இந்தியாவின் முதல் முழுநேர பாதுகாப்புத் துறை பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

0

நிர்மலா சீதாராமன், இந்தியாவின் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனமாகி பெண்களுக்கே பெருமை சேர்த்துள்ளார். 1975, மற்றும் 1980-82-ல் இந்திரா காந்தி பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்ததற்கு பிறகு நிர்மலா அத்துறைக்கு அமைச்சராகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பெண் ஒருவர் பாதுக்காப்புத்துறை அமைச்சராகியுள்ளது நல்ல செய்தி. 

மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், உலகின் மூன்றாவது பெரிய பாதுகாப்புப் படையின் அமைச்சராகி நிர்வகிக்க உள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். நம் நாட்டு பாதுகாப்புத்துறையில் 1.4 மில்லியன் ஊழியர்கள் உள்ளனர். 

பொருளாதாராத்தில் பட்டம் பெற்றுள்ள நிர்மலா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பயின்றவர். பின்னர் டெல்லி ஜேஎன்யூ-ல் பொருளாதாரத்தில் எம்-பில் முடித்துவிட்டு, இண்டோ-ஐரோப்பிய வர்த்தகத்தில் சிறப்பு ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

அவர் தன்னுடன் ஜேஎன்யூ’வில் பயின்ற பரக்கல பிரபாக்கர் என்பவரை திருமணம் முடித்து லண்டனில் குடியேறினார். அங்கே ப்ரைஸ்வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே ஆராய்ச்சியும் மேற்கொண்டார் நிர்மலா.

பின்னர் இந்தியா திரும்பிய அவர், ஹைதராபாத்தில் உள்ள Centre for Public Policy Studies இல் துணை இயக்குனராக பணியாற்றினார். அங்கே ஒரு பள்ளியும் ஆரம்பித்த அவர், தேசிய பெண்கள் ஆணையத்தில் 2003-2005 வரை உறுப்பினராக இருந்தார்.

2008-ம் ஆண்டு நிர்மலா, பிஜேபியில் சேர்ந்து 2010-ல் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனார். பிஜேபி 2014-ல் ஆட்சிக்கு வந்தபின், அவர் வர்த்தக அமைச்சக துணை அமைச்சர் ஆனார். தற்போது அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆன பின் உறுதி எடுத்தபோது,

“சிறிய ஊரில் இருந்து வந்த நான் இக்கட்சியின் தலைமையின் ஆதரவோடு வளர்ந்து, இன்று இத்தகைய பொறுப்பை அடையும் அளவிற்கு உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரபஞ்சத்தின் வாழ்த்துக்களே இந்த பொறுப்பை எனக்கு பெற்று தந்துள்ளது,” என்றார்.

நிர்மலா தேர்தலுக்கு இரண்டாண்டுகளே உள்ள நிலையில் பாதுக்காப்புத் துறை அமைச்சராகியுள்ளது, அவர் மீது அரசு கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. பாதுகாப்புத் துறையில் உள்ள முக்கிய பிரச்சனைகளை அவர் எப்படி கையாளப் போகிறார் என்று பார்க்கவேண்டும்.

டிஎன்ஏ செய்தியில், நிர்மலா எந்த ஒரு விமர்சனத்துக்கும் அஞ்சாதவர் என்று குறிப்பிட்டுள்ளது. 

“ஒவ்வொரு விமர்சனமும் ஒரு விஷயத்தை நமக்கு கற்றுத்தருகிறது. அதனால் அதை ஒதுக்கி தள்ளாமல், அதைக் கண்டு பயப்படாமல் நான் எனக்கான கற்றலை எடுத்துக் கொள்கிறேன். விமர்சனங்கள் என் செயற்பாட்டை பாதிப்பதில்லை. அது என் பணியை மேம்படுத்துவதோடு, தவறை திருத்திக் கொண்டு உழைக்க உதவுகிறது,” என்றார். 

தற்போது பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறையில் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

கட்டுரை: Think Change India