தொடர் தோல்விகளை சந்தித்தும் மறுசுழற்சி வணிகத்தில் மில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டும் தொழில்முனைவர்! 

0

ட்ராப் பாக்ஸ் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ட்ரூ ஹஸ்டன், “நீங்கள் ஒருமுறை சரியாக இருந்தால் அதுவே போதும்,” என்றார். ஹ்ரிதேஷ் லோஹியா பல மில்லியனுக்கு சொந்தக்காரர் ஆவதற்கு முன்பு எண்ணற்ற தவறுகள் இழைத்துள்ளார்.

”நான் ஒரு ஜவுளி ரசாயன தொழிற்சாலையைத் துவங்கினேன். அதன் பிறகு கல் வெட்டும் தொழிற்சாலையைத் துவங்கினேன். சலவைத்தூள் உற்பத்தி செய்து விற்பனை செய்தேன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டேன். இன்னும் பல முயற்சிகள் மேற்கொண்டு அவை அனைத்திலும் மிகப்பெரிய தொகையை இழந்தேன்,” என்றார்.

பயன்பாட்டில் இல்லாத கழிவுகளை மறுசுழற்சி செய்வது வணிக ரீதியாக சிறப்பான திட்டம் இல்லை. ஆனால் அது மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தது. ஹ்ரிதேஷ் குறிப்பிடுகையில், இந்த வணிகங்களில் பணத்தை இழந்தபிறகு புதிதாக எதிலும் முதலீடு செய்ய இயலவில்லை. அந்தத் தோல்விகளால் கிடைத்த சொத்து எங்களது தொழிற்சாலையைச் சுற்றிலும் குவிந்த கழிவுப்பொருட்கள் மட்டுமே. பழைய சாக்குபைகள், ட்ரம் முழுக்க ரசாயனங்கள், ப்ளாஸ்டிக் துண்டுகள் போன்றவை நிறைந்திருந்தன. இதில் சிலவற்றை விற்பனை செய்ய முயன்றோம் ஆனால் யாரும் வாங்கவில்லை. 

“இந்தக் கழிவுப் பொருட்களில் இருந்து எவ்வாறு வருவாய் ஈட்டலாம் என சிந்திக்கத் துவங்கினோம். இந்த சிந்தனையின் காரணமாக 2005-ம் ஆண்டு உருவானதுதான் ப்ரீத்தி இண்டர்நேஷனல் (Priti International),” என்றார்.

ஹ்ரிதேஷ் பல வணிக முயற்சிகளுக்குப் பிறகு ஸ்டார்ட் அப் குறித்து யோசித்தபோது சற்று மூடநம்பிக்கையுடனேயே சிந்தித்தார். “நான் சோர்ந்து இருந்த காலகட்டத்தில் என் மனைவி ப்ரீத்திதான் எனக்கு ஆதரவளித்தார். அவர் என்னுடைய அதிர்ஷ்ட்டம். என்னுடைய முந்தைய ஸ்டார்ட் அப்களுக்கு பெயரிடுகையில் அவரது பெயரை இணைக்காததால்தான் நான் தோல்வியுற்றேன் என நம்புகிறேன். இந்த முறை அந்தத் தவறை நான் செய்யவில்லை,” என்றார்.

இந்நிறுவனம் பயன்பாட்டில் இல்லாத கழிவுப் பொருட்களைக் கொண்டு பல்வேறு கைவினைப் பொருட்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. “பழைய சாக்குபைகள், பிரிக்கப்பட்ட ராணுவ கூடாரங்கள், டெனிம் பேண்டுகள் போன்றவற்றைக் கொண்டு கைப்பைகளை தயாரிக்கிறோம். வீணாக்கப்பட்ட டின், ட்ரம், பழைய ராணுவ ஜீப், ட்ராக்டர் உதிரிபாகங்கள், அப்புறப்படுத்தப்பட்ட இயந்திரங்களின் பாகங்கள், பழைய ஸ்கூட்டர் மற்றும் பைக்கில் இருக்கும் விளக்குகள் போன்றவற்றைக் கொண்டு ஃபர்னிச்சர் தயாரிக்கிறோம். பின்னர் இந்தப் பொருட்கள் சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது,” என்றார். மேலும், 

“தற்போது பயன்பாட்டில் இல்லாத கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களில் நாங்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இருக்கிறோம். அத்துடன் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரே இந்திய நிறுவனம் நாங்கள் மட்டுமே,” என்றார்.

”எங்களது தற்போதைய வருவாய் சுமார் 8 மில்லியன் டாலராகும். 36 நாடுகளில் எங்களது வாடிக்கையாளர்கள் உள்ளனர். எங்களது மூன்று பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 400 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சீனாவில் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் அந்த சந்தையில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்றைய தலைமுறையினர் பார், கஃபே, பப், உணவகங்கள் போன்றவற்றில் எங்களது பொருட்களைக் கொண்டு அலங்கரிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எங்களது உற்பத்தியை விரிவுபடுத்தவும் 20 மில்லியன் டாலர் மதிப்பை எட்டவும் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் ஹ்ரிதேஷ்.

“சீனாவில் எங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய சில்லறை வர்த்தக ஷோரூமை சமீபத்தில் துவங்கியுள்ளோம். இது சோதனை முயற்சி மட்டுமே. ஆனால் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது எங்களது தயாரிப்புகளுக்கென பிரத்யேகமாக 12 ஷோரூம்களைத் துவங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

பயன்பாட்டில் இல்லாத கழிவுகளைக் கொண்டு வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தற்போது உற்சாகமான பகுதியாக மாறிவிட்டது. “எங்களுடைய வணிகம் முற்றிலுமாக வடிவமைப்பு சார்ந்ததாகும். நாங்கள் கண்டறியும் ஒவ்வொரு கழிவுப் பொருட்களையும் நன்றாக சிந்தித்து வடிவமைத்து அதை பயனுள்ள பொருளாக மாற்றவேண்டும். இது உற்சாகமான பணியாகும். ஒவ்வொரு நாளும் பயன்பாட்டில் இல்லாத பல புதிய கழிவுப் பொருட்களைக் கண்டறிகிறோம். அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த பொருளாக மாற்ற புதுப்புது வழிமுறைகளை ஆழமாக ஆராய்கிறோம்.

இந்தியாவில் விரிவடைவதற்காக பிரீத்தி இண்டர்நேஷனல் திட்டமிட்டு வருகிறது.  ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சியால் எங்களது தயாரிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் சிறப்பாக உள்ளது. எங்களது தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்காக பெப்பர்ஃப்ரை, ஃப்ளிப்கார்ட் போன்ற பல்வேறு ஆன்லைன் சில்லறை வர்த்தகர்களுடன் பேசி வருகிறோம். ப்ரீத்தி இண்டர்நேஷனல் தொடர்ந்து பிரபலமாகி வருகிறது.

”அதிகளவிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுவருகிறோம். சீனாவின் Canton Fair, ஷங்காயின் சர்வதேச ஃபர்னிச்சர் கண்காட்சி போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளோம். எங்களது தனித்துவமான பொருட்களின் வெற்றிக்கதை டிஸ்கவரி சானலில் ’தி லிக்விடேட்டர்ஸ்’ என்கிற பிரிவில் திரையிடப்பட்டது. இது 140 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. இது எங்களது மிகப்பெரிய குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்,” என்றார்.

ப்ரீத்தி இண்டர்நேஷனல் சுயநிதியில் இயங்கிவருகிறது. வங்கிகளிடமோ நிதி நிறுவனங்களிடமோ கடன் வாங்கவில்லை. ஹ்ரித்தேஷும் அவரது மனைவி ப்ரீத்தியும் முக்கியக் குழுவில் உள்ளனர். 

“இது நாங்கள் விருப்பத்துடன் மேற்கொள்ளும் முயற்சியாகும். நாங்கள் இருவர் மட்டுமே இதில் ஈடுபடுகிறோம். நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம்,” என ஹ்ரித்தேஷ் விவரித்தார்.

தொடர் தோல்விகளை சந்தித்ததால் ஏற்பட்ட தன்னம்பிக்கையின்மையே தொழில்முனைவோராக இருப்பதில் கடினமான பகுதியாக ஹ்ரித்தேஷ் கருதுகிறார். ”பல முயற்சிகளில் தோல்வியை சந்தித்த பிறகு புதிய முயற்சியை மீண்டும் அரம்பகட்டத்தில் இருந்து துவங்குவது மிகவும் கடினமாக இருந்தது. எங்களது திட்டத்தை பல முதலீட்டாளர்களிடம் எடுத்துரைத்தோம். யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. 

பணத்தேவை ஏற்பட்டதால் சீட் நிதிக்காக என்னுடைய மனைவியின் நகைகளை விற்கத் துவங்கினோம். பொருட்களின் மாதிரிகளை உருவாக்கி போட்டோ எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தோம். அந்த போட்டோக்களை உலகெங்கும் உள்ள சாத்தியக்கூறுகள் நிறைந்த வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்தினோம். முதல் ஆர்டர் பெற சுமார் இரண்டாண்டுகள் ஆனது. அந்த இரண்டாண்டுகள் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது,” என்றார்.

ப்ரீத்தி இண்டர்நேஷனலின் எதிர்காலம் அதிக வாய்ப்புகளுடன் பிரகாசமாகவே காணப்படுகிறது. 25 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறோம், என்றார்  ஹ்ரித்தேஷ். அவருக்கு ஆலோசகர்கள் யாரும் இல்லை. அதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. 

”நானே பரம்பொருள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கடுமையாக தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் உங்களுக்கான அதிசயம் காத்திருக்கிறது,” என்கிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : ராக்கி சக்ரபோர்த்தி | தமிழில் : ஸ்ரீவித்யா