கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைத்தி அனைவரையும் உள்ளடக்கிய பள்ளிகளை உருவாக்கும் அரசு சாரா நிறுவனம்!

0

இந்தியாவில் சாதி, மதம், பாலினம் போன்ற சமூக பிரிவினைகள் வர்க்கப் பிரிவினைகளால் மேலும் வலுவடைகிறது. தற்போது குறைவான வருவாய் ஈட்டுவோரும் விளிம்பு நிலையில் இருப்போரும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே செல்கிறனர். இதன் காரணமாக இந்தக் குழந்தைகள் ஐந்தாம் வகுப்பை அடைகையில் ஏற்கெனவே மூன்று நிலைகள் வரை பின்தங்கி கற்றல் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கின்றனர்.

பள்ளிகளில் இவ்வாறு நிலவும் சமூக பிரிவினைகளை கருத்தில் கொண்டே அதை மாற்றும் நோக்கத்துடன் 2009 கட்டாய கல்வி உரிமைச் சட்டம் (RTE) இயற்றப்பட்டது. இது அரசு உதவி பெறாத உயர்தர பள்ளிகளை அனைத்து புறக்கணிக்கப்பட்ட மாணவர்களும் இலவசமாக அணுகும் வாய்ப்பை வழங்கியது. எனினும் ஆண்டிற்கு 2.1 மில்லியன் இடங்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே நிரப்பப்படுகிறது. 29 மாநிலங்களில் 18 மாநிலங்கள் அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது.

அதிகரித்து வரும் இந்த சிக்கலை உணர்ந்து ’இண்டஸ் ஆக்‌ஷன்’ (Indus Action) என்கிற அரசு சாரா நிறுவனம் கொள்கைகள் நடைமுறைப்படுத்தும் பகுதியில் செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடங்கல்களை தீர்க்கும் முயற்சியில் உள்ளது. இடைவெளியைக் குறைப்பதும் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் சட்ட உரிமைகளைப் பெற உதவுவதுமே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். 

கல்வி கற்கும் வாய்ப்பளித்தல்

’இண்டஸ் ஆக்‌ஷன்’ நிறுவனரான தருண் செருகுரி யூனிலிவர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தாய்வழி பாட்டி இவரது படிப்பிற்கு உந்துதலளித்தார். அவரை கௌரவிக்கும் வகையில் தருண் தனது பணியைத் துறந்து 2009-ம் ஆண்டு ’டீச் ஃபார் இந்தியா ஃபெலோஷிப்பில்’ இணைந்தார். 

”நான் சமூகத்தின் உயர் நிலையை எட்ட கல்வி எனக்கு உதவியது. என்னுடைய பாட்டியின் மரபை கௌரவப்படுத்த அதிகk குழந்தைகள் கல்வி பயில வாய்ப்பளிப்பதே சிறந்த வழி என்று நினைத்தேன்,” என்றார் 34 வயதான தருண்.

கோடைக்கால பயிற்சிக்கு பிறகு தருண் ஒரு பட்ஜெட் தனியார் பள்ளியில் நியமிக்கப்பட்டார். “வகுப்பறையின் உடைந்த ஜன்னல்களை சரிசெய்து வகுப்பறையின் சூழல் ஒவ்வொரு குழந்தையையும் கவரும் வகையில் மாற்றுவதிலேயே என்னுடைய முதல் வாரம் கழிந்தது. ஃபெலோஷிப்பின் முதல் சில வாரங்களில் இருந்தே வகுப்பறைகள் நம்மை முழுமையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைய வேண்டும் என விரும்பினேன்,” என நினைவுகூர்ந்தார் தருண்.

அதிர்ஷ்டவசமாக என்னுடைய வகுப்பறை ஒட்டுமொத்த இந்தியாவின் பண்புகளை வெளிப்படுத்தும் மாதிரி வகுப்பறை ஆனது. வடக்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்கள், நான் கற்பித்த மேற்கு இந்திய உட்பகுதிகள் போன்றவற்றைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழ்ந்தைகள் என்னிடம் கற்றனர். வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட குழந்தைகள் எங்களுடன் இருந்தனர். இதனால் வேற்றுமையைக் கொண்டாட பல தருணங்கள் உருவானது. இந்தத் தருணங்களே எனக்கு ஆர்வம் இருந்த பகுதியில் ஈடுபடவைத்தது.

எளிய துவக்கம்

ஒவ்வொரு நாளின் கலந்துரையாடல்களும் அவரது ஆர்வத்தைக் கண்டறிய உதவியது. அவரது வகுப்பறையில் கிடைக்கும் அதே அனுபவத்தை பல வகுப்பறைகளுக்கும் வழங்க விரும்பினார். இந்தியாவின் கல்வி உரிமை கொள்கைகளைப் படிக்கத் தீர்மானித்தார். இந்த விதிகளில் ஒன்றின்படி வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியைக் கொண்ட குழந்தைகளும் ஒரே வகுப்பறையில் இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நிலைகளில் இருந்தும் எட்டு மில்லியன் குழந்தைகள் ஒரே வகுப்பறையில் படிக்கின்றனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த சட்டத்திற்கு தொடர்புடைய முதன்மை கல்வி அமைப்பில் இருக்கும் பங்குதாரர்கள் போன்றோரை சேர்த்தால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும் பெரும்பாலான வளர்ச்சிக் கொள்கைகளைப் போலவே இந்த விதியும் சுமார் பத்தாண்டுகளாக செயல்படுத்தப்படுவதில் தொய்வு இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் இருக்கும் தேவையை நான் உணர்ந்ததால் கொள்கைகள் நடைமுறைப்படுத்தும் முயற்சிக்காக ’இண்டஸ் ஆக்‌ஷன்’ துவங்கினேன்.

இந்த திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இண்டஸ் ஆக்‌ஷனின் துவக்கம் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் போன்றவற்றில் செயல்படுத்தப்பட்டது. இங்குதான் அவர் சமூக ஒழுங்கமைப்பு பிரிவில் முதுகலைப் படிப்பை படித்தார். அவர் தனது பாடத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் வளர்ச்சியில் பங்களிக்க விரும்பும் மாணவர்களை ஒழுங்குபடுத்தத் தீர்மானித்தார். 

“கலந்துரையாடல்கள் இண்டஸ் ஆக்‌ஷனாக உருவானது. எங்களது முதுகலை படிப்பின்போது கூட்டு முயற்சியாக இந்தத் தளத்தை உருவாக்கினோம். 2013-ம் ஆண்டு கோடையின் போது முக்கிய குழுவைச் சேர்ந்த நாங்கள் மூவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக டெல்லி சென்றோம்.” 

ஏகலைவன் திட்டம்

அரசியலமைப்பின் மதிப்பு அனைவரையும் உள்ளடக்கிய பள்ளிகளில் சிறப்பாக வித்திடப்படும் என்று இண்டஸ் ஆக்‌ஷம் திட்டமாக நம்புகிறது. இத்தகைய பள்ளிகளில் அனைத்து சமூக மற்றும் பொருளாதார பின்னணியைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகக் கற்று வளர்ச்சியடைவார்கள். எனவே இந்நிறுவனம் அதன் முக்கிய முயற்சியாக ஏகலைவன் திட்டத்தை (Project Eklavya) அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் வெவ்வேறு சமூக அடுக்குகளில் பிறந்த அர்ஜுனனும் ஏகலைவனும் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வளர்ச்சியடையும் விதத்தில் ஒரு நவீன இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒன்பது முதல் பத்து வயதுள்ள என்னுடைய மாணவர்கள் கிறிஸ்தவர்கள், இந்து, முஸ்லீம் என்கிற பிரிவினை இன்றி அனைவருடனும் நட்பு பாராட்டுவதைக் கண்டேன். எனவே இந்த மாணவர்கள் இந்தியாவில் மதவாதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன் கொண்டவர்கள் என்பதை ஒரு முன்னாள் ஆசிரியராக நான் உணர்ந்தேன். ஜனநாயகத்தின் பணி எங்களது பள்ளிகளில் இருந்தே துவங்கப்படுகிறது என்பதை நான் திடமாக நம்புகிறேன். இந்தியா முழுவதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பணியைத் துவங்க கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாகும். இதன் காரணமாகவே எங்களது நிறுவனம் முதலில் இந்த முயற்சியைத் துவங்கியுள்ளது.

வகுப்பறையில் சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகள் இருப்பின் அது குழந்தைகளிடையே சிறப்பான சமூகம் மற்றும் கற்றல் விளைவுகளை ஏற்படுத்துவது தெளிவாகிறது. அதனால் ஏகலைவன் திட்டம் வயிலாக இக்குழுவினர் அனைவரையும் உள்ளடக்கிய பள்ளிகளை உருவாக்கி ஒருங்கிணைந்த சூழலையும் பிறரை புரிந்துகொள்ளும் பொறுப்புள்ள குடிமக்களையும் உருவாக்கத் தயாராகினர்.

சமூகத்தை ஒன்று திரட்டுதல்

இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இண்டஸ் ஆக்‌ஷன் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. அதாவது மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர், உள்ளூர் மற்றும் மாநில அளவிலான சமூக தொழில்முனைவோர், மாநில அரசாங்கம் ஆகியவற்றுடன் பணியாற்றுகிறது. இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த பெற்றோர், கல்வியாளர்கள், பள்ளி தலைவர்கள், அரசாங்கம் என அனைவரையும் ஒன்று திரட்ட முற்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சாதி, மதம், பாலினம், வர்க்கம் சார்ந்த அதிகார அமைப்பு தர்த்தப்படும் என்கிறார் தருண்.

ஆரம்பத்தில் இக்குழுவினர் தேவை நிலவும் குடும்பங்களைக் கண்டறிந்து அரசு உதவிபெறாத உயர்தர பள்ளிகளை அணுகுவதற்கு அவர்களுக்குள்ள உரிமையை எடுத்துரைத்து அவர்களது குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவும் தொடர்ந்து கல்வி கற்கவும் ஆதரவளிக்கின்றனர்.

அடுத்தகட்டமாக இந்த திட்டம் தொழில்முனைவோரை உருவாக்குகிறது. தருண் இது குறித்த ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டுகையில், “புது டெல்லியில் வருடம் முழுவதும் சமூக அளவில் பிரச்சாரம் மேற்கொள்ள ஏகலைவன் திட்டம் 100 பெண் தொழில்முனைவோர்கள், பெரும்பாலும் தாய்மார்களுக்கு பயிற்சியளிக்கும் மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளது.” இந்த திட்டம் ஒரே நேரத்தில் இரண்டு தலைமுறையைச் சேர்ந்தவர்களையும் சமூகத்தின் அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது. பயிற்சிகள், சலுகைகள், தொழில்நுட்ப ஆதரவு, அரசாங்கத்துடன் பார்னட்ஷிப், தலைமைப்பண்பு பயிற்சி ஆகியவற்றின் மூலம் மாநில அளவிலான சமூக தொழில்முனைவோருக்கு மூன்றாண்டுகள் இன்குபேஷன் அளிக்கிறது.

இறுதியாக மாநில அரசாங்கத்துடன் இணைந்து இந்த திட்டம் இடத்திற்கான பதிவு, மாணவர் கண்காணிப்பு போன்றவற்றிற்காக வெளிப்படையான தொழில்நுட்ப அமைப்பை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகிறது. மொத்தத்தில் இந்தியா முழுவதும் கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு ஏகலைவன் திட்டம் குறைந்த செலவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரச்சாரமாகும் என்கிறனர் இக்குழுவினர்.

ஒரு மில்லியன் மாணவர்களை இணைப்பதற்கான திட்டமிடல்

இண்டஸ் ஆக்‌ஷன் ஏகலைவன் திட்டம் வாயிலாக மூன்றாண்டுகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்தியாவின் ஐந்து நகரங்களைச் சேர்ந்த 30,000 மாணவர்களை சேர்த்துள்ளது. இந்த பிரச்சாரம் 45 மில்லியன் டாலர் மதிப்புள்ள டியூஷன் கட்டணம் சேமிக்கப்பட உதவியுள்ளது.

பள்ளியில் சேர்க்கப்பட்டதும் மாணவர்கள் படிப்பை தொடரும் விகிதமும் 91 சதவீதம் இருப்பதைக் காணமுடிந்தது. இவ்வாறு மாணவர்கள் பள்ளியில் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து தருண் விவரிக்கையில், 

“பெங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரம் காரணமாக கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவிகளின் கற்றல் விளைவுகளில் அனுமதி கிடைக்காத சக மாணவர்களுடன் ஒப்பிடுகையில் 43 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது,” என்றார்.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பணியைத் தங்களால் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல் அவதிப்படுவர். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் இத்தகைய நம்பிக்கை வலுவாக இருந்ததைக் காண முடிந்தது.

2020-ம் ஆண்டில் இந்தியாவின் 15-க்கும் அதிகமான மாநிலங்களில் ஒரு மில்லியன் மாணவர்களை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க இண்டஸ் ஆக்‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தியதும் இந்நிறுவனம் இதர சட்ட உரிமைகளான கட்டாய உணவு உரிமை சட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், பொதுச் சேவைகளைப் பெறும் உரிமை சட்டம் போன்ற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.

ஏகலைவன் திட்டம் போன்ற பிரச்சாரங்கள் மூலம் இண்டஸ் ஆக்‌ஷன் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி, சுதந்திரம், சமத்துவம் போன்ற அரசியலமைப்பின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உதவுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : சானியா ராசா | தமிழில் : ஸ்ரீவித்யா