கடத்தப்பட்டு பாலியல் தொழிலில்  ஈடுபடுத்தப்பட்ட 5 ஆயிரம் பெண்களை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்!

ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன் என்கிற லாபநோக்கமற்ற அரசு சாரா நிறுவனம் பாலியல் கடத்தலினால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்துடன் திரும்ப ஒன்றிணைக்கிறது.

1

பல காலங்களுக்கு முன்னதாகவே அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு தடை செய்யப்பட்டிருப்பினும் இன்றளவும் அடிமைத்தனமானது வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது. மனிதர்களை கடத்தும் நவீன அடிமைத்தனமானது வணிக ரீதியான பாலியல் வன்கொடுமைகளுக்கான மில்லியன் டாலர் துறையாக உள்ளது. உலகளவில் 45 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

தெற்காசியாவில் மனித கடத்தலில் இந்தியாதான் மையப்பகுதியாக மாறியுள்ளது. நாட்டின் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 20 மில்லியனாக மதிப்பிடப்படுகையில் அதிகபட்சமாக 16 மில்லியன் பெண்களும் சிறுமிகளும் பாலியல் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் வறிய மாநிலங்களிலிருந்தும் இளம் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வணிகத்தில் வற்புறுத்தப்பட்டு கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். அடிமைகளாக விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் வெளி நாடுகளுக்கும் விற்கப்படுகின்றனர்.

நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட அப்பாவி பெண்களை மீட்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் 2000-ம் ஆண்டு பால்கிருஷ்ண ஆச்சாரியா மற்றும் திரிவேணி பால்கிருஷ்ண ஆச்சாரியா ஆகியோரின் முயற்சியால் உருவானதுதான் ’ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன்’ (Rescue Foundation).


எவ்வாறு துவங்கப்பட்டது?

1993-ம் ஆண்டு மும்பையின் காமதிபுரா சிகப்பு விளக்கு பகுதியில் இருந்த பாலியல் தொழிலாளிகளை சந்திக்க கதாநாயகர் சுனில் தத் வந்திருப்பதாக வதந்தி பரவியது. அவர்களிடம் ராக்கி கட்டிக்கொள்ள அவர் சென்றிருப்பதாக கூறப்பட்டது. திரிவேணி ஆச்சாரியா அப்போது இளம் பத்திரிக்கையாளராக இருந்தார். தூர்தர்ஷன் சார்பாக அங்கு நடந்த சம்பவத்தை பதிவு செய்வதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றார்.

அந்த இடத்தை சென்றடைந்ததும் சுனில் தத் பங்கேற்ற நிகழ்வைக் காட்டிலும் அங்கு நடந்துவந்த பாலியல் தொழில் குறித்து அறிந்துகொள்வதில் அதிக ஆர்வமுடன் இருந்தார். மரப்பெட்டி போன்ற அறைகளுக்கிடையே அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பாதையில் நடந்து சென்றார். செல்லும் வழியில் மூன்று சிறுமிகளைக் கண்டார். அவர்கள் பாலியல் தொழிலாளிகளின் மகள்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொண்டார்.

அந்தச் சிறுமிகள் அங்கிருந்த பாலியல் தொழிலாளிகளின் மகள்கள் அல்ல என்றும் அவர்கள் கடத்தி வரப்பட்டவர்கள் என்றும் தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.

”அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்று நான் கேட்டேன். நேபால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தாங்கள் கடத்தப்பட்டு அந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். அங்கிருந்து எப்படியாவது தப்பி வெளியேறவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனர். அங்கிருந்த பெண்களில் ஒருவர் அந்தச் சிறுமிகளை நோக்கி கத்தினார். உடனே அந்த மூன்று சிறுமிகளும் உள்ளே ஓடிவிட்டனர்,” என்று நினைவுகூர்ந்தார்.


சிறுமிகள் கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை இந்த சம்பவத்தின் மூலம் நேரடியாக தெரிந்துகொண்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளராக அவரது பயணத்தை தொடர்ந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கணவரின் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்துகொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார். திரிவேணி அந்தச் சிறுமிகளை சந்தித்த அனுபவமும் அந்தச் சம்பவம் அவருக்குள் ஏற்படுத்திய தாக்கமும் அவரது கணவரின் நினைவில் நீங்காமல் இருந்தது. இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை மீட்க முடிவெடுத்தனர்.

அந்த இடத்தைச் சென்றடைந்ததும் அந்தப் பெண்ணுடன் மேலும் பதினைந்து பெண்கள் வந்தனர். தங்களையும் மீட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி மன்றாடினர். காவலர்களின் உதவியுடன் அந்தத் தம்பதி அவர்களையும் விடுவித்தனர். சிலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்தனர். சில பெண்களின் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை. அந்தப் பெண்கள் கடத்தப்பட்ட நேபாளப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் ’மைத்தி நேபால்’ என்கிற மையத்திற்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.

"அப்போதுதான் என்னுடைய கணவர் இவ்வாறு கடத்தப்படும் இளம் பெண்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட விரும்பினார். இவர்களுக்காக எங்களது வாழ்க்கையை அர்ப்பணிக்க தீர்மானித்தோம்,” என்றார் திரிவேணி. 


ஆரம்ப நாட்கள்..

மும்பையில் இருந்த அவர்களது இல்லத்திலேயே முதலில் அடைக்கலம் அளிக்கத் துவங்கினர். ஆரம்ப நாட்களில் பால்கிருஷ்ணா தாமே மாறுவேடத்தில் பாலியல் தொழில் நடந்த இடங்களுக்குச் சென்றார். அங்கு கட்டாயப்படுத்தப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் தப்பிக்க விரும்பும் பெண்களைக் கண்டறிந்தார்.

பால்கிருஷ்ணா இவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட விரும்பி தனது தொழிலை கைவிட்டார். திரிவேணி பகல் வேளையில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தார். இரவு நேரத்தில் தனது கணவரும் அவர்களது குழுவும் ஈடுபட்ட மீட்புப் பணிக்கு உதவினார். திரிவேணி கூறுகையில்,

”எங்களது மீட்புப் பணி குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் ஊடகத்தில் செய்தி வெளியிட்டார். உடனே செய்தி வேகமாக பரவியது. 2001-ம் ஆண்டு எங்களுக்கு ’ரீபோக் மனித உரிமை விருது’ வழங்கப்பட்டது. அந்த விருதினைப் பெற்றுக்கொள்ள எங்களது மறுவாழ்வு மையத்திலிருந்து ஒருவரை அனுப்பினோம்.”


இவர்களது முயற்சி பெரியளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2003-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக ஏழு மாடி கட்டிடம் ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. அவர்களது முயற்சி மேலும் விரிவடைய இந்த நன்கொடை பெரிதும் உதவியது.

இவர்களது பயணம் கடினமாகவே இருந்தது. இவர்களுக்குப் பல மிரட்டல் அழைப்புகளும் கடிதங்களும் வந்தன. சில சமயம் காவல் அதிகாரிகள் ஆதரவளித்தனர். சில நேரங்களில் ஊழல் புரியும் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடும் தீர்மானத்துடன் பால்கிருஷ்ணாவும் திரிவேணியும் தங்களது முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை. 2005-ம் ஆண்டு அவர்கள் பயந்தது போலவே ஒரு சம்பவம் நடந்தது. பால்கிருஷ்ணாவிற்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

விபத்து என பதிவு செய்யப்பட்டாலும் தனது கணவரை தொடர்ந்து அச்சுறுத்தி வந்தவர்களின் திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும் என நம்பினார் திரிவேணி.

வருத்தமும் ஏமாற்றமும் திரிவேணியின் முயற்சிக்கு தடையாக இருக்கவில்லை. காலம் செல்லச் செல்ல அவர் மேலும் உறுதியானார். உடலளவிலும் மனதளவிலும் பெண்களை மோசமாக பாதிக்கும் இந்தத் தொழிலில் கட்டாயமாக சேர்க்கப்பட்டிருப்பவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மேற்கொண்டார்.


மீட்பிலிருந்து மறுவாழ்வு வரை…

திரிவேணியின் ஃபவுண்டேஷன் மூலம் மீட்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த ஃபவுண்டேஷனில் பிரத்யேகமாக 100 முழு நேர பணியாளர்கள் உள்ளனர். தகவல் கொடுப்பவர்களாக 100 பேர் ஒன்றிணைந்துள்ளனர். மும்பை, பூனே, டெல்லி ஆகிய பகுதிகளில் நான்கு காப்பகங்களும் நான்கு கிளை அலுவலகங்களும் உள்ளது. 

இவற்றைக் கொண்டு தொழில்முறை பயிற்சி, சமூகத்துடன் ஒன்றிணைதற்கான உளவியல் ரீதியான ஆலோசனைகள், மையத்தினுள் ஏற்பாடு செய்யப்படும் பள்ளிப்படிப்பு, எச்ஐவி மற்றும் அதிர்ச்சிக்கு பிறகான பராமரிப்பு உள்ளிட்ட மருத்துவ வசதிகள், எல்லை தாண்டி கடத்தி வரப்பட்ட பெண்களை மீட்டு அவர்களது பகுதிக்குக் கொண்டு சேர்த்தல், குற்றவாளிகளை தண்டிக்க சட்ட உதவி போன்றவற்றை ஃபவுண்டேஷன் வழங்குகிறது.

பல வருட போராட்டங்கள், மிரட்டல்கள், குற்றவாளிகளிடமிருந்து தொடர் தாக்குதல்கள் ஆகியவற்றை சந்தித்துள்ளது. சமீபத்தில் 2016-ம் ஆண்டு ஃபவுண்டேஷனைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார். ஆனால் தன்னால் இயன்ற அளவு இளம் பெண்களையும் சிறுமிகளையும் மீட்டு மறுவாழ்வு அளிக்கவேண்டும் என்பதில் திரிவேணி உறுதியுடனும் நம்பிக்கையுடனும் காணப்படுகிறார்.


தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திரிவேணி தனது குழுவுடன் பாலியல் தொழிலில் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளார். இதுவரை 5,000 பெண்களை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 300 பெண்களை இந்தியாவிலிருந்தும் அருகாமையிலுள்ள நாடுகளிலிருந்து மீட்டுள்ளார்.

ஃபவுண்டேஷனின் உதவியுடன் இந்தப் பெண்கள் தங்களது பயங்கர நினைவுகளிலிருந்து மீண்டு மரியாதையுடன் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

ஆங்கில கட்டுரையாளர் : க்விய்னீ மஹாஜன்