உங்களை சிந்திக்கத்தூண்டும் நடிகை கங்கனாவின் ஆறு வாக்கியங்கள்! 

0

பாலிவுட்டில் இருக்கும் பெண்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒரு பிரிவினர் வெற்றியாளர்கள், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள், நேர்காணல்களை சரியான முறையில் வழங்குபவர்கள், சிறந்த ஆண் சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் சிறந்த இயக்குனர்கள் குழுவுடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி பாராட்டுவார்கள். மற்றொரு ரகத்தினர் பெயர்விரும்பிகள். இவர்கள் தங்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டே இருப்பார்கள். இவர்களை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

இந்த இரு பிரிவிலும் சேராதவர்களில் ஒருவர்தான் கங்கனா ரனாவட், ஒரு சிறிய நகரத்துப் பெண். சினிமாவின் பின்புலம் இல்லாதவர். தன் திறமையால் மட்டுமே பெயர் பெற்றவர். மிகவும் சிக்கலான கலங்கவைக்கக்கூடிய கதாப்பாத்திரங்களை கையாள்வதில் வல்லவர். மிகுந்த ஊக்கத்துடனும் உண்மையாகவும் நடிக்கக்கூடியவர். பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை அளித்தவர். பொதுவாக கான் அல்லது கபூர் போன்ற பெயர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டவர்களின் திரைப்படங்கள்தான் வசூலைக் குவிக்கும். கங்கனா இதற்கு விதிவிலக்கு. சமீபத்தில் மூன்றாவது தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். இன்று அதிக சம்பளம் வாங்கும் பாலிவுட் கதாநாயகி இவர்தான்.

இதுபோன்ற ஏற்றங்கள் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இறக்கத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார் கங்கனா. காதல் விவகாரம். கருத்து வேறுபாடு. நடிகர் ஹ்ருதிக் ரோஷனுடனான குழப்பமான சட்ட ரீதியான விவகாரங்கள். ஒருவரோடொருவர் குற்றச்சாட்டுகளை மாறி மாறி வீசுகிறார்கள். இதனிடையில் கங்கனாவின் முன்னாள் பாய்ஃபிரண்ட் அவரை மனநோயாளி, சைக்கோ என்றும் உடல் ரீதியாக தன்னை துன்புறுத்தினார் என்றும் தன்பங்கிற்கு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக சமீபத்தில் ட்விட்டரில் அவரை நடத்தைகெட்டவர் என்று முத்திரையும் குத்தியுள்ளனர்.

NDTV யில் பர்கா தத்துடனான நேர்காணலில் மனம் திறந்தார் கங்கனா. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதோ இல்லையோ அவர் விவேகத்துடன் தைரியமாக தன்னுடைய நிலையை எடுத்துரைத்தார்.

உங்களை சற்றே நிறுத்தி யோசிக்கவைக்கும் கங்கனாவின் ஆறு வாக்கியங்கள் இதோ:

வெற்றியும் கிண்டலும்தான் சிறந்த பழிவாங்கும் நடவடிக்கை

நீங்கள் வாழ்க்கையில் அதிகமாக சாதிக்கும்போது அடுத்தவரிடமிருந்து பொறாமையும் வெறுப்பும் அதிகமாக வெளிப்படத்தான் செய்யும். உங்களை விமர்சிப்பவர்களை பழிவாங்க நீங்கள் மேலும் சிறப்பாக வளர்ச்சியடையவேண்டும் என்கிறார் கங்கனா. அத்துடன் கிண்டலும் சேர்ந்தால் இன்னும் அதிக சுவைகூடும் என்கிறார்.

மக்களை மகிழ்விப்பவர்கள் அல்லது தம்மைத்தாமே மகிழ்வித்துக்கொள்பவர்கள்

கங்கனா தம்மைத்தாமே மகிழ்வித்துக்கொள்ளும் ரகத்தை சேர்ந்தவர். இவ்வாறு தங்களை மகிழ்வித்துக்கொள்பவர்களை மக்கள் சுயநலவாதிகளுடன் குழப்பிக்கொள்கிறார்கள். இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்ற தனி நடத்தைகளை பின்பற்றுவார்கள். சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தங்களின் மனசாட்சிக்கு ஏற்றவாறு நடந்துகொள்வார்கள்.

முற்றிலும் ஆபாசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்

கங்கனா சொல்வதுபோல நாம் ஆணாதிக்க சமுதாயத்தில் இருக்கிறோம். பெண்கள் மீதான வெறுப்பு மக்கள் மனதில் வேறூன்றியுள்ளது. சினிமாத்துறையில் இது தெளிவாக காணப்படும். பெண்கள் கவர்ச்சி பொம்மைகளாக பார்க்கப்படுகிறார்கள். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு நடந்துகொள்வதை பெண்கள் நிறுத்தினால்தான் இந்த நிலை மாறும். பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முயற்சிக்காமல் தைரியமாக அவதூறுகளை எதிர்கொள்ளவேண்டும். அச்சமின்றி வாழத் தொடங்கவேண்டும். சினிமாத்துறையில் ஆண் பெண் இருவருக்கும் சமமாக சம்பளம் தரப்படவேண்டும் என்று விவாதித்த வெகு சிலரில் கங்கனாவும் ஒருவர். லாபகரமான ஒரு அழகுசாதன க்ரீம் நிறுவனத்தின் டீலை நிராகரித்துவிட்டார். இந்த தயாரிப்பு ஒருவரின் உடல் அமைப்பை அவமதிப்பது போல் இருப்பதுதான் அவர் மறுத்ததற்கு முக்கிய காரணம்.

சைக்கோ, சூனியக்காரி, விபச்சாரி முத்திரை

நாம் அவமானப்படுவதற்கு நாமே அனுமதித்தால் மட்டுமே அவமானம் அடைய முடியும். கங்கனா மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று மிகவும் விநோதமானது. அவர் ஒரு சூனியக்காரி என்றும் அவரது மாதவிடாயின் போதான ரத்தப்போக்கைக் கொண்டு அவரது முன்னாள் பாய்ஃபிரண்டை ப்ளாக் மாஜிக் செய்தார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. ஹாரிபார்ட்டர் போன்ற ஃபேன்டஸியில் வரும் கூலான கதாபாத்திரங்களுடன் அவர் சூனியக்காரியை ஒப்பிடுகிறார். மேலும் மாதவிடாயின் உதிரப்போக்கு குறித்து அவமானப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் அதுதான் இனப்பெருக்கத்திற்கான ஒருவரது திறனை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிடுகிறார். விபச்சாரி மற்றும் மனநிலை சரியில்லாதவர் போன்ற இருவேறு கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். ஆகையால் இதில் அவமதிப்பு இல்லை என்று அவர் புரிந்துகொண்டதாக குறிப்பிடுகிறார். இவ்வாறான அவமானங்களால் பாதிப்படையாமல் இருப்பதால் ஒருவரை அவமானப்படுத்துபவரின் சக்தியை அவர்களிடமிருந்து பறித்துவிடலாம்.

உங்களின் உணர்வுகளுக்கு எளிதாக தூண்டப்படவில்லையெனில் அடுத்தவருடைய உணர்வுகளுக்கு எவ்வாறு தூண்டப்படுவீர்கள்?

அவருடைய பாதிப்புகளையும் காயங்களையும் ஒத்துக்கொள்கிறார். சில சமயங்களில் இதுபோன்ற எதிர்மறைகளால் மனம் சோர்வுற்றாலும் அதிகமான பலத்துடன் வெளிப்படுகிறார். இது வாழ்வின் ஒரு முரண்பாடுதான். யார் தங்களை பலவீனமாக இருக்க அனுமதிக்கிறார்களோ அவர்கள்தான் உண்மையில் அதிக பலசாலிகள்.

உங்களுக்கான கப் கேக் எப்போதும் உள்ளது

அடுத்தவர்களை தன்னையும் அறியாமல் அவமதித்துக்கொண்டே இருக்கும் “தொடர் குற்றவாளி” என்று தன்னைத்தானே குறிப்பிட்டு தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துகிறார். மிருதுவான பூச்செண்டும் கரடுமுரடான கற்களும் இரண்டுமே வாழ்க்கையின் பகுதிதான். சிலசமயம் எதிர்மறையான விஷயங்களை நகைச்சுவை உணர்வுடன் கையாளவேண்டும் என்று காட்டுகிறார் கங்கனா. வாழ்க்கையின் எப்பேர்பட்ட மோசமான நிலையிலும் சில நல்ல விஷயங்களும் இருக்கும் அதாவது கங்கனா சொல்வதுபோல எப்போதும் கப்கேக்களும் இருக்கும்.

ஆக்கம் : ஷரிகா நாயர் | தமிழில் : ஸ்ரீ வித்யா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உங்களுக்காக நீங்களே போராடத் தயாராக வேண்டும்: சன்னி லியோன்' நமக்கு கற்று தந்த வாழ்க்கை தத்துவம்

தெரிந்த இந்திய நடிகைகள் - தெரியாத மறுபக்கம்!