பயணத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு சிறகுகளை அளிக்கும் ட்ரக் ஓட்டுநரின் மகள்!

Appooppanthaadi என்கிற நிறுவனத்தை கேரளாவில் நடத்தி வரும் சஜ்னா அலி இந்தியா முழுவதும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பயணங்களை ஏற்பாடு செய்கிறார். விரைவில் சர்வதேச பயணங்களை திட்டமிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

0

கேரளப் பகுதியில் அதிகமாக வளரும் ஒரு வகையான தாவர வகைதான் அப்பூப்பந்தாடி. அது தனது விதைகளை பரப்புவதற்குக் காற்றை சார்ந்திருக்கும். கூட்டமான இடத்தில் கவலையின்றி சுதந்திரமாக திரியும் இந்த வகையானது தனது சிறகுகளை விரித்து எங்கு வேண்டுமானாலும் செல்வதைப் பார்க்கலாம்.

’அப்பூப்பந்தாடி’ பெண்களை மட்டுமே கொண்ட கேரளாவைச் சேர்ந்த ஒரு பயணக்குழு. மென்பொருள் பொறியாளரான சஜ்னா அலிக்கு சிறு வயது முதலே பயணத்தின் மீது அதீத ஆர்வமே இருந்து வந்தது.

”நான் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். என்னுடைய அப்பா ட்ரக் ஓட்டுநர். அவர் ஒவ்வொரு பயணத்திற்குச் சென்று திரும்பும்போதும் வீட்டிற்கு புகைப்படங்கள் எடுத்து வருவார். நான் எப்போதும் அப்பாவுடன் செல்ல விரும்புவேன். ஆனால் பெண்களுக்கு கழிவறை வசதிகள் இருக்காது என்பதால் நீண்ட பயணங்களுக்கு அழைத்துச் செல்லமாட்டார். எனினும் சிறு தொலைவு பயணத்திற்கு அழைத்து செல்வார். நான் அந்த பயணங்களை அதிகம் ரசிப்பேன்,” என்றார்.

நான்காண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்திலுள்ள டெக்னோபார்க்கில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். அப்போது இந்தியா முழுவதும் தனியாக பயணிக்கத் துவங்கினார். அவரது நண்பர்கள் குழுவுடன் முதல் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் பின் வாங்கி விட்டதால் பயண ஏற்பாடு ரத்தானது.

”தொடர்ந்து தனியாகவே பயணித்தேன். பயணம் முடிந்து திரும்பியதும் முகநூலில் பயணம் குறித்த தகவல்களையும் புகைப்படங்களையும் பதிவிடுவேன். அதைத் தொடர்ந்து பல தோழிகள் அடுத்தடுத்த பயணங்களில் தங்களையும் உடன் அழைத்து செல்லுமாறு கேட்கத் துவங்கினர்,” 

என்றார். இதனால் ஒரு பயணதிட்டம் உருவானது. துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி வெற்றியடையவில்லை.

சஜ்னா தனது முயற்சியிலிருந்து பின்வாங்காமல் கொல்லம் மாவட்டத்திலுள்ள ரோஸ்மாலா பகுதிக்கு ஒரே நாளில் சென்று திரும்பும் பயணத்தை திட்டமிட்டார். இதற்கு இருபது பெண்கள் ஆர்வம் காட்டியபோதும் எட்டு பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ரோஸ்மாலா பகுதிக்கு ஜீப் பயணமும் குரிஷுமாலா பகுதிக்கு மலையேற்றமும் மேற்கொண்டனர். அதுவே சஜ்னாவின் முயற்சிக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தது.

பயணம் மேற்கொள்வதில் பல பெண்கள் ஆர்வம் காட்டும்போதும் பெண்கள் மட்டுமே கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த பயணக் குழு குறிப்பிடத்தக்க விதத்தில் துவங்கவில்லை.

"இரண்டாண்டுகளுக்கு முன்பு அப்பூப்பந்தாடி துவங்கியபோது நான் அதிக போராட்டங்களை சந்தித்தேன். பயணத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து பல பெண்கள் சந்தேகித்தனர். அவர்கள் பாதுகாப்பாக உணரவேண்டும் என்பதற்காக நான் பெண்களை அவர்களது வீட்டிற்கே சென்று அழைத்துச் செல்வேன். விரைவில் அனைவரும் பொதுவான ஒரு இடத்தில் சந்திக்கத் துவங்கினோம்,” என்று நினைவுகூர்ந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் வாயிலாக 600 பெண்களுடன் 65 பயணங்களை ஏற்பாடு செய்துள்ளார் சஜ்னா. ஹம்பி, தனுஷ்கோடி-ராமேஸ்வரம், மலர்களின் பள்ளத்தாக்கு (உத்தர்காண்ட்), குத்ரேமுக், தவாங், மீசைபுலிமலை, கொழுக்குமலை, வாரனாசி, சிக்மங்களூர், அகும்பே, கோகர்ணம், மகாபலிபுரம், கந்திகோட்டா, எல்லபெட்டி, ராமக்கல்மேடு, வயநாடு போன்ற பகுதிகள் இந்த பட்டியலில் அடங்கும். மன்ரோ தீவு, மஹாகனி தோட்டம், சிதறால், செயிண்ட் மேரி தீவு, தோனி, வட்டகோட்டை, வாழ்வந்தோல், உதயகிரி கோட்டை, நிலாம்பூர் போன்றவை அவரது தினசரி பயணங்களில் இடம்பெறும் இடங்களாகும்.

அவர் சில மாதங்களுக்கு முன்பு தனது பணியை துறந்துவிட்டார். சஜ்னா எதிர்காலத்தில் வட இந்தியாவிற்கு அதிக பயண திட்டங்களை ஏற்பாடு செய்ய விரும்புகிறார். இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச பயண ஏற்பாடுகள் குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.

இவர்கள் ஏற்பாடு செய்யும் அனைத்து பயணங்களுக்கும் குறைவான கட்டணங்களே வசூலிக்கப்படும் என விவரித்தார் சஜ்னா.

”எந்தவித ஆடம்பரமும் வழங்கப்படுவதில்லை. பயணங்களை விரும்புபவர்களுக்கு சௌகரியமான பயணங்கள் ஏற்பாடு செய்கிறோம். அடிக்கடி பயணிக்க விரும்புபவர்கள் பலரும் சிறப்பாக ஒன்றிணைகின்றனர். அனைத்து விஷயங்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்ள இந்த பயண ஏற்பாடு வழிவகுக்கிறது. இதனாலேயே இது ஒரு குடும்ப அமைப்பாகவே உள்ளது. முற்றிலும் அந்நியர்களாக பயணத்திற்கு வருபவர்களும் அறிமுகமாகி நல்ல நண்பர்களாக நட்பைத் தொடர்கின்றனர்.”

மறக்கமுடியாத அனுபவங்களையும் நினைவுகளையும் உருவாக்குவதே அப்பூப்பந்தாடியின் நோக்கமாகும். வாரனாசியில் கங்காவில் படகில் சென்றபோது சூரியோதய நேரத்தில் கடற்பறவைகள் சுற்றித் திரிந்ததையும், பனிக்காலம் துவங்கியபோது சென்ற தவாங் பயணம், கந்திகோட்டா பகுதியின் அழகான சூரியோதயம் ஆகியவை குறித்தும் ஆர்வமாக விவரித்தார். ஒவ்வொரு இடத்திற்கு பயணிக்கும் போது ஒவ்வொரு பயணியின் முகத்திலும் காணப்பட்ட ஆச்சரியம் குறித்தும் விவரிக்கிறார் சஜ்னா. 

தற்போது அப்பூப்பந்தாடியை மட்டுமே கையாள்கிறார் சஜ்னா. ஆனால் அவர் இல்லாத நேரத்தில் பயணத் திட்டங்களை கையாள்வதற்கு ’பட்டீஸ்’ (Buddies) என்கிற குழுவையும் உருவாக்கி வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த லிசா, கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராதிகா மற்றும் விஜி, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அஷ்வதி, கொச்சியைச் சேர்ந்த ப்ரவீனா, கோழிக்கோட் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா ஆகியோரும் பயணங்களை கையாள்வதில் பயிற்சி பெற்றுள்ளனர்.

குழுவில் இணைவது எளிது. 

“என்னுடைய முகநூல் பக்கத்தில் பயண விவரங்கள், பதிவு செய்வதற்கான லிங்க் ஆகியவை இடம்பெறும். நீங்கள் பதிவு செய்ததும் உங்களுக்கு கட்டண விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு நீங்கள் பயணத்தில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டு அந்த பயணத்திற்கான வாட்ஸ்அப் குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள்,” 

என்றார். பயணத்தைப் பொருத்தவரை வயது ஒரு தடை அல்ல. பயணம் ஒருவருக்கு சிறகுகள் அளிக்கும் என்பதை நிரூபிக்கின்றனர் அப்பூப்பந்தாடியில் இணையும் பெண்கள்.

”பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு பின்னணியைக் கொண்ட பெண்கள் வருவார்கள். ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் ஊக்கமும் பரிமாறிக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் சில பெண்கள் ‘எனக்கு 35 வயதாகிவிட்டது. அதனால் மலையேற்றம் இல்லாத பயணங்களை திட்டமிடுங்கள்’ என்று கூறியுள்ளனர். ஆனால் சமீபத்தில் 50 வயதானவர்களும் மீசைபுலி மலை மற்றும் குத்ரேமுக் பகுதிகளுக்கு 20 கிலோமீட்டர் வரை மலையேற்றம் செய்துள்ளனர். கொழுக்குமலை முகாமில் ஏழு மூத்த குடிமக்கள் மலையேறினர். புற்றுநோய் தாக்கி உயிர் பிழைத்த பிந்து மேஹர் எங்களது முதல் பயணத்திலிருந்து உடன் இருக்கிறார்,” என்றார் சஜ்னா.

வருவாய் குறித்து இந்த தொழில்முனைவோரிடம் கேட்கையில், “ஒவ்வொரு பயணத்திலும் எனக்கு சிறு தொகை கிடைக்கும். அது என்னுடைய வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது,” என்றார்.

இது பெண்கள் மற்றும் அவர்களது கனவுகள் சார்ந்ததாகும் என்கிறார்.

 “கனவிற்கு வயது ஒரு தடையல்ல. நான் வாழ்க்கையை மற்றவர்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறேன் என்பதுதான் ஒரே வித்தியாசம்.”

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன்