விதுஷினி பிரசாத்துக்கும் மதுபானி கலைக்கும் உள்ள மாயாஜால கெமிஸ்ட்ரி!

0

ஒரு வேதியியல் ஆசிரியர் மதுபானி கலைஞராக மாறிய கலைநயமிக்க கதை இது!

கொல்கத்தாவில் பிறந்த விதுஷினி பிரசாத், அங்கு பத்தாம் வகுப்பு வரை படித்தார். பாட்னாவை பூர்வீகமாகக் கொண்ட விதுஷினியின் தந்தை ஒரு திரைப்பட வினியோகிஸ்தர், அவர் பெரும்பாலான நேரத்தை பாட்னாவிலேயே கழிக்க நேரிட்டதால் மொத்த குடும்பமும் பாட்னாவிற்கே இடம்பெயர்ந்துவிட்டனர். பாட்னா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளநிலை மற்றும் முதுநிலை பயின்ற விதுஷினி ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார்.

விதுஷினி பாட்னாவில் இருந்த போது உயர் வகுப்புகளுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பயிற்றுவித்தார். பின்னர் அவர் திருமணமாகி டெல்லிக்கு சென்றுவிட்டார். தனக்கு ஒரு ஆண் குழுந்தை பிறக்கும் வரை டெல்லியிலும் அவர் இரண்டு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். மகனை பார்த்துக்கொள்வதற்காக தன்னுடைய பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது அவர் தொழில் முனைவராவதற்கான வாய்ப்புகள் பற்றி யோசிக்கத் தொடங்கினார் - அதன் விளைவாக அவர் தனது கனவை எட்டிப் பிடிக்க நினைத்தார்.

நான் வீட்டிலிருந்தே ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நான் வரைகலையை தொடங்கினேன். தொடக்கத்தில் வீட்டை அலங்கரிப்பது மற்றும் நண்பர்கள் உறவினர்களுக்கு வண்ணப்படங்களை வரைந்து கொடுப்பது என செய்து வந்தேன். அனைவருமே என்னுடைய கலைத்திறனை பாராட்டியதோடு இதை தொழில்ரீதியாக எடுத்துச் செல்ல ஊக்கமளித்தனர், என்கிறார் இந்தக் கலைஞர்.

மதுபானி கலை எப்போதும் விதுஷினியை ஈர்த்தது. “சற்று பருத்த உருவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் கூர்மையான மூக்கு, உள் இழையோடு பின்னிப் பிணைந்திருக்கும் டிசைன்களும் பார்ப்பதற்கு மட்டுமல்ல அவற்றை செய்யவும் தூண்டுபவை, நான் என்னுடைய கல்லூரி காலம் முதலே இவற்றை வரைந்து வருகிறேன்” என்கிறார் அவர்.

இதற்கிடையல் அவர் கரியர் லாஞ்சரில்(Career Launcher) வாழ்க்கை முன்னேற்றத்திற்கான சில பணிகளையும் செய்து முடித்திருந்தார். அதே சமயம் மதுபானி கலையை தன் வீட்டிற்கு சிறு சிறு அலங்காரப் பொருட்களை செய்வதன் மூலம் உயிர்ப்போடும் வைத்திருந்தார். அவர் பணியை ராஜினாமா செய்தது முதல் வரைகலையை முழு நேரமாக கையில் எடுத்தார்.

விதுஷினி மதுபானி கலை குறித்து முறையாக கற்றக்கொள்ளாவிட்டாலும், அதை தெரிந்து கொள்வது கடினமல்ல என்கிறார். இது தனது கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று என்பதால் அதை எளிதில் தொடங்க முடியும் என்று சொல்கிறார் அவர். கலையை கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்காக விதுஷினி பயிற்சி பட்டறைகளையும் நடத்தியுள்ளார். அவர் முகநூலில் ஒரு பக்கத்தைத் தொடங்கி அதன் மூலம் இந்தக் கலையை பயிற்றுவிக்கிறார்.

பதிவுபெற்ற நோவிகா(NOVICA) கலைஞராக அங்கீகாரம் கிடைத்தது

தன் மகன் பிறந்த பின்னர் 2006ம் ஆண்டு முதல் அவர் முழுநேர வரைகலைஞராக கவனம் செலுத்தத் தொடங்கினார். விதுஷினி ஒரு பெரிய இடைவெளி எடுத்திருந்தார், அவருக்கு நோவிகாவில் பெயரை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நோவிகா கலைஞர்களை சர்வதேச சந்தையில் இணைக்கும் நேஷனல் ஜியாகிராபியின் இணையவழி தளம்.

2007ல், விதுஷினி பெங்களூருக்கு தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார், அங்கே கலைக்கூடங்களைத் தொடர்பு கொண்டு கண்காட்சி நடத்துவதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தார், ஆனால் அவருக்கு மிதமான வரவேற்பே கிடைத்து. அதனால் அவர் நோவிகாவின் அங்கீகாரத்திற்காக காத்திருந்தார், அவருக்கு கலைஞராக அங்கீகாரம் கிடைத்த பின்னர், எண்ணிலடங்கா ஆர்டர்கள் குவியத் தொடங்கின, தேவைக்கேற்ப அவர் வண்ணப்படங்களைத் தயாரிக்க வேண்டும். நோவிகா அவரின் தயாரிப்புகளைப் பெற்றுக் கொண்டு, அதை அவர்களின் ஈ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்காக வைக்கும்.

விதுஷினியின் பெரும்பாலான வரைகலைகள் இணையதளத்தில் விற்றுத் தீர்ந்தன. எ ஹண்ட்ரட் ஹேண்ட்ஸ் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனமும், ஈகா லைஃப்ஸ்டைல் ரீட்டெய்லும் அவருடைய தயாரிப்புகளை பிரபலப்படுத்த உதவின.

இது வரை விதுஷினி தன்னுடைய மதுபானி வரைபடங்களை இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கலைக் கூடங்களில் காட்சிக்காக வைத்துள்ளார். பெங்களூரில் உள்ள ரினைசன்ஸ் கலைக் கூடம் மற்றும் கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் உள்ள டேவிட் ஹால் கலைக்கூடத்தில் அவரது கண்காட்சி நடந்துள்ளது.

இதைத் தவிர்த்து, அவர் தன்னுடைய பணியை விஸ்டாவிலும் காட்சிப்படுத்தியுள்ளார். விஸ்டா பெங்களூரு ஐஐஎம்-ன் முன்னணி வர்த்தகத் திருவிழா. இவர் மத்திய ஜவுளிகள் துறையின், மத்திய காட்டேஜ் எம்போரியத்தில் உறுப்பினராகவும், இந்திய அரசின் சிறந்த கலைஞர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான இந்த தொழில்முனைவரின் பயணம்

என்னைப் பொருத்த வரை இதுவரை நான் ஒரு அதிசயத்தக்க பயணத்தை கடந்து வந்துள்ளேன் என்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நான் பெங்களூரில் இருந்து கொண்டு என்னுடைய வரைகலைகளுக்கு இருக்கும் வரவேற்பின் அடிப்படையில் அமைதியான முறையில் என்னுடைய எண்ணத்திற்கு வண்ணம் தருகிறேன். நாடு முழுவதிலும் இருந்து ஆர்டர்கள் வருகின்றன, இது கலைக்கு எல்லை இல்லை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்கிறார் விதுஷினி. வியாபாரிகள் என்னுடைய படைப்புகளின் விலையை குறைத்து கேட்டு என்னிடம் பேரம் பேசுவார்கள்.

அவர்கள் என்னுடைய படைப்புகளுக்கு நான் எடுக்கும் முயற்சியை பற்றி நினைத்துப் பார்ப்பதே இல்லை, ஒவ்வொரு படத்தையும் வரையும் போது நான் எவ்வளவு அக்கறையோடு அதை வரைகிறேன் என்பதையும் எண்ணுவதே இல்லை, விலையை குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள், இந்த செயல் என்னை சோர்வடையச் செய்தது, என்கிறார் விதுஷினி.

விதுஷினி கைகளால் தயாரிக்கப்பட்ட பேப்பர் மற்றம் கேன்வாஸை உள்ளூர் சந்தையில் வாங்கிக் கொண்டாலும், படம் வரைவதற்கான முள்ளை(nib) மதுபானியின் பிறப்பிடமான பாட்னாவில் இருந்து வாங்குகிறார்.

ஒரு நிறைவான கலைஞர்

விதுஷினி மகிழ்ச்சியாக இருக்கிறார், அவருக்கு எப்போதும் என்ன விருப்பமாக இருந்ததோ அதையே அவர் செய்ய முடிந்திருக்கிறது.

இதில் நிறைய வேலையும், குறைவான மகிழ்ச்சியும் அளிப்பதாக இப்போது இருந்தாலும், அதிக வேலைப்பளுவை கொடுத்தாலும் என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றை என்னால் செய்ய முடியும் என்று எனக்கு உணர்த்தியுள்ளது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறார் அவர்.

அவர் இந்தியாவில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை ஒருங்கிணைத்து மதுபானி வரைகலை தொடர்பான ஒரு கையடக்கப் புத்தகத்தையும் உருவாக்கி வருகிறார். இது கலை வடிவம் தொடர்பான விஷயங்களை எப்படி உருவாக்குவது, விற்பனை செய்வது, நாடு முழுவதும் எவ்வாறு ஏற்றுமதி செய்வது மற்றும் வெளிநாடுகளில் எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்து புரிந்து கொள்வதற்கு உதவும் ஒரு தயார் நிலை குறிப்பேடு. இதற்காக அவர் பத்து மதுபானி கலைஞர்களை நேர்காணலும் கண்டுள்ளார். விதுஷினி தன்னுடைய குறிக்கோளை நோக்கி தன் பார்வையை தெளிவாக செலுத்துகிறார் – அவர் தன்னை ஒரு கலைஞராக வெளிக்கொணர விரும்புகிறார், அதே போன்று மதுபானி என்ற வார்த்தையை பரப்புவதும் அவருடைய நோக்கம்.

கட்டுரை: சஸ்வதி முகர்ஜி / தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்