அசோசியேட்டுடன் பல்வேறு இணைப்புகள் ஏற்படுத்த முடிந்தது. “என்னுடைய மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட விஸ்கோடைன் இருமல் மருந்து மற்றும் எக்லோஸ்பான் ஸ்கின் க்ரீம் போன்ற தயாரிப்புகள் இன்றும் சந்தையில் உள்ளது.” என்றார்.

ஆர்வத்தில் தொடர்ந்து ஈடுபட்டார்

முப்பது ஆண்டுகளுக்கு மேலான கடுமையான உழைத்த இவருக்கு இசையின் மீதான ஆர்வமும் தொடர்ந்துகொண்டே இருந்தது. பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் இசைத்தட்டுடன் வருவார்.

”எனக்கு இசையில் விருப்பம் அதிகம். என்னுடைய இசைத்தட்டு சேகரிப்புகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. உலகெங்குமுள்ள இசைத்தட்டு பிரியர்களுடன் நட்பு கொண்டேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை இசைத்தட்டு சேகரிப்பு குறித்து வெளிநாடுகளில் பேசினேன். உலகில் எங்கு சிறந்த ஓபரா அரங்கேறினாலும் அங்கு நான் இசைத்தட்டுகளை ஏற்றுமதி செய்திருப்பேன் என்று மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள். ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து என பல்வேறு பகுதிகளிலிருந்தும் சேகரித்தேன்.” என்றார்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் அவரது வாழ்க்கைப் பாதையை கடந்த பிறகு 2000-ம் ஆண்டில் 65 வயது நிரம்பிய குஷ்ரூ இதற்கு மேலும் தொடர வேண்டாம் என்கிற முடிவிற்கு வந்தார். ஆனால் மும்பை வீட்டின் நான்காவது தளத்தில் வசிக்கும் NCPA நிறுவனரான அவரது நணபர் டாக்டர் ஜம்ஷத் பாபா அவருக்காக வேறு ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருந்தார்.

”என்னுடைய குடும்பம் அந்தப் பகுதியை விட்டு எப்போதோ வெளியேறியிருந்த போதும் நான் அடிக்கடி டாக்டர் பாபாவை சென்று சந்திப்பேன். NCPA குறித்து பேசுவேன். இறுதியில் அவர் என்னை கவுன்சிலில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.” என்றார்.

எழுபது வயதில் ஸ்டார்ட் அப்

NCPA-ல் துணைத் தலைவராக இருந்தபோது லண்டனில் நடைபெற்ற Kazakh இசைக்குழுவை காண சென்றிருந்தார். அவர்களது இசையில் மயங்கிய குஷ்ரூ கச்சேரிக்குப் பிறகு அவர்களை சந்தித்தார். “மஹாராஷ்டிராவிற்கு அவர்களை அழைத்து கச்சேரி நடத்தலாம் என்கிற எண்ணம் கூட எனக்கு எழுந்தது. இரண்டு முறை அவர்களது இசைக்குழுவைக் காண சென்றதும் இந்தியாவில் ஒரு தொழில்முறை இசைக்குழுவைத் துவங்கும் எண்ணம் கூட ஏற்பட்டது.” என்றார்.

குஷ்ரூவிற்கு மிகவும் விருப்பமான இசை ஆர்வத்தினால் ஏற்படுத்தப்பட்ட நட்பு வட்டத்தில் இருந்த மற்றொருவருக்கும் இதே எண்ணம் எழுந்தது. இந்திய இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு முழுநேர தொழில்முறை இசைக்குழுவை உருவாக்கும் எண்ணம் குஷ்ரூவிற்கு தோன்றியது. Kazakh நண்பர்களும் அவரை ஆதரித்தனர். இவ்வாறு உருவானதுதான் சிம்பனி ஆர்கெஸ்டிரா ஆஃப் இந்தியா (SOI). இன்று இதில் 16-18 முழுநேர இந்திய உறுப்பினர்கள் உள்ளனர்.

”இது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. தண்ணீர் தயாரிப்பைவிட கடினமாக இருந்தது.” என்றார். மேலும், “எங்களிடம் குறைவான நிதியே இருந்தது. எங்களுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் டாக்டர் பாபா உடனடியாக அதை வழங்கினார். அவரது தொடர்பு கிடைத்தது ஒரு நல்லதிர்ஷ்டம் என்றே கூறலாம்.”

”நாங்கள் வெற்றிகரமாக செயல்பட்டோம். எங்களது தரத்தைக் கண்டு அனைத்து மக்களும் வியந்தனர். சிறந்த இசைக் கலைஞர்களை தேர்ந்தெடுக்கவேண்டும். இசைக்குழு முழுவதும் இந்தியக் கலைஞர்களாக இருக்கவேண்டும். இது ஒரு மிகப்பெரிய தேடலாக இருந்தது. ஆனால் நாங்கள் தரத்தில் எந்தவித சமசரமும் செய்துகொள்ளவில்லை.” என்றார்.

அதிகப்படியான இந்திய இசைக்கலைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திடமாக இருந்தார் குஷ்ரூ. இதற்காக திறமையான கலைஞர்களை தேடிக் கண்டறிவதுடன் NCPA-வில் பயிற்சி வகுப்புகளையும் ஏற்பாடு செய்தார். ”நாங்கள் ஓய்வு பெறும்போது 40 கலைஞர்கள் எங்களுடன் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறோம். சிறப்பாக செயல்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அழைப்பு எங்களுக்கு வந்துள்ளது. ஆறு கச்சேரிகள். சிறந்த இசைக்குழுவுடன் இணைந்து செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய சீசனை துவங்குகிறோம்.” என்றார்.

பிஸ்லெரி நிறுவனத்தின் நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியபோது ஸ்டார்ட் அப் சிறப்பாக செயல்படவில்லை. அவரது இரண்டாவது தொழில்முனைவு முயற்சி சிறப்பான ஸ்டார்ட் அப் சூழலில் துவங்கியதால் அதிக ஆர்வமுடன் உள்ளார் குஷ்ரூ. ”நீ வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் பெரிதாக கனவு காணுங்கள். வழக்கமான வேலை மட்டுமே செய்யாதீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும். நீங்கள் சரியான நோக்கத்துடன் செயல்படும் சரியான நபராக இருந்தால் அனைத்தும் நிச்சயம் சரியாகவே நடக்கும். உங்களது உற்சாகமில்லாத வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, ‘நான் என்ன சாதித்தேன்?’ என்று நினைத்துப் பார்த்தால், ‘தினமும் அலுவலகத்திற்கு சென்றேன்.” என்பது உங்களது பதிலாக இருக்க விரும்பமாட்டீர்கள் என்று குறிப்பிட்டார். இந்த வரிகளுடன் தனது இசைக்குழுவுடன் இனிமையான மாலைப்பொழுதை கழிக்க விடைபெற்றுக்கொண்டார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா