'என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்'- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்!  

1

சமூகத்தில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் களம் இறங்கி இருக்கிறார் என்று பரப்பரப்பாக தமிழகம் முழுதும் சில நாட்களாக செய்த்கள் வெளியாகியுள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது ஒருவரிச் செய்தியல்ல. தமிழகத்தின் சமூக, அரசியல் தளங்கள் நூற்றாண்டுகளாக கண்டுவரும் மாற்றத்தை உணர்த்துவதாகவே இது பார்க்கப்படுகிறது. சமூக, இலக்கிய, கல்வி, சமூக சேவை என ஒவ்வொரு துறையிலும் திருநங்கைகள் கால் பதித்து வரும் நிலையில் அரசியல் பிரவேசம் செய்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை தேவி. முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடும் சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் 'நாம் தமிழர் கட்சி'யின் வேட்பாளர் தேவி. திருநங்கையான இவரிடம் நேர்காணல் கண்டது தமிழ் யுவர் ஸ்டோரி, அதன் விவரங்கள் இதோ:

தேவியும் போராட்டமும்

பெண்மையின் மென்மை தேவியின் பணிவில் தொணித்தது, யுவர் ஸ்டோரி நேர்காணலைத் தொடங்கியதும் தன்னுடைய பூர்வீகத்தில் இருந்து சொல்லத் தொடங்கினார் தேவி. 

நன்றி ns7
நன்றி ns7

“என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடன்சாவடி. பிறப்பால் நான் ஒரு ஆண், 12ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே படித்தேன், அதற்கு மேல் படிக்க வைக்க குடும்பத்தில் வசதி இல்லை. என்னுடைய 16வது வயதில் எனக்குள் பாதி பெண்மைத் தன்மை இருப்பதை உணர்ந்தேன். இதையடுத்து 17வது வயதில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தேன். என்னுடைய இந்த மாற்றத்திற்கு என் குடும்பத்தாரிடையே கடும் எதிர்ப்பு இருந்தது. ஏனெனில் நான் 10 மாத குழந்தையாக இருந்த போதே என் அப்பா இறந்து விட்டார். அம்மா முத்தம்மாள் என்னையும் அக்காவையும் சிரமப்பட்டு வளர்த்தார். அம்மாவிற்கு 40 வயது இருக்கும் போது நான் பிறந்ததால் குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு, இப்படி மாறி வருவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை மேலும் கடைசி காலத்தில் என்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்ற அச்சமும் அம்மாவிற்கு இருந்தது, எனினும் முழுதும் பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்ததால் வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துச் சென்று பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்” என்கிறார் தேவி.

நான் முழுவதும் பெண்ணாக மாறியதை என்னுடைய அம்மா ஏற்றுக் கொள்வதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது, ஏனெனில் சமூகம் மற்றும் சுற்றத்தாரின் பார்வை அவரை அச்சுறுத்தியது. இப்போது என்னுடன் என் அம்மா சந்தோஷமாக நாட்களை கழித்து வருகிறார் என்று பெருமையோடு சொல்கிறார் தேவி.

‘தாய்மடி’ கொடுத்து அரவணைக்கும் தேவி

தேவிக்கு சமூகப் பணியில் அதிக ஆர்வம், இதனால் 2004ம் ஆண்டு முதல் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியுள்ளார். இதன் விளைவாக 2009ம் ஆண்டு பிப்ரவரியில் ’தாய்மடி’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஆதரவற்ற முதியோருக்கு உணவும், உறைவிடமும் தந்து உதவுகிறார். “சிறு வயது முதலே உணவிற்கு நான் மிகவும் சிரமப்பட்டுள்ளேன், சமூகத்தில் நிலவும் இந்த அவல நிலையை துடைத் தெரியும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே ‘தாய்மடி’, மகுடன்சாவடியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தங்கும் விடுதியை ஏற்படுத்தியுள்ளோம். இந்த விடுதியில் கைவிடப்பட்ட முதியோர்களை அரவணைத்து அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்கி வருகிறோம். தாய்மடி தொண்டு நிறுவனத்தில் 100 பேரை அரவணைத்துக் கொள்ளும் வசதி இருந்த போதும் தற்போது 20 பேர் இந்த சேவையை பெற்று வருகின்றனர் என்கிறார் 33 வயதான திருநங்கை தேவி.

முதியோர்களுக்கு நான் செய்து வரும் சேவையால் சமூகம் என் மீது வீசிய ஏளனப் பார்வையை தகர்த்தெறிந்துள்ளேன். என்னைப் பலரும் மதிக்கும் நிலைக்கு நான் உயர்ந்ததால் அம்மா இப்போது என்னை அவருடைய பெண் என்று சொல்லிக் கொள்வதற்கு தயங்குவதே இல்லை என்று பெருமைப்படுகிறார் தேவி. 

தாய்மடி தொண்டு நிறுவனத்தை தேவி, அவருடைய தாயார் முத்தம்மாள் மற்றும் ஒரு உதவியாளர் சேர்ந்து நடத்தி வருகின்றனர், இதற்கான நிதியை நன்கொடைகள் மூலம் பெறுகின்றனர், மேலும் முதியோர்களுக்கு உதவ நினைப்பவர்களிடம் இருந்து மருத்துவ வசதி, பராமரிப்புச் சேவைக்கு தேவையானற்றை கேட்டு பெற்றுக் கொள்கின்றனர்.

அரசியலில் நுழைந்த முதல் திருநங்கை

தேவிக்கு தமிழ் தேசியக் கொள்கையின் மீது ஈர்ப்பு உண்டு. 'நாம் தமிழர் கட்சி' தொடங்கிய காலத்தில் கட்சியில் இணைந்து பல்வேறு பணிகளை செய்துள்ளார். தற்போது தன்னுடைய தாய்மடி தொண்டு நிறுவன சேவையில் முழுவீச்சில் ஈடுபட்டதால் அரசியலில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார். எனினும் 2016 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது நாம் தமிழர் கட்சி.

“சமூகப் பணியைப் போலவே அரசியலிலும் எனக்கு ஈடுபாடு உள்ளது. தேர்தலில் வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். என்னுடைய பொறுப்புகள் அதிகரித்துள்ளது அதற்கேற்ப நான் செயல்பட வேண்டும் என்ற தீர்மானம் எனக்குள் ஏற்பட்டுள்ளது” என்று சொல்கிறார் தேவி.

திருநங்கைகள் ஒடுக்கப்பட்ட இனமாகவே பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தின் முதல் திருநங்கை வேட்பாளராக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதால் சமூகம் என்னை உற்று நோக்குகிறது, எனவே நான் என்னுடைய கடமையை சிறப்புற நிறைவேற்றுவேன். 

பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் எப்போதும் எங்கள் இனத்தின் மீது செலுத்தும் ஏளனப்பார்வை இல்லாமல் அவர்கள் என்னை அந்தத் தொகுதியின் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது என்னுடைய அடையாளத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று நெகிழ்கிறார் தேவி.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் ஜெயலலிதா தான் தன்னுடைய அரசியல் முன்உதாரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார் தேவி. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று தமிழக அரசியல் நிலவரம் தெரியாதவர்கள் கூறலாம், ஏனெனில் தேவி எதிர்த்து நிற்பது ஜெயலலிதாவைத் தான். 

“நான் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிற்கிறேன், முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கவில்லை. என்றுமே நான் அவருக்கு போட்டியில்லை, ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் தளத்தில் ஒரு பெண்ணாக அனைத்துத் தடைகளையும் உடைத்து துணிச்சலாக செயல்படும் அவர் தான் என்னுடைய முன் உதாரணம்" என்று சொல்லம் தேவி, தொடர்ந்து பேசுகையில் வேட்பு மனுவை வாபஸ் பெறும்படி தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சொல்கிறார். முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடுவதால் தேர்தலுக்குப் பின்னர் பழிவாங்கப்படுவேன் என்றும் பயமுறுத்தப்படுகிறேன், இந்த பயம் நியாயமானது தான் ஆனால் ஒரு தொகுதியில் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம் என்ற ரீதியிலேயே எங்கள் கட்சி சார்பில் நான் போட்டியிடுகிறேன் என்கிறார் தேவி.

தேவி பிரச்சாரத்தில் பேசும் வீடியோ காட்சி
தேவி பிரச்சாரத்தில் பேசும் வீடியோ காட்சி

மாற்றத்தை நோக்கி பயணிக்கும் தேவி

தன்னுடைய தாய்மடி தொண்டு நிறுவனத்தை தமிழகம் முழுவதும் விஸ்திகரிப்பு செய்வதே தேவியின் நோக்கம். 'பசியால் எந்த உயிரும் வாடக்கூடாது என்ற அடிப்படையிலேயே எனது அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது'. தற்போது சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களால் மட்டுமே அறியப்படும் இந்த சேவையை தமிழகம் முழுவதும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த அரசியல் பிரவேசத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகச் சொல்கிறார் அவர்.

திருநங்கைகள் மாற்றத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டதாக சொல்லும் தேவி, இதே போன்று திருநங்கைகள் மீதான சமுதாயத்தின் பார்வையும் மாற வேண்டும் என்கிறார். 

“திருநங்கைகளால் பாலியல் தொழில் செய்து மட்டுமே பிழைப்பு நடத்த முடியும் என்ற பரவலான கருத்து களைஎடுக்கப்பட வேண்டும். திருநங்கைகளால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. 12ம் வகுப்பு வரையே படித்திருந்த எனக்கு சமூக சேவை மற்றும் அரசியல் தளம் கிடைத்தது போல அவரவர் தங்களுக்கு ஏற்ற துறையை தேர்வு செய்து அதற்கேற்ப தங்களின் வாழ்வை மேன்மையடையச் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார். இதே போன்று அரசுகளும் திருநங்கைகளுக்கு தனி வாரியம் அமைத்து அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” 

என்கிறார்.

விடாமுயற்சியால் காவல் ஆய்வாளரான பிரித்திக்கா, திருநங்கைகளின் உரிமைக்காக போராடும் சகோதரி அமைப்பின் கல்கி மற்றும் அரசியலில் கால் தடம் பதித்திருக்கும் நான், என்னைப் போன்றோரை முன் உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற திருநங்கைகளும் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் மாற்றத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறார் தேவி.

அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் பொன்மொழியான “எல்லா உயிரும் மதிக்கத்தக்கதே, அவை அனைத்தும் பசியற்ற வாழ்வை வாழ வேண்டும்” இதன்படி பசியால் வாடுவோருக்கு உதவ வேண்டும் என்பதே தனது இலக்கு என்று சொல்கிறார் தேவி. உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான உரிமை உள்ளது, திருநங்கைகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் திருநங்கை தேவி.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

கல்கி சுப்பிரமணியம்: தன்னை செதுக்கிய வெற்றி திருநங்கை!

நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?- திருநங்கை பத்மினி பிரகாஷ்