'உணர்வுசார் நுண்ணறிவு' சிறந்த தலைவர்களை உருவாக்கும் உயரிய பண்பு: பயிற்சியாளர் ரா.ஆ.நடேசன்

0

உலகின் தலைச்சிறந்த தலைவர்கள் அனைவருமே ஆற்றல் மற்றும் பண்புகள் உள்ளவர்கள் என்பது நாம் அறிந்ததே, நாம் அதிகம் அறியாத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒன்று அவர்களின் 'உணர்வுசார் நுண்ணறிவு' (emotional intelligence). இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துவது இந்த உயரிய பண்பு என்றால் அது மிகையல்ல.

தலைமை இடத்தில இருப்பவர்கள் மற்றும் தலைமையிடப் பொறுப்பிற்குத் தேவையான உணர்வுசார் நுண்ணறிவில் பயிற்சிகளை தரும் சான்றிதழ் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த முன்னணி பயிற்சியாளர் ரா.ஆ.நடேசன் அவர்களிடம் தமிழ் யுவர்ஸ்டோரி உரையாடியது. உணர்வுசார் நுண்ணறிவு பற்றி அவர் கூறிய விளக்கங்கள் இதோ...

உணர்வுசார் நுண்ணறிவு என்றால் என்ன?

நம் அனைவருக்குள்ளும் இடம் பெற்றிருக்கும் பண்பு தான் இது என்றாலும் பெரும்பாலும் இதை நாம் கண்டுகொள்வதில்லை என்பதே நிதர்சன உண்மை. நமது உணர்ச்சித் திறன் மற்றும் சமூகத் திறனை ஒன்றிணைத்து நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே 'உணர்வுசார் நுண்ணறிவு'. நம்முடைய மற்றும் பிறரின் உணர்சிகளை புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் விதமே நம்மின் நுண்ணறிவை வேறுபடுத்தி காட்டுகிறது. இதுவே வெற்றிக்கும் வழி வகுக்கிறது என்கிறார் நடேசன்.

  • உணரும் மற்றும் வெளிப்படுத்தும் திறன்
  • சமூகத்தில் நம் செயல்பாடு மற்றும் மற்றவர்களுடன் இணைந்து செயாலாற்றும் திறன்
  • மன அழுத்தம் மற்றும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுபடும் திறன்
  • உடல் வெளிப்படுத்தும் நுண்ணறிவு திறன்களை கையாளும் விதம்

இவையே நம் உணர்வுசார் நுண்ணறிவை நிர்ணயிக்கிறது.

எவ்வாறு இதை வளர்த்துக்கொள்வது?

வெற்றி பெற்ற மற்றும் சிறந்து விளங்கும் தலைமையாளர்களை உற்று நோக்கினால் அவர்களின் சில குணாதிசயங்களைப் பார்க்க முடியும். இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தாலே மாற்றத்தை காண முடியும் என்கிறார்.

1. தன்னல மதிப்பு: நிறை குறைகளை அலசி ஆராய்ந்து தன் சுய மதிப்பை அறிந்திருக்கும் எவருமே தன்னை சரியாக முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள். ஆல்பர்ட் மேஹர்பியன் கூற்றின் படி 93% மொழி சாராத தொடர்பின் மூலமே நாம் மற்றவர்களிடம் உரையாடுகிறோம், ஆகவே நம் உடல் மொழி, தொனி இவை மிகவும் முக்கியம். நாம் பேசுவதும் நம் உடல் மொழி மற்றும் தொனியும் ஒத்துப்போக வேண்டும்.

2. உணர்ச்சிக்கு மதிப்பளித்தல்: செயல்திறன் மிக்க தலைவர்கள் தங்களின் உணர்சிகளை அறிந்திருப்பதுடன் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பவராகவும் விளங்குவர். இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில், நிறுவனங்கள் தங்களின் தலைமை பணியாளர்கள் இந்த பண்பை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். திறமையான பணியாளர்களை தக்க வைத்துக்கொள்ள இது பெரிதும் உதவும்.

3. நம்பிக்கை: எந்த ஒரு பின்னைடவு வந்தாலும், சவால்கள் நிறைந்த சூழலிலும் நம்பிக்கையுடன் செயல்படும் திறன் மிக அவசியம். நம்பிக்கையுடன் செயல்படும் தலைவர்கள் அவர்களின் திறன்கள் மீது அதீத நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பர். நம்பிக்கையுடன் செயல்படும் அதே சமயம், மிக அதிகமான நம்பிக்கையும் ஆபத்தானதே! சரியான அளவுகோலில் நம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியை தரும்.

4. நிதர்சன சோதனை: தங்களைச் சுற்றி நடக்கும் சூழலுக்கு ஏற்ப செயல்படுதல் தலைவர்களுக்கான பண்பு. சூழலை கிரக்கிகும் தன்மை, கணிக்கும் ஆற்றல் அதற்கேற்ப முடிவெடுக்கும் திறன் ஆகியவை இவர்களின் தனித்தன்மை.

5. உத்வேகத்தை கட்டுப்படுத்துதல்: இந்த திறனின் அவசியத்தை உணர்த்தும் விதமாக மார்ஷ்மெல்லோவ் சோதனையை மேற்கோள்காட்டுவது வழக்கம். 1970 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் பிங் மழலையர் பள்ளியில் இந்த சோதனை செய்யப்பட்டது. நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகளை ஒரு அறையில் கொண்டு, அவர்கள் முன் மார்ஷ்மெல்லோவ் வைக்கப்பட்டது. இருபது நிமிடங்கள் இதை எடுக்காமல் பொறுத்திருந்தால் இன்னொரு மார்ஷ்மெல்லோவ் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. 600 குழந்தைகளில் சிலர் உடனே அதை எடுத்க்கொண்டனர், மீதி உள்ளவர்களில் 1/3 குழந்தைகள் தான் காத்திருந்தனர். சுயக்கட்டுப்பாடு மற்றும் மகிழ்ச்சியை தள்ளிப்போடும் சக்தி இவற்றை இது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில வருடங்கள் கழித்து பதின்பருவத்தில் இவர்களை கண்காணித்ததில், மனஅழுத்தத்தை சரியாக ஆளும் தன்மையும், திட்டமிடுதல், சூழலுக்கேற்ப செயல்படும் திறன் ஆகியவை இந்த குழந்தைகளில் அதிகம் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

ஆகவே சுயக்கட்டுப்பாடுடன் இயங்கும் தலைவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும், தற்போதைய வெற்றியில் களிப்பாகாமல், அடுத்தடுத்து இலக்கை நோக்கி செல்பவர்களாகவும் திகழ்கின்றனர்.

90% அதிக செயல்திறன் கொண்டவர்களாகக் காணப்படும் தலைவர்கள் உணர்வுசார் நுண்ணறிவு அதிகம் உடையவர்களாகவே இருக்கின்றனர் என்கிறது ஆய்வறிக்கைகள் . அதேப் போல் சிறந்து விளங்கும் நிறுவனத்தை ஆய்வு செய்தோமானால் இவற்றில் இடம்பெற்றிருக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் அதிக உணர்வுசார் நுண்ணறிவு கொண்டவர்களாகவே உள்ளனர்.

"அறிவுத் திறன் என்பது ஆறு வயதில் தொடங்கி பதினேழாவது வயதில் உச்சத்தில் இருக்கும். அதன் பிறகு இது படிப்படியாக குறையவே செய்யும். ஆனால் உணர்வுசார் நுண்ணறிவு என்பது எந்த வயதிலும் அமைத்துக் கொள்ளமுடியும், அறுபத்தைந்து வயதில் கூட இந்தத் திறனை செப்பனிட முடியும்" என்று நம்பிக்கையூட்டுகிறார் நடேசன்.

இந்தத் துறையில் ஆர்வம் குறித்து...

கொலோம்போ நகரத்தில் தான் என் பள்ளிப் படிப்பு. கணக்காளர் படிப்பு, நிதி நிர்வாகம் பயின்ற போதும், நரம்பியல் அறிவியல் மற்றும் உளவியல் ஆகியத் துறை மீது ஈர்ப்பு இருந்தது. பயிற்சியாளராக என் வாழ்கையை அமைத்துக்கொண்ட பின், உள விவரக்குறிப்பு, நடவடிக்கைப்பூர்வமான பகுப்பாய்வு, நரம்பியல் உளவியல் சார்ந்த பயிற்சி என்று பல வகை நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றேன். உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் நேர்மறை உளவியல் ஆகியவற்றிலும் சான்றிதழ் பெற்றுள்ளேன்.

வலுவான இந்தியாவில் திறன் படைத்த நிர்வாகத் தலைவர்களை உருவாக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறும் நடேசன் பல முன்னணி நிறுவனங்களுக்கு தலைமை பயிற்சி அளித்துள்ளார்.

"வெற்றி பெற வேண்டுமானால், தோல்வியின் பயத்தை விட வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே அதிகம் வேண்டும்." என்ற பில் காஸ்பி அவர்களின் மேற்கோளை சொல்லி நம்மிடம் விடை பெறுகிறார் நடேசன்.

இந்த புத்தாண்டில் நாமும் உணர்வுசார் நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள முடிவெடுக்கலாமே! 

இணையதள முகவரி : Chiron Academy, Facebook