’புக் மை ஷோ’ - பொழுது போக்கு நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை! 

1

பல திரை அரங்குகள் கொண்ட நிறுவனங்களான எஸ்பிஐ சினிமாஸ், பீ வீ ஆர் சினிமாஸ் ஆகியவற்றோடு ஒப்பந்தங்கள் புரிந்ததில் இருந்து பாகுபலி மூலம் கொடிகளை குவித்தது, எட் ஷீரன், ஏ.ஆர்.ரஹ்மான், ஜஸ்டின் பீபர் போன்ற இசை பிரபலங்களின், இசை நிகழ்சிகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்தது என சென்ற வருடம் புக் மை ஷோவிற்கு அற்புதமான ஒரு ஆண்டாக அமைந்தது.

1999ல் துவங்கிய புக் மை ஷோ, தற்போது ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு விற்பனை செய்யும் துறையின் முன்னோடியாக திகழ்கிறது என்று புக் மை ஷோ நிறுவனர் மற்றும் முதன்மை அலுவலர் ஆஷிஷ் ஹெம்ரஜனி நமது ’யுவர் ஸ்டோரி டெக் ஸ்பார்க்ஸ் 2016’ல் பேசுகையில் குறிப்பிட்டார்.

“புக் மை ஷோ யோசனை துவங்கியது புகைத்தல் மற்றும் மது காரணமாக. எனக்கு புகைக்கும் பழக்கம் கிடையாது. ஆனால் புகைப்பவர்களோடு எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இருந்தது இல்லை. நான் விளம்பரத் துறையில் வேலை செய்தேன். அங்கு அனைவரும் தேநீர் மற்றும் புகைப்பது என்பது வழக்கம். அப்போது ஜே வால்ட்டர் தாம்சன் ஏன் புகைப்பதை அனுமதிக்க வேண்டும் என யோசிப்பேன். ஐடிசி நிறுவனம் அவர்களது வாடிக்கையாளர் என்பதை நான் அப்போது உணரவில்லை. எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. எனவே விடுமுறை எடுத்துக்கொண்டேன்.”

ஆஷிஷ்ஷின் ஜே டபிள்யூ டீ கதை முடிந்திருக்கலாம். ஆனால் அவரது புக் மை ஷோ கதை அப்போது தான் துவங்கியது. நிறுவப்பட்டதில் இருந்து பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது இந்த நிறுவனம். புக் மை ஷோ 2014 இல் மிக முக்கியமான ரூ.1000 கோடி வியாபாரம் நிகழ்த்தும் நிறுவனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. 2015-16 இல் இந்த நிறுவனம் 235.93 கோடி வருவாய் மற்றும் 113.72 கோடி நஷ்டமும் அடைத்துள்ளது.

2014-15 இல், 132.09 கோடி மொத்த வருவாயும், 46.2 லட்சம் நஷ்டமும் அடைந்துள்ளது. 2016-17 வருடத்திற்கான வரவு செலவு கணக்குகளை இன்னமும் புக் மை ஷோ தாக்கல் செய்யவில்லை. க்ருஞ்ச்பேஸ் வலைதளத்தை பொருத்த வரை $125 மில்லியன் முதலீட்டை மூன்று சுற்றுக்களில் புக் மை ஷோவிற்கு கிடைத்துள்ளது.

முடிந்த நிதியாண்டு :

தங்கள் நிறுவனத்தின் புதிய சேவைகளிலும், வளர்ச்சியிலும் இந்த ஆண்டு கவனம் செலுத்த எண்ணி, புக் மை ஷோ ஒலியை கையில் எடுத்துள்ளார்கள். அதற்காக தற்போது ஜூக் பாக்ஸ் என்ற சேவையை ஆரம்பித்துள்ளார்கள். அதற்கென்ன தனி செயலியும் உள்ளது. தற்போது வாட்ஸ்ஆப் உடன் இணைந்து பல மொழிகளுக்கும் தேவையான சேவைகளை உருவாக்கி வருகிறார்கள்.

இதன் காரணமாக, நஷ்டம் லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு சென்றாலும், டிஜிட்டல் பணபரிமாற்றம் சேவை வழங்கும் பேடிஎம் உடன் மோதல் இருந்தாலும், நிறுவனத்தின் வருமானம் 178% வளர்ச்சி கண்டுள்ளது.

கலக்காடோ தளத்தின் அறிக்கை படி, சந்தையின் 79% இன்றும் புக் மை ஷோவிடம் உள்ளது. மேலும் நெட் ப்ரமொட்டர் கோட் எனப்படும் அளவீட்டில் தற்போது 0.52%, ஜனவரி முதல் மார்ச் வரை சராசரியாக 446.9 ரூபாய் மதிப்பிலான விற்பனை ஆணையும் வைத்திருக்கிறது. ஆனால் இந்த அளவீட்டில் பேடிஎம் நிறுவனம் ரூபாய் 468.4. முன்னணியில் நிற்கிறது.

“திரையரங்கு நுழைவுச்சீட்டு விற்பனையில் பேடிஎம் நுழைந்தாலும், புக் மை ஷோ நிறுவனத்தோடு போட்டியிடுதல் சிரமாக இருக்கும். அவர்கள் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்து வைத்துள்ளனர். பேடிஎம் நிறுவனமும் தனது வாடிக்கையாளரை நன்கு அறியும் என ஒருவர் வாதிடலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் ஒரு வேலைக்கு ஒரு செயலி என்பதில் தெளிவாக உள்ளனர். எனவே ஒரே செயலியில் பல வேலைகளை செய்வது அவர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கும்,” என அந்த அறிக்கை கூறுகிறது.

புக் மை ஷோ கைய வெச்சா :

நுழைவுச்சீட்டு விற்பனை மட்டுமல்லாது உணவுத்துறையிலும் கால் பதித்துள்ளது புக் மை ஷோ. தற்போது உணவு தொடர்பான தொழில்நுட்ப தளமான ’பர்ப்’-ஐ வெறும் 6.7 லட்சச்திற்கு விலைக்கு வாங்கியுள்ளது புக் மை ஷோ.

2017 துவக்கத்தில் இந்த பேரத்தை பற்றி கூறுகையில், முற்றிலும் எங்களது துறை சார்ந்தே நாங்கள் செல்கிறோம். தற்போது பர்ப் படம் பார்ப்போருக்கும், நிகழ்சிகளுக்கு செல்வோருக்கும் கூடுதல் வசதிகளை செய்துகொடுக்க, புக் மை ஷோ விற்கு உதவும் என கூறியுள்ளது புக் மை ஷோ.

மன்சி வோரா, புக் மை ஷோவில் கையகப்படுத்துதல் துறையின் தலைவர் பேசுகையில், 

”இந்தியாவில் சினிமா பார்க்கும் அனுபவம் மாறிக்கொண்டே வருகின்றது. மேலும் சினிமா செல்லுதல் என்பது ஒரு சமூக விஷயமாக மாறிவருவதால் அதனோடு உணவும் இணைந்தே இருக்கின்றது. இந்த தேவையை பர்ப் சரியாக பூர்த்தி செய்கின்றது. மேலும் கூப்பன் மற்றும் பணம் திரும்பப்பெறும் சலுகையில் பர்ப் இறங்கியுள்ளது” என்றார்.

2017 இல் நான்கு நிறுவனங்களை கையகப்படுத்தியது புக் மை ஷோ. பர்ப்பை தொடர்ந்து ஷார்ஜாவை மையமாகக் கொண்டு தேவைக்கு ஏற்றவாறு உயர்தர காணொளிகள் வழங்கும் நிறுவனமான ’என்பியூஷன்’, வாங்கியுள்ளது. இதனை ஜூக் பாக்ஸ்சுடன் இணைத்துள்ளது.

ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட சினிமா நுழைவுச்சீட்டு விற்கும் ’மஸ்திடிக்கெட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் வாங்கியுள்ளது. அடுத்ததாக புனேவை மையமாக கொண்ட டீ ஐ வோய் தளமான டவுன்ஸ்கிரிப்ட் ஐயும் வாங்கியுள்ளது.

பொழுது போக்கின் பரிமாண வளர்ச்சி :

ஜியோவின் வளர்ச்சி மற்றும் அரசின் டிஜிட்டல் நடவடிக்கைகள் காரணமாக பொழுது போக்கிற்காக இணையத்தை நாடும் மக்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. மேலும் கட்டண குறைவு அதிகமான மக்களை சென்றடைதல் ஆகிய காரணிகளால் பல துறைகள் வளர்ந்துள்ளன. 

இந்தியாவில் தற்போது 500 மில்லியன் மக்கள் இணையத்தை பயன் படுத்துகின்றனர். அவர்களில் 300 மில்லியன் மக்களிடம் நவீன் தொலைபேசிகள் உள்ளன. 180 மில்லியன் மக்கள் பணபரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் செய்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் 25% இணையத்தின் விரிவாக்கத்துடன் நிகழ்ந்துள்ளது. எனவே வரும் காலங்களில் இதன் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும் எனலாம்.

புக் மை ஷோவின் நிதி அலுவலர் மிதேஷ் ஷா பேசுகையில்,

“ஆன்லைன் முறையில் நுழைவுச்சீட்டு வாங்குவது அதிகரித்து வருகின்றது. இதற்கான சந்தையும் பெரிதாகி வருகிறது. ஆனால் வளர்ச்சிக்கு வாய்ப்பும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த பாஹுபலியின் வெற்றியை நாம் பார்த்தோம். பிராந்திய மொழி திரைப்படங்களை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று விட்டது எனக் கூறலாம். இன்னமும் சொல்லப்போனால் அந்த திரைபடத்தின் காரணமாக தெலுங்கு மொழி திரைப்படங்கள் வளர்ச்சி 50% அதிகரித்துள்ளது புக் மை ஷோவில் என்றார்.

திரைபடங்கள் அல்லாத இடங்களிலும் புக் மை ஷோ வென்றுள்ளது எனலாம். இந்தியாவில் நிகழும் எந்த ஒரு பெரிய இசை நிகழ்ச்சியானாலும் அதற்கு நுழைவுச்சீட்டு புக் மை ஷோ மூலமாக விற்பனையாகின்றது. கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் மிகப்பெரிதாக வளர முயற்சித்து வருகின்றது புக் மை ஷோ.

எதிர்கால திட்டம் :

அடுத்த கட்டமாக டிஸ்னி அலாதின் திரைப்படத்தை இந்திய மக்களுக்கு ஏற்ற வகையின் நாடகமாக ஏப்ரல் 20 அன்று மும்பை என் சீ பீ ஏ வில் அரங்கேற்ற உள்ளது புக் மை ஷோ. மேலும் டெல்லி மற்றும் ஹைதராபாத்திலும் இந்த நாடகம் அரங்கேற உள்ளது.

இதற்கு அப்பாற்பட்டு புக் மை ஷோவின் திட்டம் வாடிக்கையாளர் அனுபவத்தினை மேம்படுத்துவது மற்றும் புதிய வகை பொழுது போக்குகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது.  மேலும் அவர் கூறியது

“இந்த துறையில் எங்கள் கூட்டாளிகளோடு இணைந்து பணியாற்றி மேலும் வளர முயற்சிக்கிறோம். அடுத்ததாக இன்னும் ஆன்லைன் மூலமாக நுழைவுச்சீட்டு பெறுவதை எளிதாக்கவும் முயற்சிக்கிறோம்,” என்கிறார். 

கட்டுரையாளர் : சம்பத் | தமிழில் : கெளதம் தவமணி

Related Stories

Stories by YS TEAM TAMIL