ஆண்களைவிட பெண்களே 'கூகிள்' பயன்படுத்துவதில்  முன்னிலை!

0

பெண்களை இணைய வெளிக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக கூகிள் நிறுவனம் எடுத்த பல்வேறு முயற்சிகள் வெற்றியடைந்ததாக உலக பெண்கள் தினத்தன்று கூகிள் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் காட்டுகிறது. இந்த ஆய்வு 2015ம் ஆண்டு கூகிள் தேடலை பயன்படுத்திய பெண்கள் எண்ணிக்கையையும், அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் இருந்த பெண்களின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்த அடிப்படையில் இந்த பத்தி எழுதப்பட்டிருக்கிறது. தற்போது ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் இணையம் பயன்படுத்துவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

போட்டோ உதவி : http://www.shutterstock.com/
போட்டோ உதவி : http://www.shutterstock.com/

கூகிள் தேடலில் அதிக அளவில் நேரம் செலவிடுபவர்கள் மத்திய வயதை சேர்ந்த பெண்களே. கூகிள் தேடலில் அதிக நேரம் செலவிடுவதில் 35 வயதிலிருந்து 44 வயதிற்குட்பட்ட பெண்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்திருக்கிறது. குறிப்பாக இதே வயதுள்ள ஆண்களைவிட ஒவ்வொரு ஆண்டும் 123 சதவீதம் பெண்கள் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் தேடலை பயன்படுத்தும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2015ம் ஆண்டு 15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட பெண்கள் இணையம் நோக்கி வருவது வெகுவாக அதிகரித்திருக்கிறது. வேலைக்கு செல்லும் பெண்களின் (24 லிருந்து 35 வயதுக்குட்பட்டோர்) இணைய பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.

இணைய தேடலில் அதிக நேரத்தை செலவிடும் 15 -24 வயதுக்குட்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 104 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்றால், பெண்களின் எண்ணிக்கை 110 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 25 - 34 வயதுள்ள ஆண்களின் எண்ணிக்கை 98 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை 108 சதவீதமும் முன்னேறி இருக்கிறது.

அதே போல அப்பாக்களை விட அம்மாக்கள் தான் அதிக அளவில் கூகிள் தேடலை பயன்படுத்துகிறார்களாம். இணையத்தை பயன்படுத்தும் மூன்றில் ஒரு பங்கு அம்மாக்கள் கூகிளை பயன்படுத்துகிறார்கள். நான்கில் ஒரு அப்பாக்கள் தான் கூகிளை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள் அடிப்படையில் 

ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருப்பது சில குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த தேடல்களிலும் இருக்கிறது.

* அழகு தொடர்பாக தேடும் பெண்கள் ஆண்களை விட நான்கு மடங்கு அதிகம்

* ஃபேஷன் பற்றி தேடும் பெண்கள் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகம்

* உணவு மற்றும் பொழுதுபோக்கு குறித்து தேடுவதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது

* தொலைக்காட்சி சேவைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் ஆண்களை விட பெண்கள் 3 மடங்கு அதிகம். உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி தேடுபவர்கள் ஆண்களை விட பெண்கள் 2 மடங்கு அதிகம்.

ஐஏஎம்ஏஐ மற்றும் ஐஎம்ஆர்பி ஆகியோர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை படி இணையம் என்பது ஆண்களுக்கான வெளியாகவே இருக்கிறது. வெறும் 29 சதவீத பெண்களே இணையம் பயன்படுத்துகிறார்கள். கிராமங்களில் இது இன்னமும் குறைவு. அங்கு வெறும் 12 சதவீத பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலை தான் இருக்கிறது.

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் இணையம் பயன்படுத்தும் நாடாக இந்தியா இருக்கிறது. சுமார் 325 மில்லியன் பேர் தொடர்ச்சியாக இணையம் பயன்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 121 மில்லியன் பேர் பிராட்பேண்ட் மூலம் பயன்படுத்துகிறார்கள். மீதமிருப்போர் நேரோபேண்ட் வழியாக பயன்படுத்துகிறார்கள்.

குறைந்த விலைக்கு ஸ்மார்ட்ஃபோன் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். 2016ம் ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக வைஃபை சேவை வழங்கப்போவதாக கூகிள் சொல்லியிருக்கிறது. இது போன்ற சேவைகள் மூலமும் இணைய பயன்பாடு அதிகரிக்கக்கூடும். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இணையம் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதில் இணையத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. கிராமங்களில் இருக்கும் 800 மில்லியன் மக்களுக்கும் இணையம் சென்று சேரும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பெண்கள் தினத்தன்று பெண்களுக்காக தனியே டூடுல் ஒன்று வெளியிட்ட கூகிள் பெண்களை கவுரவிக்கும் விதமாக பல்வேறு முன்னெடுப்புகளையும் தொடர்ச்சியாக செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் : ஹர்ஷித் மல்யா | தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரை:

ஆல் இன் ஆல் அழகுராஜாவாகும் ஃபேஸ்புக்!